வியாழன், 22 மே, 2014

இந்த வாரக் குமுதம் சிறுகதையும் ஒரு குட்[டு]டி விமர்சனமும்!

பிரபல எழுத்தாளர் வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம் பேரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@













புதன், 21 மே, 2014

ஒரு ‘முதிர்கன்னி’யின் முன் அனுபவங்கள்! [கண்ணீர்க் கதை]

ஜாதகம், வரதட்சணை என்று அலையும் மனப்பக்குவம் இல்லாத பெற்றோர்களையும், மண்ணுலக ‘தேவதை’களுக்காகத் தவமிருக்கும் மணமாகாத இளவட்டங்களையும் குறி வைத்து எழுதப்பட்ட கதை இது. அனைவரும் படிக்கலாம்!


கதை..........

வழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் ‘பெண் பார்க்கும்’ சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பி’ குடித்து,  மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விஷயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!

முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் பத்மாவதி.

“மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

“அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமா” என்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஒரு இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

“உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

“கொஞ்சம் பொறுங்க.....” குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” வறண்ட புன்னகையுடன் ஒரு சிறிய ‘டைரி’யைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள் பத்மாவதி.

*************************************************************************************