சனி, 24 மே, 2014

இந்தக் கதையைப் படித்துக் கண்கலங்க வேண்டாம். சும்மா படிங்க!

முன்னணி வார இதழில், பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது இந்த ஒரு பக்கக் கதை. பிரசுரமான இதழ், வெளியான தேதி போன்ற விவரங்கள் தொலைந்துபோயின. தற்செயலாய்க் கண்ணில் பட்ட கையெழுத்து பிரதியின் மறு வடிவம் இது.


கதை:                              அப்பாவுக்காக ஒரு தப்பு

பீரோவில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போல் பாவனை செய்துகொண்டே, +2 மாணவன் குணசீலனை நோட்டம் விட்டார் நூலக உதவியாளர் ஆறுமுகம்.

அலைபாயும் திருட்டுப் பார்வையுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிளேடை எடுத்து, படித்துக்கொண்டிருந்த பத்திரிகையின் ஒரு தாளில் கால் பக்க அளவுக்குத் துண்டித்தான் குணசீலன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை மடித்துச் சட்டையின் உள் பாக்கெட்டில் செருகினான்; எழுந்து நடந்தான். ஆறுமுகம் பின்தொடர்ந்தார்.

குணசீலன் முதல்தர மாணவன். தினமும் தவறாமல் செய்தித்தாள் படிப்பான். ஆசிரியர்களிடம் நல்ல பெயர். இவனா இப்படிச் செய்தான்? ஆறுமுகத்தால் நம்ப முடியவில்லை.

நூலக அறையிலிருந்து வெளியேறவிருந்த குணசீலனைத் தடுத்து நிறுத்தி, நூலகரிடம் அழைத்துப் போனார் ஆறுமுகம். “அந்த வினா விடைத் திருடன் இவன்தான் சார்” என்றார்.

“சார்...இல்லை சார்...அது வந்து சார்...” நினைத்ததைச் சொல்ல இயலாமல் நாக்குழறினான் குணசீலன்.

“உனக்கு ரொம்ப நல்ல பையன்னு பேராச்சே. நீயா இப்படி நடந்துகிட்டே? எல்லாருக்கும் பயன்படுற வினா - விடைப் பகுதியை வெட்டி எடுக்கலாமா? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னை.....”

“சார், நான் வினா விடையைத் திருடல சார். அது வந்து.....”

“கையும் களவுமா பிடிபட்டும் இப்படிப் பொய் சொல்றியேடா.”

“நான் பொய் சொல்லல சார். என் அப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி போலீசில் பிடிபட்டுட்டார். இந்தப் பத்திரிகையில், அவர் ஃபோட்டோவோட செய்தி வந்திருக்கு. இதைப் பார்த்தா எல்லாரும் என்னைக் கேவலமா பார்ப்பாங்களேன்னுதான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்.” அழுதுகொண்டே பத்திரிகையில் துண்டித்த பகுதியின் மறு பக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் குணசீலன்.

ஃபோட்டோவில், சாராயப் பானையைத் தலையில் சுமந்துகொண்டிருந்தார் குணசீலனின் அப்பா. அவரைச் சுற்றிப் போலீஸ்காரர்கள். படத்துக்குக் கீழே விரிவான செய்தி.

“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?”

நூலகரின் கண்கள் லேசாகக் கலங்குவது தெரிந்தது.

வெள்ளி, 23 மே, 2014

கதையாம்! குமுதம் கதையாம்!! இறையன்புவின் சிறுகதையாம்!!! {குட்[டு]டி விமர்சனம்}

வெ.இறையன்பு[I.A.S.]வின் ‘மயக்கம்’ என்னும் சிறுகதையை இந்த வாரக் குமுதத்தில் [28.05.2014] படிக்கும் வாய்ப்புப் பெற்ற பல லட்சம வாசகரில் நானும் ஒருவன். 

இக்கதையின் மூலம், பிள்ளை வளர்ப்பில் தவறிழைக்கும் பெற்றோரை எச்சரிக்க நினைக்கிறார் கதாசிரியர். அந்த நோக்கம் கொஞ்சமே கொஞ்சம்தான் நிறைவேறியுள்ளது எனலாம். காரணம், கதைப்பின்னலில் ஆசிரியர் கையாண்ட சொதப்பல்கள்.

கதை நிகழ்வை ஆராய்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு துக்கடாக் கேள்வி.

உங்களின் பக்கத்து வீட்டுக்காரர் அலுவலகம் சென்றுவிட்ட நிலையில், அவரின் பன்னிரண்டு வயதுள்ள மகன், தன் தாய் மயங்கி விழுந்துவிட்டதாக உங்களிடம் வந்து சொல்கிறான். அந்த அம்மாவுக்கு உதவி செய்ய அங்கு வேறு யாருமில்லை. நீங்கள் உங்கள் மனைவியுடன் விரைகிறீர்கள்.

அந்தப் பெண்மணியின் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறீர்கள். மயக்கம் தெளியவில்லை. இந்த நிலையில் உங்களின் அடுத்த கட்டச் செயல்பாடு என்னவாக இருக்கும்?

உங்கள் குடும்ப மருத்துவருக்கோ, அல்லது, பரிச்சயமான வேறு ஒருவருக்கோ ஃபோன் செய்து, இக்கட்டான நிலையை விளக்கி அவரை வரவழைக்க முயல்வீர்கள்.

கூடவே, அந்தப் பெண்ணின் கணவருக்கு ஃபோன் மூலம் [பன்னிரண்டு வயது மகனுக்கு எண் தெரிந்திருக்கும்] தகவல் சொல்வீர்கள்.

அவரோடு தொடர்புகொள்ள இயலாதிருந்தாலோ, அவரால் உடன் புறப்பட்டு வருவது சாத்தியமில்லை என்றாலோ, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வீர்கள்.

எதிர்பாராத விபத்துகளின் போது, வழக்கமாக மக்கள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் கதாசிரியர் இறையன்புவின் நினைவுக்கு வராமல் போனது  ஏன் என்று புரியவில்லை.

இப்போது கதைக்குச் செல்லலாம்.

‘ராஜா’ என்பவர் ஒரு கம்பெனியில் ‘ஃபிட்டர்’ ஆக வேலை பார்ப்பவர்; பந்தா பேர்வழி. கம்பெனியில் அவரை, ‘பந்தா ராஜா’ என்று அழைப்பார்களாம்.

ராஜா, தன் அண்டை அயல் வீட்டுக்காரர்களிடமும் தன் வேலை பற்றி எதுவும் சொல்வதில்லையாம். நீட்டா உடை உடுத்து, மெருகு குலையாமல் எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பாராம்.

பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் தன் மகனைப் படிக்க வைப்பதோடு மிகவும் செல்லமாக வளர்க்கிறார். மகன் பிடிவாதக்காரனாக வளர்கிறான்.

“நாம படுற கஷ்டம்கூடத் தெரியாம அவன் நடந்துக்கிறது எனக்குப் பிடிக்கல. நீங்களும் அவனுக்கு உணர்த்துற மாதிரி தெரியல” என்கிறாள் ராஜாவின் மனைவி சரளா. 

அவனைத் திருத்த முயன்று தோல்விகளைச் சந்திக்கிறாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள்.........

ராஜா வேலைக்குச் சென்ற சற்று நேரத்தில், சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த சரளா மயங்கி விழுகிறாள். மகன் கிஷோர், பக்கத்து வீட்டுக்காரர் பத்மநாபனிடம் சென்று சொல்கிறான்.

இந்தக் கட்டத்தில்தான் கதாசிரியர், நிகழ்ச்சி அமைப்பில் தவறிழைத்துவிட்டார் என்பதை மேலே குறிப்பிட்டேன்.

“தம்பி, எதுக்கும் நாம போயி உன் அப்பாவைக் கூட்டிட்டு வர்றது நல்லது. ரொம்ப சீரியஸாத் தோணுது. அவரு இல்லாம நாம எந்த முடிவும்  எடுக்க முடியாது” என்று கிஷோரிடம் சொன்ன பத்மநாபன் தன் லேன்ஸர் காரில் கிஷோரையும் அழைத்துக்கொண்டு ராஜாவிடம் தகவல் சொல்லப் போகிறாராம்.

எப்படிப் போகிறது பாருங்கள் கதை!

மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையில், ஒரே ஒரு ஃபோன் அழைப்பில் தகவல் தருவதை விடுத்து, லேன்சர் காரில் பறக்கிறாராம்!

கம்பெனிக்குச் சென்று, காத்திருந்து, கம்பெனி மேலாளரிடம் அனுமதி பெற்று ராஜாவைச் சந்தித்து அழைத்து வருகிறார் பத்மனாபன்.

ஃபிட்டர் கோலத்திலிருந்த தன் அப்பாவைப் பார்த்து மனம் திருந்துகிறான் கிஷோர். பன்னிரண்டு வயதுவரை, தன் தந்தை ஒரு ‘ஃபிட்டர்’ என்பது தெரியாமல் அவன் வளர்க்கப்பட்ட அதிசயம், கௌதம சித்தார்த்தனை நமக்கு நினைவுபடுத்துகிறது!

ராஜா வீடுவந்து சேர்ந்தபோது, மயக்கம் போட்ட சரளா, பத்மநாபன் மனைவியுடன் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கிறார். மயக்கத்திற்கான காரணம் என்னவென்பதை கதையின் முடிவுவரை ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

கிஷோர் திருந்தவதற்கென்றே சரளாவை மயக்கம் போட வைத்தார் இறையன்பு. அவன் திருந்திவிட்டான். அப்புறம் மயக்கத்திற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதால் ஆகப்போவதென்ன என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. ஒருவர் ‘பிரபல’ எழுத்தாளர் ஆகிவிட்டால், அவர் படைப்பிலுள்ள பிழைகளைப் பத்திரிகை ஆசிரியர்கள் கண்டுகொள்வதேயில்லை!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@