செவ்வாய், 9 டிசம்பர், 2014

அம்மம்மா.....! ‘அம்மா’வா அன்று இப்படிப் பேசினார்?!

'குமுதம்’ இதழில், 1982 முதல் 2012 வரையிலான காலக் கட்டத்தில் நான் எழுதிய 18 ஒ.ப.கதைகள் வெளியாயின. கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் அனுப்பிய படைப்புகளில் ஒன்றுகூட வெளியாகவில்லை[குமுதத்தின் தரம் உயர்ந்து என் படைப்புகளின் தரம் தாழ்ந்துவிட்டது!]

அந்த இதழில் வெளியான என் முதல் கதையைப் பதிவாக வெளியிட்டு ஆறுதல் பெற நினைத்தேன். கதை வெளியான குமுதம் இதழைப் புரட்டியபோது, ஒரு செய்தி கண்ணில் பட்டது. கதையை விடச் செய்தி பல மடங்கு சுவையானது என்பதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்[‘மூடர் உலகம்' என்னும் என் வலைப்பதிவு Remove செய்யப்பட்ட சோகத்திலிருந்து இன்னும் விடுபடாத நிலையில்!!!].


செய்தியின் தலைப்பு:
ஜெயலலிதா அரசியலில் குதிக்கப் போகிறாரா?

சென்னையில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியின் இருபத்தெட்டாவது நாள் விழாவில் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம்:

“தமிழக அரசியலில் காலாவதியாகிவிட்ட சில அரசியல்வாதிகள் சில பத்திரிகைகளை நடத்துகிறார்கள். அந்தப் பத்திரிகைகளில் ஆதாரமில்லாத கற்பனைச் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பாரதி விழாவுக்குச் சென்று கலந்துகொண்டேன். உடனே ஒரு பத்திரிகையில், ஜெயலலிதா மந்திரியாகப் போகிறார் என்று செய்தி வெளியிட்டார்கள்.

திரைப்படக் கல்லூரி முதல்வர் நீலகண்டன் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவரைப் பார்த்துவர மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். உடனே அந்தப் பத்திரிகையில் மறுநாள் ஒரு செய்தி வெளி வருகிறது. நீலகண்டனுக்குப் பதில் திரைப்படக் கல்லூரி முதல்வராக ஜெயலலிதாவை நியமிக்கப் போகிறார்கள் என்று. அப்படி எதுவுமே நடக்கவில்லை.

இப்போது நான் கைத்தறிக் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். இதைக் காரணமாக வைத்து நாளைக்கே ஒரு செய்தி போட்டாலும் போடுவார்கள்.  அனகாபுத்தூர் ராமலிங்கத்துக்குப் பதிலாகக் கோ-ஆப்டெக்ஸ் ஆலோசனைக் குழுத் தலைவராக ஜெயலலிதா நியமிக்கப்படப் போகிறார் என்று. இப்போதே அனகாபுத்தூர் ராமலிங்கத்திற்கு ஒரு உறுதியைத் தருகிறேன். எனக்கு அந்தப் பதவி மீது ஆசை கிடையாது.

ஒரு பத்திரிகையில் இன்னொரு செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி முதல்வர் பதவி வேண்டாம். கொடுத்தால் மந்திரி பதவி கொடுங்கள். இது மாதிரிப் பதவியெல்லாம் வேண்டாம் என்று நான் கூறிவிட்டேனாம்.

உறுதியாகக் கூறுகிறேன். எனக்கு எந்தப் பதவி மீதும் ஆசை கிடையாது.......”  -‘மக்கள் குரல்’
                                                                                                                   

மேற்கண்டவாறு, ‘மக்கள் குரல்’ பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குமுதம் வார இதழ்[20.05 1982, பக்கம் 1] செய்தி வெளியிட்டிருந்தது.

‘அம்மா’ இப்படிப் பேசியிருப்பார்களா? நம்ப முடிகிறதா?

பொய்ச் செய்தி வெளியிட்டது குமுதமா, மக்கள் குரலா?

=============================================================================================


சனி, 6 டிசம்பர், 2014

நன்றி கொன்ற ‘பசி’

நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுதவுள்ளேன். இது பழையதொரு இடுகை. முன்னோட்டம் பார்ப்பதற்காக வெளியிடப்படுகிறது

இந்தக் கதையில் எடுப்பான ‘தொடக்கம்’ இல்லை; காதலோ காமமோ இல்லை; ‘விறுவிறு’ நடை இல்லை; ‘புதிர்’ [suspense] இல்லை.....! “பின்னே என்னதான் இருக்கு?” என்கிறீர்களா? 

ஏதோ இருக்கு! பொறுமைசாலிகள் படிக்கலாம்!


                                                              பசி
    ['பசி'யின் படைப்பாக, மார்ச் 1997 'ஓம் சக்தி' மாத இதழில் வெளியானது]

அன்று கண்ணப்பரின் மாளிகையில் ஏழைகளுக்கு அன்னதானம்.

ஆண்டுக்கு ஐந்தாறு தடவையேனும் விசேச நாட்களில் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்ட அவரை, அமைச்சர் ஒருவர், “கலியுக வள்ளல்” என்று பாராட்டி நிகழ்வைத் தொடங்கி வைத்துவிட்டுப் போனார்.

உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் நேரிலும் பேசியிலும் புகழ்ந்து தள்ளினார்கள்.

யார் என்ன புகழ்ந்தும் கண்ணப்பருக்கு மன நிறைவு இல்லை. அவையெல்லாம் மனப்பூர்வமான பாராட்டுகள் அல்ல என்பது அவருக்குத் தெரியும். யாருக்கு அன்னதானம் செய்கிறாரோ அந்த ஏழைகளால் வாயார, மனதாரப் புகழப்படுவதையே அவர் மனம் நாடியது.

தன் உதவியாளர் சுந்தரத்துடன் உணவுக்காகக் காத்திருந்த பிச்சைக்காரர் வரிசையை ஒட்டி நடந்தார்.

அத்தனை பிச்சைக்காரர்களும் எதிரே குவித்து வைக்கப்பட்டிருந்த வகை வகையான உணவுப் பண்டங்களை ஜொள் ஒழுகப் பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, கண்ணப்பரை யாருமே கண்டுகொள்ளவில்லை. இத்தனைக்கும் தம் புகைப்படம் பொறித்த வண்ண வண்ணச் சுவரொட்டிகளைத் தெருத்தெருவாய் ஒட்டச் செய்திருந்தார் அவர்.

“சுந்தரம்.” உதவியாளரை அழைத்தார் கண்ணப்பர்.

“ஐயா.”

“இந்தப் பிச்சைக்காரங்களுக்குக் கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இல்லை. கவனிச்சீங்களா? அவனவன் திங்கிறதுக்கு அலையுறானே தவிர  என்னை யாருமே கண்டுக்கல.”

யோசித்தார் சுந்தரம். “என்னோட வாங்க” என்று சொல்லி நடந்தார். அவரைப் பின்தொடர்ந்தார் கண்ணப்பர்.

மளிகையின் சுற்றுச் சுவருக்குள் பரந்து விரிந்து கிடந்த புல்வெளியில், சிதறல் சிதறலாக அமர்ந்து பிச்சைக்காரர்கள் பசியாறிக்கொண்டிருந்தார்கள்.

இருவரும், அவர்களைக் கடந்து காம்பவுண்டின் கேட்டை அடைந்தார்கள்; நின்றார்கள்.

வெளியேறிக்கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரன், “ஐயா, வாய்க்கு ருசியா விருந்து படைச்சீங்க. வயிறு நிறையச் சாப்பிட்டேன். நீங்க தீர்க்காயுசா இருக்கணும்” என்று இரு கரம் கூப்பி வாழ்த்திவிட்டுப் போனான்.

அடுத்து வந்த ஒருவன், “புண்ணியவானே, ரொம்பப் பெரிய மனசு உங்களுக்கு. உங்க குடும்பம் தழைக்கணும்” என்றான்.

இப்படியாக, உண்டு முடித்த அத்தனை பேருமே வரிசையில் நின்று கண்ணப்பரை வாழ்த்திவிட்டுப் போனார்கள்.

கண்ணப்பரின் முகத்தில் திருப்தி படர்ந்திருப்பதைக் கண்ட சுந்தரம் சொன்னார்: “பசியோட இருப்பவன் முன்னால வகை வகையா தின்பண்டங்களைக் குவிச்சி வெச்சா அவன் கவனமெல்லாம் பண்டங்கள் மேலேதான் இருக்கும். பசி தணிஞ்சப்புறம்தான் நன்றி, விசுவாசம், பாராட்டு, பக்தி எல்லாம்.”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@