வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆணா, பெண்ணா? விரும்பிய குழந்தை பெற எளிய வழி!

கடைசியாகப் பதிவு எழுதி 20 நாட்கள் ஆகிவிட்டன. வெளியூர்ப் பயணமும் மடிக்கணினிப் பழுதும் தாமதத்திற்கான காரணங்கள்.

மங்களகரமான வெள்ளிக் கிழமையன்று[09.08.13] புதிய பதிவு எழுதியே தீருவது என்று ஏற்கனவே எடுத்த சபதத்தின்படி, ‘வாஸ்து சாஸ்திரம்’ பற்றி, சற்றே நீண்டதொரு பதிவை இன்று அதிகாலையிலேயே எழுதி முடித்தேன்.

திரும்பப் படித்தபோது, அடித்தல், திருத்தல், கூட்டல், கழித்தல், இடைச் செருகல் எல்லாம் செய்யாவிட்டால் என்னுடைய அடுத்த பதிவை நீங்கள் சீந்த மாட்டீர்கள் என்பது சந்தேகமறப் புரிந்தது. அதற்குச் சில நாட்கள் தேவை என்பதும் தெரிந்தது.

இருப்பினும், மேற்கொண்ட சபதத்தைக் கைகழுவ என் தன்மானம் இடம் தரவில்லை. உங்களுக்குக் கிஞ்சித்தேனும் பயன் தரும் வகையில் எதையாவது எழுதியே தீருவது என்று முடிவெடுத்தேன். எதை? எதை எழுதுவது?

தீவிரமாய் யோசித்ததில், தனித் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ என்னும் நூலில் எப்போதோ படித்த ஒரு செய்தி இப்போது கை கொடுத்தது.

ஆசைப்பட்ட பிள்ளையை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிவகை அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே என் நடையில் தருகிறேன். இது ஆடவர்களுக்கான தனிச் சிறப்புப் பதிவு.

ஓ... நண்பர்களே,

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை ‘சூரிய கலை’ என்றும், இடது துவாரத்தில் அது நிகழ்ந்தால், அதைச் ‘சந்திர கலை’ என்றும் சொல்வார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இந்தப் பதிவின் மைய இழையே இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவு கொள்வது மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவரி]டமும் சொல்லி வைப்பது மிகவும் அவசியம்.

கீழ்க்காணும் விடயத்தையும் அவர் காதில் போட்டு, மனதில் ‘சக்’கென்று பதிய வைப்பது உங்களின் தலையாய கடமை.

விந்தணுக்கள், வீரியத்துடன் வெளிப்பட்டு, பெண்ணின் யோனிக் குழாயில் பரவி, அவளைச் சிலிர்க்கச் செய்யும் அந்தத் தருணத்தில், உங்கள் நாசியில் ‘சூரிய கலை’ சுவாசம்[நாசியின் வலது துவாரத்தில் மூச்சுக் காற்று உட்புகுந்து வெளியேறுவது] இடம் பெறுமேயானால், கருவில் உருப்பெறும் சிசு ஆணாக இருக்கும்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன?

அது மிக மிக எளிய ஒன்று.

சேர்க்கை கொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் மனைவியின் வலப்பக்கமாக, அவரை எதிர்கொள்ளும் நிலையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். படுத்த சிறிது நேரத்திலேயே, வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை உங்களால் அறிய முடியும். இதுவே சூரிய கலை!

எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவாறு, ஒருக்களித்துப் படுத்த நிலையில் புணர்ச்சி செய்வது சிரமம் ஆயிற்றே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், நீங்கள் மன்மதக் கலையை இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று அர்த்தம்.

தொடர்ந்து முயலுங்கள்; சாதிப்பீர்கள்.

இதே போல, பெண் பிள்ளை பெற விரும்பினால், நாசியின் இடது துவாரத்தில் சுவாசம் நிகழும் வகையில், இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கலவி புரிய வேண்டும்.

ஆரம்ப நிலையில் இம்மாதிரி முயற்சிகள் தோல்வியில் முடியலாம். இன்பம் பெறுதலே நோக்கம் என்றில்லாமல், விரும்பிய சிசுவைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சூரிய கலை, சந்திர கலைன்னு கணக்குப் போட்டிட்டிருந்தா கலவியில் ஈடுபாடு குறைஞ்சிடுமேன்னு நீங்க கவலைப் படுவதும் புரிகிறது. விரக தாபத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுவதன் மூலம் உணர்ச்சி வேகம் தணியாமல் பாதுகாக்கலாம்.

மேற் சொன்ன முறையைக் கையாண்டும் ஆசைப்பட்ட ஆண் குழந்தையைப் பெற இயலவில்லை என்றால், ஆணின் குரோமோசோமில் y இல்லை என்பது அறியற்பாலது.

ஆணின் x ம் பெண்ணின் x ம் சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணின் x ம் ஆணின் y ம் சேர்ந்தால் ஆண் குழந்தை. ஆணிடம் y குரோமோசோம் இல்லையாயின் ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போன்ற உடற்கூற்று உண்மைகளெல்லாம் நீங்கள் அறிந்தவைதாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தரும் என்று நீங்கள் நம்பினால், நன்றி சொல்ல நினைப்பீர்கள். அது இப்போது வேண்டாம். பெண்ணோ ஆணோ விரும்பிய குழந்தையைப் பெற்ற பிறகு சொல்லலாம். அதுவும் எனக்கல்ல; மறைமலை அடிகளாருக்கு!

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கேள்வியும் நானே! பதிலும் நானே!! [விகடன் பாணி]

”எங்கடா கிளம்பிட்டே?”

“கோயிலுக்குப் போறேன்”

“எதுக்கு?”

“எல்லாரும் எதுக்குப் போவாங்களாம்?”

“பொழுது போக்க, சிற்பக் கலையை ரசிக்க, ஃபிகர்களை சைட் அடிக்க, கொள்ளையடிக்க, மனப்பூர்வமா சாமி கும்பிட...இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கு. நீ எதுக்குப் போறே? எதிர்க் கேள்வி கேட்காம பதில் சொல்லு.”

“சாமி கும்பிடத்தான் போறேன்.”

“எதுக்கு சாமி கும்பிடணும்?”

“எல்லாரும்...சாரி, என் கஷ்டங்கள் நீங்க.”

“கடவுளைக் கும்பிட்டா கஷ்டங்கள் நீங்கும்னு யார் சொன்னது?”

“பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“பெரியவங்கன்னா...?”

“ஞானிகள். ஆன்மிக வாதிகள்.”

“கஷ்டங்களைக் கொடுத்தது யார்னு அவங்ககிட்டே கேட்டிருக்கியா?”

“இல்ல.”

“நீயா யோசிச்சிருக்கியா?”

“இல்ல.”

“கடவுள்தான் கஷ்டங்களைக் கொடுத்தார்னு நான் சொல்றேன். ஒத்துக்கிறியா?”

“மாட்டேன்.”

“ஏன்?”

“கடவுள் கருணை வடிவானவர்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.”

“கருணை வடிவானவர் கடவுள், சரி. நீ பிறக்குறதுக்கு முன்பே, ‘உன்னை மனுஷனா பிறப்பிக்கப் போறேன். இன்பங்களைவிடத் துன்பங்கள் நிறைய அனுபவிக்க வேண்டியிருக்கும்’னு உன்கிட்டே அவர் சொல்லியிருக்காரா?”

“ஹி...ஹி...பிறக்குறதுக்கு முன்பே எப்படிச் சொல்ல முடியும்?”

“முந்தைய பிறவிகள்ல  நீ மண்ணாவோ, மரமாவோ, எருமையாவோ, பன்றியாவோ இருந்திருப்பே. ஒவ்வொரு பிறவிக்கு இடையிலேயும் பேயாவோ, பிசாசாவோ ஆவியாவோ, ஆன்மாவாவோ அலைஞ்சிருப்பே. அப்பவே சொல்லலாமே?”

“அப்படியெதுவும் அவர் சொல்லி நான் கேட்டதா ஞாபகம் இல்ல.”

“சரி. நீ மனுஷனா பிறந்தப்புறமாவது, உன் கனவிலோ நனவிலோ ‘நான்தான் உன்னைப் படைச்சேன்’னு சொன்னாரா?”

“ஊஹூம்......இல்ல.”

“நிச்சயமா?”

“நிச்சயமா.”

“சத்தியமா?”

”சத்தியமா.”

“ஆக, மனுஷனா பிறக்குறதுதான் உன் விருப்பம் என்பதைச் தெரிஞ்சிட்டுக் கடவுள் உன்னைப் படைக்கல; உன் அனுமதியோடவும் அதைச் செய்யல; அவர் விருப்பத்துக்கு உன்னை இப்படிப் பிறப்பிச்சிருக்கார். இன்பங்களோட துன்பங்களையும் கொடுத்திருக்கார். இன்னிக்கிவரை, அவர் நினைச்சபடி நீ இன்ப துன்பங்களை அனுபவிச்சிருக்கே. இனியும் அவர் விரும்புகிறபடிதான் அனுபவிக்கணும். அவரைக் கும்பிடுவதாலோ, நெஞ்சுருகி, ஆடிப்பாடி அவர் புகழ் பாடுவதாலோ  நீ நினக்கிறபடியெல்லாம் எதுவும் நடந்துடாது. புரியுதா?”

“புரியுது.”

“புள்ள குட்டிகள் இருந்தா, அதுகளை நல்லாப் படிக்க வை. போ...போடா.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குறிப்பு:

நான் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால், அடுத்துப் பதிவிடுவதில் சற்றே தாமதம் ஏற்படும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@