வியாழன், 4 டிசம்பர், 2025

‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!

பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.

அவரின் இறப்பு வருந்தத்தக்கது என்றாலும் இது இயற்கை நிகழ்வுதான் என்பதை நினைவுகூர்ந்து ஆறுதல் பெறலாம்.

“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.

அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.

இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away

புதன், 3 டிசம்பர், 2025

காலங்காலமாய்ச் 'சொர்க்க வாசல்' காட்டுகிறார்கள்! 'சொர்க்கம்' காட்டுவது எப்போது?!

திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி திருமலையில் நேற்று அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவர் கூறியதாவது:

//ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி தினம். இதற்காக 13ஆம் தேதியிலிருந்து 22-ஆம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஜனவரி 13ஆம் தேதி அதிகாலை 2:00 மணிக்குச் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது// https://temple.dinamalar.com].

அடியேனும்[போலி நாத்திகன்] திருமலை வெங்கடேசப் பெருமாளின் ஆயுட்காலப் பக்தன் என்பதால், மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போதே ஆனந்தப் பரவசத்துக்கு உள்ளானேன்.

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் என்னுள் அளப்பரிய பெரும் சோகம் பரவியது. காரணம்.....

கடந்த கொஞ்சம் ஆண்டுகளாக, “சொர்க்கத்தின் வாசலை மட்டும் காட்டுகிற திருப்பதி தேவஸ்தானத்தார் சொர்க்கத்தை எப்போது காட்டப்போகிறார்கள்?” என்று கேட்டுக் கேட்டுக் கேட்டு என் மனம் வெகுவாக ஏங்கியதுதான்.

கோரிக்கை வைத்தாலும் அதை அவர்கள் ஏற்பது சந்தேகமே என்பதால், இந்த இருள் மனத்தவனின் வேண்டுகோளை நிறைவேற்றுமாறு அருள் வடிவான திருவேங்கடவனின் திருவடிகளின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்[மானசீகமாக].

போற்றி போற்றி திருப்பதி வெங்கடாசலபதி போற்றி! அவரின் திருவடிகள் போற்றி!!