வியாழன், 27 நவம்பர், 2025

தைராய்டு புற்று நோய்... ஒரு ஊசி மருந்து ரூ3.55 லட்சமாம்? அடக் கடவுளே!

பிரபல கன்னட நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் ராய், தனது 55ஆவது வயதில் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புற்று வயிற்றுக்கும் பரவியதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார் என்பது செய்தி*

அவரின் மறைவு குறித்த செய்தியில், தைராய்டு சிகிச்சைக்கான மருத்துவச் செலவு பற்றிய விவரமும் கீழ்க்காணும் வகையில் வெளியாகியிருந்தது.

ஒரு ஊசிக்கு ரூ.3.55 லட்சம் செலவாகும். ஒரு சுழற்சிக்கு மூன்று ஊசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன, மொத்தம் ஒவ்வொரு 63 நாட்களுக்கும் ரூ.10.5 லட்சம் செலவாகும். முழுமையான சிகிச்சைக்கு ரூ.70 லட்சம்வரை தேவைப்படும்.

இப்படி லட்சக்கணக்கில் செலவு செய்தாலும், தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் உயிர்பிழைப்பது அரிது என்னும் நிலையில்***, சாமானியர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கே வழியில்லை என்பது மிகப் பெரிய சோகம்.

ஆகவே, “அயல் கிரக ஆராய்ச்சி, உயிர்களைப் பலிகொள்ளும் கொடூர ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது, சொகுசுப் பயணத்திற்கான நவீன வாகனங்களை உற்பத்தி செய்வது போன்றவற்றிற்கு அறிவியலைப் பயன்படுத்தாமல், புற்றுநோய் போன்ற எளிதில் குணப்படுத்த இயலாத நோய்கள் குறித்த ஆராய்ச்சிக்கு அதை பயன்படுத்துவது மனித இனத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அமையும்” -இப்படிச் சொல்ல வேண்டியவர்கள் அறிவியல் ஆய்வில் முன்னணி வகிக்கும் நாடுகளின் ஆட்சியாளர்கள்.

*https://www.msn.com/en-in/health/other/harish-rai-death-kgf-actor-passes-away-at-55-after-battling-cancer/ar-AA1PUnWK?ocid=msedgdhp&pc=NMTS&cvid=690def20f09044e496834cf6724e90b2&ei=54

                                 *   *   *   *   *

***//தைராய்டு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதைத் திறம்பட நிர்வகிக்கலாம். தைராய்டு கோளாறுகள் உள்ளவர்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைச் சீராகப் பராமரிக்கத் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்// -கூகுள் AI 

புதன், 26 நவம்பர், 2025

'மசுரு' விதி!

இடி மின்னலுடன் மழை பொழிகிறது. தன் இருப்பிடத்திலிருந்து ஒருவன் வெளியே வருகிறான்.  சக்தி வாய்ந்த மின்னல் பளீரிட, அவன் பார்வை பறி போகிறத

பேய் மழையின்போது, மிதி வண்டியில் செல்கிற ஒருவன், வேரோடு சாய்ந்த ஒரு மரத்தடியில் சிக்கி உயிரிழக்கிறான்.

மின்னல் அடிக்கும்போது ஆறறிவுள்ள ஒரு மனிதன், தன் இருப்பிடத்திலிருந்து போதிய பாதுகாப்பின்றி ஏன் வெளியே வரவேண்டும்? மின்னலால் ஏற்படும் அபாயத்தை அவன் அறியாதவனா? அறிந்திருந்தும் தவறிழைத்துத் தன் பார்வையை அவன் பறி கொடுத்தான் என்றால், அதற்குக் காரணம் ’விதி’ என்கிறோம்.

பருவ காலங்களில் மழை பெய்வதும், இடிப்பதும், மின்னுவதும் இயற்கை. இடம் விட்டு இடம் பெயர்வது மனிதனுக்குள்ள செயல்பாடுகளில் ஒன்று. அது இயற்கையாக நிகழ்வது. இது மனித மூளையால் செயல்படுத்தப்படுவது.

மின்னலடித்ததும், ஒருவன் இருப்பிடத்திலிருந்து வெளியே வந்ததும் இரு வேறு நிகழ்ச்சிகள். இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தன. அவ்வளவுதான். மின்னலடித்தபோது ஒருவன் வெளியில் வந்ததோ அல்லது, அவன் வெளியே வந்த அதே கணங்களில் மின்னல் பளிச்சிட்டதோ முழுக்க முழுக்கத் தற்செயல் நிகழ்ச்சிகள். இங்கே விதி எப்படி நுழைந்தது?
யார் நுழைத்தது?

கடவுளா?

ஒருவன் செய்த பாவங்களுக்குத் தண்டனையாக அவன் பார்வையைப் பறிப்பதற்குக் கடவுள் மின்னலைத் தோற்றுவித்தாரா?

ஒரு தனி மனிதனைத் தண்டிப்பதற்காக ஒரு மின்னலா? மின்னலடிக்கும் போது அவன் வெளியே வந்தது கடவுளின் செயலா?

சரியாக மரம் சாய்கிற நேரத்தில் மிதி வண்டிக்காரனை அங்கே கொண்டு சேர்த்ததும் அவர்தானா?

பிரபஞ்ச வெளியில் கோள்கள் ஒன்றோடொன்று மோதி வெடித்துச் சிதறுவது..... எண்ணற்ற கடல் கொந்தளிப்புகளால் அவற்றில் இடம் பெற்ற பொருள்களும் உயிர்களும் தம்முள் மோதிக் கொள்வது.... காற்று, நெருப்பு போன்றவற்றின் அசுரத்தனமான செயல்பாடுகளால் பொருள்களும் உயிர்களும் அலைக்கழிக்கப்பட்டுத் தம்முள் இடிபடுவது என்றிப்படி 'வெளி’யில் இடம்பெறும் விபத்துகள் எண்ணில் அடங்காதவை.

இவை எல்லாமே கடவுளால் உருவாக்கப்பட்ட ‘விதி’ காரணமாக நடை பெறுகின்றனவா?

அளவிடற்கரிய அண்டவெளியில் இடம்பெற்ற அத்தனை பொருள்களும் உயிர்களும் விதிக்கப்பட்டபடிதான் தோன்றி இயங்கி மறைகின்றனவா?

ஒரு மரம் எப்போது எப்படி, எங்கே முளைக்க வேண்டும்? எவ்வளவு காலத்துக்கு, எவ்வாறெல்லாம் பராமரிக்கப்பட்டு வளர வேண்டும். எம்முறையில் அழிய வேண்டும் என அந்த மரம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் அந்த மரத்திலேயே எழுதி வைக்கப்படுகின்றனவா?

அத்தனை மரங்களுக்குமா? புல், பூண்டு, தூசு, தும்பு, அணு, அணுப்புள்ளி என்று எல்லாவற்றுக்குமா? 

ஏதேனும் ஒரு விலங்கின் தலையில் உருக்கொண்டு, தோன்றி, வளர்ந்து, உதிர்கின்ற 'மயிருக்கும்’கூட தலை எழுத்து உண்டா? 

இவ்வாறாக எழுப்பப்படும் எண்ணற்ற கேள்விகளுக்குச் சரியான விடை அறிந்து சொன்னவர் எவருமில்லை.

சொல்லப்படும் பதில்கள் எல்லாம் அனுமானங்களே. 

அனுமானங்களைப் பதில் ஆக்குவதும், அவற்றை ‘உண்மை’ என நம்ப வைப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

எதுவும் புரியாத நிலையில், “புரியவில்லை” என்று ஒத்துக் கொள்வது பெருந்தன்மை.

விதி மீதான நம்பிக்கைதான் அடுக்கடுக்கான மூடநம்பிக்கைகளுக்கு மனிதன் அடிமையாகக் காரணமாக அமைந்தது என்பதை நாம் மறத்தலாகாது.

மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும், நோய், பகைமை, வறுமை, நிலையாமை போன்றவற்றால் விளையும் துன்பங்கள் அளவிடற்கரியவை.

அத்துன்பங்களைப் போக்கி, அமைதியாக..... இன்பமாக வாழ்வதற்கான வழி வகைகளைக் கண்டறிய இந்த அறிவு பயன்பட வேண்டும்; கடவுள், விதி, தலை எழுத்து என்று ஏதேதோ சொல்லி, அவை பற்றிக் கற்பனைக் கதைகள் படைத்து, பொய்கள் பரப்பி இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை வீணடிப்பதற்கு அல்ல.