வியாழன், 20 செப்டம்பர், 2012

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ‘தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

சத்துக் கதையோ சொத்தைக் கதையோ, எத்தனை கதை படிச்சாலும் ‘தாகம்’ தணியலீங்க!

குமுதத்துக்குக் ‘குட்டு’! வாரமலருக்கு ‘ஷொட்டு’! ராணிக்குத் ’தட்டு’! விகடனுக்கு... ‘ஐயோ பாவம்!’!

‘வெண்பாவுக்குப் புகழேந்தி. விருத்தப் பாவுக்குக் கம்பன்’னு சொல்ற மாதிரி, ‘ஒரு பக்கக் கதைக்குக் குமுதம்’னு சொன்ன காலம் ஒன்னு இருந்ததுங்க.

இப்போ எல்லாம் ....................

‘இருக்கிற ‘கொஞ்சம்’ அறிவே போதும். குமுதம் ஒரு பக்கக் கதை படிச்சி முட்டாள் ஆக வேண்டாம்”னு எல்லாரும் சொல்றாங்க!

ஒரு கூலித் தொழிலாளி. நாள் முழுக்க உழைச்சிச் சம்பாதிச்சதையெல்லாம் குடிச்சே தீர்த்துட்டுக் கொஞ்சம் சில்லரை மட்டும் பெண்டாட்டியிடம் கொடுப்பான். அதை வெச்சி அவ என்ன பண்ணுவா பாவம்? கொஞ்சம் கஞ்சிதானே காய்ச்ச முடியும்.

நாக்குச் செத்துப் போன அந்தக் குடிகாரன், ”என்னடி பண்றே, வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியாதா?”ன்னு அவளைக் கை நீட்டி அடிச்சுடறான்.

அதுக்கு அவள் எப்படி பதிலடி கொடுக்குறா தெரியுங்களா? கையால அல்ல; வாயாலதான்.

“உனக்கு ருசியா சமைச்சுப் போடணும்னா ஒரு கள்ளப் புருசனத் தேடிகிட்டாத்தான் முடியும்”

அதுக்கப்புறம் அவன் வாயே திறக்கல; கையும் நீளுல.

இது ஒரு கதைங்க [ஆர்.சி.சம்பத் எழுதினது]. அதுவும் குமுதத்தில் வந்ததுன்னு சொன்னா நம்புவீங்களா?

நூறு பக்கத்துக்கு ஒரு கதை எழுதி, நிகழ்த்த முடியாத சாதனையை ஒரு ‘ஒரு பக்கக் கதை’யால சாதிக்க முடியும்னு தெரிஞ்சிட்டீங்களா?

இந்த மாதிரி கதைகளெல்லாம் அந்தக் காலக் குமுதத்தில் அடிக்கடி வருமுங்க. [நான் அந்தக் கால ஆசாமின்னு முடிவு கட்டிடாதீங்க. நேத்துப் பொறந்த பையன்.  இதெல்லாம் என் தாத்தா சொல்லிக் கேட்டதுங்க].

இப்ப வர்ற கதையை, முதல் தடவை படிக்கும்போது “நல்லாத்தான் எழுதியிருக்கார்”னு சொல்லுவீங்க. அதையே மறுபடியும் படிச்சா, “அப்படியென்ன புதுசா சொல்லிட்டார்?” என்பீங்க. இன்னுமொரு தடவை படிச்சிக் கொஞ்சம் யோசனை பண்ணினீங்கன்னா, “சீ...இதெல்லாம் ஒரு கதையா?”ன்னு கடுப்படிப்பீங்க.

நான் சொன்னது  நெசமா இல்லியாங்கிறது இந்த வாரக் குமுதத்தில் வெளியான ரெண்டு கதையையும் கேட்டீங்கன்னா தெரிஞ்சி போயிடும்.

முதல் கதை: சாந்தியின் சாந்தி. எஸ்.முகமது யூசுப் எழுதினது.

ஒருத்தர் தன் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிட்டிருக்கார்.

தரகர் ரெண்டு ஜாதகம் கொண்டு வர்றார்.

ஒரு ஜாதகர் மளிகைக் கடை நடத்தி மாசம் ஐம்பதாயிரத்துக்கு மேல் சம்பாதிப்பவர். இன்னொருத்தருக்கு தனியார் கம்பெனியில் கிளார்க் வேலை. மாசம் பத்தாயிரம் சம்பளம்.

அப்பா, தன் மகளோட விருப்பத்தைக் கேட்கிறார். அவ சொல்றா: “மளிகைக் கடைக்காரர் ராத்திரி பதினொரு மணிக்குத்தான் வருவாரு. சினிமா, பார்க், பீச்சுன்னு எங்கயும் போக முடியாது. என் சந்தோசம் போயிடும்”.

இந்தக் கதையைக் கேட்டவுடனே நீங்க என்ன நினைச்சீங்க? ’அந்தக் குட்டி எடுத்த முடிவு ரொம்பச் சரி’ன்னுதானே?

நீங்க கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா............

”இந்தப் பத்தாயிரம் சம்பளம் என்னத்துக்கு ஆனது? வீட்டு வாடகைக்கே பத்தாதே. அப்புறம் எங்கே கல்யாணம் கட்டிகிட்டு ஜாலி பண்றது?”ன்னு கேட்பீங்களா இல்லியா?

மளிகைக் கடை, ஜவுளிக்கடை, ஓட்டல் கடைன்னு தொழில் பண்றவங்க எல்லாம் , புதுப் பொண்டாட்டியைக் காயப் போடுற காரணத்தால கல்யாணமே கட்டிக்க வேண்டான்னு சொல்றாரா கதாசிரியர் யூசுப்?

இவங்க எல்லாம் ஒண்டிக் கட்டையாத்தான் இருப்பாங்களா? அப்பா, அம்மா, மாமனார், மாமியார்ன்னு விட்டில் இருக்கிற கிழடு கிண்டுகளைக் கொஞ்ச நேரம் கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, புதுப் பெண்டாட்டியைத் தேடிப் போய்க் கொஞ்சுவாங்களா, மாட்டாங்களா?

அப்படியே யாரும் இல்லேன்னாலும், கடையில் வேலை செய்யுற ஆட்களை நம்பித்தானாகணும். எதையும் திருடுவாங்கன்னு பார்த்தா முடியுமா? கட்டிகிட்டு வந்தவளைச் சந்தோசமா வெச்சிக்கணும்னா, இந்த மாதிரி கஷ்ட நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும்னு அவங்களுக்கெல்லாம் தெரியாதா?

என்னவோ போங்க. இந்த ஒ.ப.கதை எழுத்தாளர்களுக்கு நம்ம காதில் பூ சுத்துறதே வழக்கமா போச்சி. பத்திரிகை ஆசிரியர்களும் அவங்களுக்கு உடந்தையா இருக்காங்க. இவங்க மாறவே மாட்டாங்களா?

அடுத்த கதையைக் கேட்டீங்கன்னா இன்னும் சூடாயிடுவீங்க!

கதை: வாழை மரம். கதாசிரியர்:கே. கணேச மூர்த்தி.

ஒரு மகன் தன் அப்பாகிட்ட, “உங்களுக்கு எழுபது வயசாச்சி. ஒன்னுமே சேமிக்கலையே?” அப்படீன்னு கேட்கிறான்.

“ஒரு வழை மரம், இலை, பூ, காய், கனி பட்டை எல்லார்த்தையும் தானமா தருது. அது மாதிரி நானும் என்னையே தந்திருக்கேன்’ன்னு சொல்றார்.

இதோட கதை முடிஞ்சிடிச்சி தாங்க?

ரெண்டு துக்ளியூண்டு பத்தியில் முடிஞ்சி போன இந்தத் ‘துணுக்குக் கதையை [கதைதானா?] ஒரு பக்கக்கதையா இழுத்துடறார் கதாசிரியர்!

இந்தத் தத்துவத்தைப் புரிய வைக்கத்தான் பெரியவங்க கல்யாணப் பந்தலில் வாழை மரம் கட்டுற பழக்கத்தை ஏற்படுத்தினாங்க. மரம் கன்று ஈனுவது மாதிரி உனக்கு நான் உயிர் கொடுத்தேன். நீதான் புத்தியா பொழைச்சிக்கணும் அப்படி இப்படின்னு  இழுக்கிறாருங்க கதையை!

‘பளிச்’னு ஒரு மின்னல் அடிச்ச மாதிரியும் கதை சொல்லல.

கதைத் தலைப்பாவது ரசிக்கும்படியா இருக்கா?

இல்லீங்களே.

வாழைமரம்! ஒன்னாங்கிளாஸ் பாடப் புத்தகத்தில் இருக்கிற ஒரு சின்னக் கட்டுரையோன்னு பார்த்ததும் நினைச்சங்க.

‘ஒரு பக்கக் கதை’ன்னு குறிப்பிடாம உரையாடலும் சேர்க்காம விட்டா இது ஒரு கட்டுரைதாங்க. ஒரு தடவை படிச்சிப் பாருங்க.

                      *                                          *                                       *

‘ஓஹோ’ன்னு வளர்ந்திட்டிருந்த ஒரு பக்கக் கதை இலக்கியம் இப்படிச் சிதைஞ்சி சீரழிஞ்சிட்டு வருதேன்னு நான் அடிக்கடி கவலைப்படுறது உண்டுங்க. இந்தக் கதைகளைப் படிச்சதும் என் கண்களில் ரெண்டு சொட்டுக் கண்ணீரே வந்துடிச்சி!

இந்த நேரத்தில், ’ஆர்.லதா’ [புள்ளமங்கலம்]ன்னு ஒரு பொண்ணு, ஆறுதலா என் முதுகில் தட்டிக் கொடுத்து, ’கூடு கலைத்தவன்’னு நான் ஒரு கதை எழுதியிருக்கேன். படிங்க அறுவை. உங்க புண்பட்ட மனசுக்கு ஒத்தடம் கொடுத்த மாதிரி இருக்கும்’ன்னு சொல்லி,  தினமலர் ’வார மலரை’க் [16-09-2012]கொடுத்திச்சி.

விவாகரத்து வாங்கித் தருவதில் புகழ் பெற்ற ஒரு வக்கீலுக்கு வயசு அறுபது ஆகுது.

புள்ளைகளும் பேரப் புள்ளைகளும் சேர்ந்து அவரோட மணி விழாவுக்கு ஏற்பாடு பண்றாங்க. ஆனா, அவரு அறுபதாம் கல்யாணமே வேண்டாங்குறார்.
”ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகளைப் பிரிச்சவன் நான். அப்படிப்பட்ட நான், என் பெண்டாட்டியோட பிரியமா வாழ்ந்து அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிறது எல்லாருக்கும் வயித்தெரிச்சலை உண்டுபண்ணுமே”ன்னு காரணமும் சொல்றார்.

’தொழில் தர்மம்’னு சொல்லிகிட்டு, திருடர்களுக்கும் கொள்ளைக்காரங்களுக்கும் கொலைகாரர்களுக்கும் வாதாடுற வக்கீல்களுக்குச் சூடு கொடுத்த மாதிரி இல்லை?

கதையை, எதார்த்தமா சுவையா சொல்லியிருக்கார் லதா.

”இப்படி இன்னும் நிறையக் கதைகள் எழுதுங்க”ன்னு லதாவை வாழ்த்தி, நன்றியும் சொன்னேங்க.

                            *                                       *                                      *

“ராணி’ பத்திரிகை, புதுமுக எழுத்தாளர்களுக்குப் புகலிடம் தருது. அதை எப்பவும் படி. நீயும் ஒரு கதாசிரியர் ஆகலாம்”னு என் தாத்தா அடிக்கடி சொல்வார்.

இந்த வார ராணி [23-09-2012] படிச்சேன்.

‘ரோசியும் பூனைக் குட்டியும்’னு ஒரே ஒரு கதைதான். ‘கலாவிசு’ எழுதினது.

தலைப்பைப் பார்த்தா, குழந்தைகளுக்கானதுன்னு தோணும். பெரியவங்களுக்கும் பாடம் கற்பிக்கிற கதை இது.

ராமுவுக்கு ஒரு அணில் குட்டி தோழன். ‘ரோசி’ன்னு அதுக்குப் பேர் வெச்சிருக்கான்.

ஜன்னல் கிட்ட சோறு வச்சா அது தின்னுட்டுப் போகும்.

ஒரு நாள், அது சோத்துப் பருக்கை சாப்பிடும் போது, வீட்டில் வளர்ற பூனை பக்கத்தில் வர, அது பயந்து ஓடிடுது.

ராமு பூனையைக் கண்டபடி திட்டிடறான்.

அன்னிக்கிருந்து, பூனை சோறு சாப்பிட மாட்டேங்குது. அதுக்குத் தட்டில் வெச்ச சோறு அப்படியே இருக்குது.

அப்புறம், பூனை பட்டினி கிடக்குறதைப் பார்த்துட்டு, அணில் வந்து பூனைக்கு வெச்ச சோத்தைச் சாப்பிட்டிச்சாம். பூனையும் சாப்பிட்டிச்சாம்.

ரெண்டும் சேர்ந்து சாப்பிடறதைப் பார்த்து ராமு சந்தோசப்படுறான்.

 நாய் பூனைக் குட்டிக்குப் பால் தர்றது.  பூனையும் எலியும் ஒன்னா விளையாடுறது மாதிரியான செய்திகளைப் படிச்சுட்டுக் கதாசிரியர் இதை எழுதியிருப்பாரோன்னு நினைக்கிறேன்.

நடைமுறை சாத்தியம் இல்லேன்னாலும், கதை மனசை உருக்குகிற மாதிரி இருக்குதானே?

பாராட்டலாம்தானே?

                                 *                                     *                                    *

கடைசியா ’விகடன்’ இதழின் [19-09-2012] நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்புக் கதை.

கதைப் பெயர்: லூஸு ஓனர்’   படைத்தவர்:ம.காமுத்துரை.

[ எச்சரிக்கை! ”நான் ஒரு லூஸு. இந்த லூஸுக்கு நீங்க ஓனரு. அதனால, உங்களுக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு” அப்படீன்னு கதையில் வர்ற ஈஸ்வரன் பாத்திரக் கடைக்காரரைப் பார்த்துச் சொல்றான். அதனாலதான் இந்தக் கதைக்கு ‘லூஸு ஓனர்’னு பேரு. மத்தபடி, கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு குழம்பி ‘லூஸு’ ஆயிடாதீங்க!]

ஈஸ்வரன் ஒரு சமையல் ஒப்பந்தக்காரர் [cotracter]. கதாசிரியர் காமுத்துரை, தன்னையே ‘சமையல் பாத்திரக் கடைக்காரரா’ உருவகம் பண்ணிகிட்டு அவரே  சொல்ற மாதிரி கதை தொடங்குது.

‘தூரத்தில் ஈஸ்வரன் வர்றதைக் கண்டதும்சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்து அவசர அவசரமா கணக்கு நோட்டுக்குள் ஒளித்து வைத்தேன்’னு கதையைத் தொடங்குறார்.

அது ஆடி மாசம் ஆனதால, ஈஸ்வரனுக்குத் தொழில் வாய்ப்பு இல்ல. இவருக்கும் வியாபாரம் டல்லடிக்குது.

இந்தச் சூழ்நிலையில், இவர்கிட்ட கடன் கேட்க வரும் சமையைல்காரங்க, ”நாங்க இல்லாம உங்க வியாபாரம்  நடக்காது. நீங்க இல்லாம எங்களுக்குப் பிழைக்க வழியில்ல”ங்கிற மாதிரி ரொம்பச் சாமர்த்தியமா பேசிக் கடன் கேட்பாங்களாம். இவரும் அவங்களுக்கு ஈடு கொடுத்துச் சமாளிப்பாராம். இதைப் பத்தி எல்லாம் சொல்றார்.

 ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற பாத்திரக் கடைக்காரருக்கும் சமையல் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையிலான உறவையும், அதனால் விளையும் சாதக பாதகங்களையும் காட்சிப்படுத்தும் நோக்கத்தில்தான் இந்தக் கதையைப் பின்ன நினைத்திருக்கிறார் காமுத்துரை.

ஆனா, அந்த நோக்கம் இந்தப் படைப்பின் மூலம் நிறைவேறவில்லை என்றே சொல்லத் தோணுது.

அதற்குப் பதிலாக எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு சமையல்காரர்களை இழிவு படுத்தியிருக்கிறார் கதாசிரியர்.

”யேண்ணே....ஒரு பத்து ரூபாய்க்காக அப்போ பிடிச்சிக் கேட்டுட்டிருக்கேன்....”  வேல்கண்ணன் என்கிற சமையல்காரர் கடைக்காரரிடம் கேட்கிறார்.

”எனக்கு இப்போ குடிக்க ஒரு 70 ரூபாயாவது தருவீங்களா?” என்று அவரிடம் கெஞ்சுகிறார் சரவணன் என்கிற சமையல்காரர்.

“எனக்கு அவசரமா வேணும்னே....”

“பக்கத்துல யார்கிட்டயாவது வாங்கிக் குடுங்கண்ணே....”

சமையல்காரர்கள் மாறிமாறி இவரிடம் கெஞ்சிக் கூத்தாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிக் கதை முழுக்க, சமையல்காரர்களைப் பழிப்பதிலும் மட்டம் தட்டுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் காமுத்துரை!

நூறு ரூபா கடன் கேட்டு வந்த ஈஸ்வரனும், “பக்கத்துக் கடையிலாச்சும் வாங்கிக் கொடுங்க” என்று மன்றாடுறான்.

இவர் சித்திரித்துக் காட்டுவது போல சமையல் ஒப்பத்தக்காரர்கள் வறுமையில் வாடுகிறார்களா என்ன?

எழுத்தாள நண்பரே,

சட்டை மடிப்புக் கலையாமல், விலையுயர்ந்த வாகனங்களில் இவர்களில் கணிசமானவர்கள் வலம் வருவதை நீங்கள் பார்த்ததே இல்லையா?

நீங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போல இவர்களில் பலரும் மாமூல் குடிகாரர்களா?

பிச்சைக்காரர்கள் போல, கடை முதலாளிகளிடம் கடன் கேட்டு அலைபவர்களா?

தயவு செய்து இனியேனும்,  கதாபாத்திரங்களைப் படைத்து உலவவிடுவதற்கு முன்னால், அவர்களைப் பற்றித் தீர விசாரித்து அறிந்து கொள்ளுங்கள்.

செய்வீர்களா?

‘நான் ஒரு நட்சத்திர எழுத்தாளன். என் படைப்பைக் கேட்டு வாங்கிப் போட பத்திரிகைகள் இருக்கின்றன என்ற மிதப்பில் எதை வேண்டுமானாலும் எழுதக் கூடாது.

மறந்துவிட மாட்டீர்களே?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


திங்கள், 17 செப்டம்பர், 2012

கடுப்பேற்றும் ’கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய 'பாக்யா'வும்!

இந்த இரண்டாவது பதிவும்  சற்றே நீண்டுவிட்டது! அடுத்து வருபவை உங்களைப் பயமுறுத்தா. துணிந்து படியுங்கள்.


கடுப்பேற்றும் ‘கல்கி’ கதைகளும் பாராட்டுக்குரிய `பாக்யா’வும்!

கதை எழுதுவது ஒரு கலை.

ஒரே ‘தம்’மில் வாசகர் கதையைப் படித்து முடிக்க வேண்டுமென்றால், கதையில் புதிய புதிய ‘உத்தி’ [techniques]களும் கலையம்சம் சார்ந்த சரளமான ’நடை’ [style]யும் கையாளப்பட்டிருக்க வேண்டும்.

அழகான அந்தப் பெண்ணை அவன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்’ என்று எழுதினால், அது கட்டுரை நடை.

அதையே கொஞ்சம் மெருகூட்டி, ‘அந்த அழகு தேவதையை அவன் கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான்’ என்றோ, ‘பார்வையால் மேய்ந்து கொண்டிருந்தான்’ என்றோ எழுதினால் அது கவர்ச்சியான ’கதை நடை’ ஆகிறது.

‘எனக்குச் சதைப் பற்றில்லாத ஒட்டி உலர்ந்த உடம்பு’ என்று எழுதும்போது, அது உடம்பு பற்றிய வெறும் விவரணம் மட்டுமே.

அதையே, ‘நான் வீதிக்கு வந்தால் வானத்தில் கழுகுகள் வட்டமிடத் தொடங்கிவிடும்’ என்று எழுதினால், வாசகரை இன்புறுத்தும் வல்லமை பெற்றதாக அத்தொடர் மாறிவிடுகிறது.

நடை மட்டுமல்லாமல்.....................

‘அப்பாவித் தனமான உன் அழகு முகம். உன் விழிகளில்தான் எத்தனை குளிர்ச்சி! மருட்சி!! நீண்ட கூந்தல். மணக்கும் சந்தன மேனி. காதோரப் பூனை முடி. கழுத்தோரச் செம்பட்டை கேசம்.........!’

இது போன்ற குட்டிக் குட்டி வருணைகளும் ஒரு சிறுகதையைச் சிறந்த படைப்பாக்கும்.

தொய்வில்லாமல் ஒரு கதையைக் கொண்டு செல்ல இவை மட்டும் போதா. புதிய புதிய ‘உத்தி’களைக் கையாளும் திறனும் ஒரு கதாசிரியனுக்குத் தேவை.

‘நீங்கள் பலவீனமான மனசுக்காரரா? இந்தக் கதையைப் படிக்காதீர்கள்!’

‘கவிதாவின் கதை எப்படி முடியுமோ தெரியாது. சுபமாகவே தொடங்குவோம்’

இவ்வாறெல்லாம் , வாசகரைப் படிக்கத் தூண்டும் வகையில், கதையைத் தொடங்குவது நம் எழுத்தாளர்களுக்குக் கைவந்த கலை.

கதையை முடிக்கும் போதும் இத்தகைய உத்திகளைக் கையாள்வது அவர்களின் வழக்கம்தான்.

உதாரணத்திற்கு ஒன்று மட்டும்...............................

இளம் மனைவியுடன் தனிமையில் நடந்து செல்கிறான் ஓர் இளைஞன்.

எதிர்ப்பட்ட சில ரவுடிகள் அவனை அடித்து வீழ்த்துகிறார்கள்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த வாலிபன், அவர்கள் தன் மனைவியைக் கற்பழிக்கும் முயற்சியில் முனைப்புடன் இருப்பதைக் காண்கிறான். எழுந்து நிற்க முடியாத,  கயவர்களுடன் போராட முடியாத நிலையில் தன்னுடையவள் மானபங்கப் படுத்தப்படாமல் தடுப்பது எப்படி என்று துடிப்புடன் யோசிக்கிறான்.

அருகில் கிடந்த, கைக்கு அடக்கமான ஒரு கல்லை எடுத்துக் குறி பார்த்துத் தன்  முழு பலத்தையும் பயன்படுத்தி வீசுகிறான்.

அவன் குறி தப்பவில்லை.

அவன் எதிர்பார்த்தது போலவே, அது அவன் மனைவியின் நெற்றிப் பொட்டைத் தாக்க, அவள் சுருண்டு விழுந்து செத்துப் போகிறாள்.


வாலிபன், வாசகரைப் பார்த்து இப்படிக் கேட்பதாகக் கதை முடிகிறது...............

“என்னவள் மானபங்கப்படுத்தப் படுவதைத் தடுக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

அடடா! எத்தனை அருமையான உத்தியைக் கதாசிரியர் கையாண்டிருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறதுதானே?!

அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. [பல வருடங்களுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான இக்கதையின் ஆசிரியர் பெயர் மறந்துவிட்டது]

இவ்வாறெல்லாம் கதையின் வடிவத்தில் கருத்துச் செலுத்துகிற கதாசிரியன், தான் கதை படைப்பதன் நோக்கம் என்ன என்பதிலும் தெளிந்த அறிவுடையவனாக இருத்தல் அவசியம்.

வாசகரைச் சிரிக்க வைப்பதா? சிந்திக்கச் செய்வதா? இன்புறுத்துவதா? துன்புறுத்துவதா? அனுதாபப்பட வைப்பதா? ஆர்ப்பரித்துப் பொங்கி எழச் செய்வதா? இவை எதுவுமே இல்லை என்றால், வெறும் பொழுது போக்கிற்காகவா?

எதற்காக எழுதுகிறோம் என்பதை எழுத்தாளான் நன்கு சிந்தித்துத் திட்டமிடுதல் இன்றியமையாத் தேவை.

திட்டமிடல் இல்லையெனின், அவன் உருவாக்கும் படைப்பு ஒரு ’வெற்று’ப் படைப்பாக [எதற்கும் பயனற்றதாக] அமைந்துவிடும்.

இன்றைய வார இதழ்களில் இத்தகைய ‘வெற்று’ப் படைப்புகளைத்தான் பெரும் எண்ணிக்கையில் காண முடிகிறது.

இவ்வாறான சிந்தனைகளுடன், இவ்வாரக் ’கல்கி’ [23-09-2012] யிலும் ‘பாக்யா’ [செப் 21-27] இதழிலும் வெளியான சிறுகதைகளை ஆராய்வோம்.

மொத்தம் மூனு சிறுகதைகள். ‘முடிவே முதலாக.....வாசகர் கதைப் போட்டி-5ல் பிரசுரத்துக்குத் தேர்வான கதைன்னு ரெண்டு கதைகளைப் போட்டிருக்காங்க. படிச்சேன்.....படிச்சேன்.... பத்து தடவைக்கு மேல் படிச்சேன். ஒன்னுமே புரியல. அப்போ சுத்த ஆரம்பிச்சது என் தலை. இன்னும் சுத்திட்டே இருக்கு.

அதனால, ‘சினேகிதியே.....’ங்கிற  ஒரு சிறுகதையைப் பத்தி மட்டும் இப்போ சொல்லப் போறேன்..................... 

’சித்ரா’ன்னு ஒரு குடும்பத் தலைவி. அவங்களுக்கு வாகனம் ஓட்டத் தெரிஞ்ச ஒரு பொண்ணு. [என்னய்யா வாகனம்னு கேட்டு என்னை மூடு அவுட் ஆக்கிடாதீங்க. அதைப் பத்தி கதாசிரியர் ,ஹேமலதா’ ஒன்னுமே சொல்லல]

ஒரு நாள் திடீர்னு, பள்ளித் தோழி பத்மா நினைவுக்கு வர்றா. அப்போதைய அனுபவங்கள் சித்ரா மனசில் குறும்படமா ஓடுது. அதன் சுருக்கத்தைச் சொல்லித்தான் கதாசிரியர் கதையைத் தொடங்குறார்.

உடனே பத்மாவைப் பார்க்கணுங்கிற ஆசை சித்ரா மனசில் விஸ்வரூபம் எடுக்குது. முப்பது வருடம் போல ஏன் அந்த ஆசை தலை தூக்கலேன்னு கேள்வி கேட்டு மடக்க நினைக்காதீங்க . பாவம் கதாசிரியை ஹேமலதா.

கூகுளில் தேடினாங்க. பத்மா சுப்ரமணியம்தான் கிடைச்சாஙகளாம். நம்ம பத்மா கிடைக்கல.

மகளின் உதவியோட ஃபேஸ்புக்கில் வலை வீசினதில் கொஞ்சம் பள்ளிப் பருவத் தோழிகள் சிக்கினாங்க. அவங்கள்ல ‘ரம்யா’வும் ஒருத்தர். ஆனா, அந்த ரம்யா தனக்கு ரெருங்கிய தோழி இல்லேன்னு நம்ம சித்ராவே சொல்றாங்க.

சென்னையிலேயே இருக்கிற ரம்யாவை வீடு தேடிப் போய் சந்திக்கிறாங்க சித்ரா.

மாணவிப் பருவத்தில் ரம்யா நகைச்சுவையா பேசுவாங்களாம். அந்தச் சின்ன வயசில் ஒரு தடவை அவங்க வீட்டுக்குப் போயிருந்தப்ப, ரெண்டு பேரும் கமல் பத்தியும் கார்த்திக் பத்தியும் கதைச்சாங்களாம்.

ஆனா, அந்த ரம்யா இன்னிக்கித் தன் மகன் கிருஷ்ணா பத்தியே பேசிப் பேசி அறுத்துத் தள்ள, நம்ம சித்ராவுக்குக் கொட்டாவியே வந்துடிச்சாம்!

அறுபட்டது போதுமடா சாமின்னு மகளைக் கூட்டிகிட்டு வீடு திரும்பிடறாங்க சித்ரா.

ரம்யாவைச் சந்தித்த பிறகு, சித்ராவைப் பத்தி, ”எதிலோ ஏமாந்தது போல் தோன்றியபடி இருந்தது இவளுக்கு” என்கிறார் கதாசிரியர்.

இதுதாங்க கதை.

எனக்குக் கதை நல்லாவே புரிஞ்சுது. கடைசியா கதாசிரியர் சொல்றது மட்டும் சுத்தமா புரியல.

ரம்யா இந்த அம்மாவுக்கு நெருங்கிய தோழி அல்ல. அப்படியிருக்க, எதை எதிர்பார்த்து சித்ரா அவங்களைச் சந்திக்கப் போனாங்களாம்?

ரம்யாவின் நகைச் சுவையையா? ஸ்வர்ணலதா போல அவங்க பாட்டுப் பாடுவதை எதிர்பார்த்தா?

அது நிஜம்னா, வெளிப்படையா, “ஒரு பாட்டுப் பாடு. கொஞ்சம் ஜோக்கெல்லாம் சொல்லு”ன்னு கேட்க வேண்டியதுதானே?

அதுக்கு எது தடையா இருந்தது?

விளக்கம் தரத் தவறிவிட்டார் ஹேமலதா. 

கதாசிரியை அவர்களே,

இப்படி ஒரு கோரிக்கை வைத்து, அதை ரம்யா நிறைவேற்றியிருந்தால் இந்தக் கதைக்கே அவசியமில்லாமல் போயிருக்கும் என்று பயந்துவிட்டீர்கள். சரிதானே?

போகட்டும்.

‘ஆண்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக அதிக சலனமற்றுச் செல்ல, பெண்களுடையது திருமணத்துக்குப் பின் காட்டாறு போலப் பாதை திரும்புவதாக அவளுக்குப் பட்டது’ன்னு ஒரு கட்டத்தில் குறிப்பிடுறீங்களே அது மட்டும் என் உள்ளத்தைத் தொட்டது.

மற்றபடி, குறிப்பிட்டுச் சொல்லும்படியா, கதைபடிப்பவரைக் கட்டி இழுத்துச் செல்லும் நடை, உத்தி, பாத்திரப் படைப்புன்னு எதுவும் சிறப்பா அமையல..

கதை முடிவில்,”வாம்மா, பத்மா ஆண்ட்டியைத் தேடலாம்” என்று மகள் சொல்ல.................

‘பத்மா கிடைத்தாலும் பதினொரு வயதில் தொலைத்த பத்மா கிடைக்க மாட்டாள்’ என்று சித்ராவைச் சொல்ல வெச்சிருக்கீங்க.

ஒரு பதினொரு வயசுக்காரர் முப்பது வருசங்களுக்கு அப்புறம் மாறிப் போவது இயற்கைதானே? சிறு வயசுக் குணாதிசயங்களில் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அவ்வளவே. இது நீங்க சொல்லித்தான் தெரியணுமா?

அடுத்து வெளிவரவிருக்கும் உங்கள் சிறுகதை முழுமையான பாராட்டுக்குரியதாக அமைய என் மனப்பூர்வ வாழ்த்துகள்.


                       *                                   *                                         *


ஹேமலதாவை வாழ்த்திய கையோடு,  ‘பாக்யா’ இதழில் வெளியான சி.கதைகள் பற்றிய என் சீரிய [???] திறனாய்வையும் உங்கள் முன் சமர்ப்பித்து விடுகிறேன். இனி அடுத்து வரும் இடுகைகள் சுருக்கமாக இருக்கும். நம்புங்கள்.

அந்தரத்தில் சாகசம் புரிந்துவிட்டுப் பிச்சை எடுக்கும் சிறுமியையும், ஷோபாவில் ஒய்யாரமாகப் படுத்து, பாப்கார்ன் சாப்பிட்டு டி,வி.பார்க்கும் தன் ஏழு வயது மகளையும் ஒப்பிட்டு வருந்தும் ஒரு நல்ல மனதுக்காரரின் மன ஒட்டத்தைக் காட்சிப் படுத்தும் உருக்கமான ஒரு சிறுகதை ‘நிஜமாத்தான் சொல்றீங்களா?’. எழுதியவர் இராஜேஷ்ஜோதி.

ஒரு குழந்தைகளுக்கான பள்ளியில்.................

“என் குழந்தைக்கு டென்னிஸ் கோச் தருவீங்களா?” என்று கேட்கும் நவ நாகரிகத் தாய்!

”பொறந்ததிலிருந்து உங்க குழந்தையின் கையைப் பார்த்திருக்கீங்களா?டென்னிஸ் விளையாடுற வயசா இது?” என்று சூடு கொடுக்கும் நிர்வாகம். இப்படியொரு உரையாடலை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கும் ‘டாப்’ கிளாஸ் கதை ‘பள்ளித் துவக்கம்’.  படைத்தவர் ‘எல்கே’

பலூனை ஊதிப் பெரிதாக்கி, ”இந்தா இதை வச்சிக்கோ. என் மூச்சிக் காத்து எப்பவும் உன்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லும் கவுசல்யா.

தான் கொஞ்சம் ஊதி, கவுசல்யாவையும் ஊதச் சொல்லி,”ரெண்டு பேர் மூச்சுக் காத்தும் இதில் இருக்கு. உன்னிடமே இருக்கட்டும்” என்று அவளிடம் ஒரு பலூனை நீட்டும் காவியா.

இது ஒரு கடற்கரைக் காட்சி!

படித்தவுடன் நெஞ்சு சிலிர்க்கிறதுதானே!? இது ஒரு சூப்பர் சிறுகதை! கதைத் தலைப்பு ‘பலூன்’. வடித்துக் கொடுத்தவர் ‘குட்டி’.

மனைவி பிறந்த வீடு போன நேரத்தில் வேலைக்காரியை வீட்டுக்காரன் அனுபவிக்க நினைப்பது போல், கதையைத் தொடங்கி, முடிவில் அவன் மகா யோக்கியன் என்பதாகக் காட்சிப் படுத்தி, வாசகரை முட்டாள் ஆக்கும் இரண்டு கதைகளோடு மேலும் சிலவும் ’சுமார் ரக’க் கதைகள்தான் என்றாலும்...........

மூன்று சிறந்த கதைகளைத் தந்ததற்காகப் ’பாக்யா’வை மனம் திறந்து பாராட்டலாம்.

கல்கி. பாக்யா என்னும் இரண்டு வார இதழ்களின் கதைகளை முழுமையாகப் படித்து ‘மதிப்பீடு செய்து இப்பதிவை வழங்கியிருக்கிறேன்.

பொறுமையாகப் படித்து முடித்ததற்கு நன்றி.

சொல்ல நினைத்ததைச் சுவையாகச் சொன்னேனா, இல்லை, ’அறுவை மருத்துவன்’ ஆகிய நான் ‘அறுத்து’த் தள்ளினேனா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!

அடுத்து வரும் பதிவுகள் சுருக்கமானவையாகத்தான் இருக்கும் என மீண்டும் உறுதி கூறுகிறேன்.

************************************************************************************************