புதன், 5 நவம்பர், 2025

‘அது’ தெரியும்! ‘இது’க்குப் பதில் தெரியாதது ஏன்?

கோள்கள், நட்சத்திரங்கள், பஞ்சபூதங்கள்[மூலங்கள்] என்று உருமாற்றம் பெறும் அனைத்துமே அழியக்கூடியவதான்[ஆயுள் மாறுபடலாம்] என்கிறது அறிவியல்.

பிறவற்றைப்[+உயிரினங்கள்] போல மனிதனும் அழிவைச் சந்திப்பவன்தான்.

ஆறறிவு வாய்த்ததன் காரணமாக, உடம்பு அழிந்த பிறகும் நிரந்தரமாக வாழ ஆசைப்பட்டான்.

அதன் விளைவு.....

தன் உடம்புக்குள்ளே ‘ஆன்மா’[ஆவியோ உயிரோ ஏதோ அழியாத ஒன்று] இருப்பதாகக் கற்பனை செய்தான்[குறிப்பாக மதவாதிகள்].

அது நீரில் கரையாது; நெருப்பில் அழியாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டான்.

அதில் மனநிறைவு பெறாமல், அழிவே இல்லாததும் அனைத்திற்கும் மேலானதுமான கடவுளின் ஒரு கூறு என்று கதைத்தான்.

சில பிரகஸ்பதிகள்[மேதைகள்], அது தனித்து இயங்குவது; கடவுளைப் போலவே அழிவில்லாதது என்றார்கள்.

“ஆன்மாவின் இருப்புக்கு அறிவுபூர்வமாக ஆதாரம் தர இயலுமா?” என்று கொஞ்சம் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேட்டபோது,  “தருவது மனித அறிவால் இயலாது. கருணை வடிவான கடவுள் மட்டுமே அது குறித்து அறிவார்” என்று மழுப்பினார்கள்.

“இதற்கு ஆதாரம் தர இயலாது என்றால், இந்த மனித அறிவைக்கொண்டு ஆன்மா உண்டு என்றும், அது அழியாதது என்றும் சொன்னது/சொல்வது எப்படி?” என்று கேட்கப்பட்டபோதெல்லாம் பதிலே இல்லை.

பாவம் மனிதன்! தன்னை நிரந்தரம் ஆக்கிக்கொள்ள அவன் படாதபாடெல்லாம் படுகிறான்!!

                                       *   *   *   *   *

***இணையத்தில் ஆன்மா குறித்து ஏராள வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்துச் சிந்திக்கத் தூண்டுவதே இப்பதிவின் நோக்கம்.

செவ்வாய், 4 நவம்பர், 2025

பொது இடத்தில் பாதுகாப்பாகக் காதல் பண்ணுவது எப்படி?[பொழுதுபோக்கு]

கோவையில், கல்லூரி மாணவி ஒருவர் ஒடுக்குப்புறமானதொரு இடத்தில்[மனித நடமாட்டம் இல்லாத விமான நிலையத்தின் பின்புறம்] காதலருடன் காதல் கலை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தபோது, தறுதலைகளால் வன்புணர்வுக்கு ஆளான அசம்பாவிதத்தைச் சுட்டிக்காட்டி அண்ணாமலையார், வானதி அம்மையார், நயினார் நாகேந்திரனார் போன்ற அரசியல் பெரும்புள்ளிகள், ‘தி.மு.க.’ அரசைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்[மாநிலமெங்கும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள்].

அவர்களைப் பாராட்டுவதோடு ‘தி.மு.க.’ அரசின் மெத்தனப்போக்கை நாமும் கண்டிக்கிறோம்.

அதே வேளையில், இறைவனால் அருளப்பட்டதும், இனவிருத்திக்கு ஆதாரமாக இருப்பதுமான காதலை வளர்ப்பது தங்களின் கடமை என்பதை உணர்ந்து செயல்படும் இளம் பெண்களுக்கு[+கல்லூரி மாணவிகள்], பாதுகாப்பாகக் காதல் பண்ணுவது குறித்து கொஞ்சம் ஆலோசனை வழங்க விரும்புகிறோம்.

ஓ............................................குமரிகளே,

மனம் கவர்ந்த காதலனுடன், ஒதுக்குப்புறம் தேடி, எங்கெல்லாமும் அலைய வேண்டாம். அந்த ஒதுக்குப்புறம் காலிகளும், கயவர்களும், போதை ஆசாமிகளும் நடமாடுகிற இடம் என்பதை மறந்து, நீங்கள் கடமையை நிறைவேற்றுவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்துவதால்,  பல இன்னல்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

எனவே, மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதி போன்ற பொது இடங்களிலேயே நீங்கள் காதல் வளர்க்கலாம். அதற்குத் தேவை ஒரு கார் மட்டுமே. வாடகைக் காராகவும் இருக்கலாம்(உங்களின் உள்ளம் கவர்ந்தவரே  ஓட்டுநர்). புனிதமான காதல் வளர்ப்பில் ஈடுபடும்போது பணச் செலவு ஒரு பொருட்டல்ல. 

நீங்கள் பயன்படுத்தும் காரில் நல்ல கறுப்பு நிறத்தில் சன்னல் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது அவசியம்; பணியாற்றும்போது பின்னிருக்கைக்கு இடம்பெயர்வது புத்திசாலித்தனம். 

பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் காரை நிறுத்தி, நிதானமாகக் காதல் வளர்ப்பில் ஈடுபடலாம்.

நீண்ட நேரம் இந்தக் கடமையில் ஈடுபட நேரிட்டால், காரை நகர்த்திச் சற்றுத் தொலைவில், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் அதை நிறுத்தி உங்களின் பணியைத் தொடரலாம்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்தால் காவல்துறைக்காரன் கார்க் கதவைத் தட்டி இடையூறு விளைவிப்பான் என்பதே அதற்கான காரணம்.

வாழ்க காதல்! தொடர்க இளசுகளின் காதல் வளர்ப்புப் பணி!!