திங்கள், 28 டிசம்பர், 2015

கட்டு..கட்டு..ஜல்லிக்கட்டு!...மரணத்துடன் மல்லுக்கட்டு!!

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். எனவே, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த வீரவிளையாட்டு[?] இடம்பெறவில்லை.

‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு; தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட கலாச்சாரம்’ என்று காரணங்கள் பல சொல்லித் தடை விதித்தது தவறு என்று பலரும் சொல்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதியென்ன, விசயகாந்த் என்ன, இராமதாசு என்ன, வைகோ என்ன அனைத்துக் கட்சித் தலைவர்களும் தடையை நீக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை விடுகிறார்கள்: போராட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள். ‘அம்மா’வும் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடுவணமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு நடக்கும்" என்று நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கக் காரணம், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு. 

வாரியம் சொல்வதில் உண்மை இல்லையா?  நிகழ்ச்சியில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லையா? என்பன போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகின்றன அல்லவா?

அவை அர்த்தமற்ற[!] கேள்விகள்.

காளையின் திமிலை வளைத்துப் பிடித்து முழு பலத்துடன் இறுக்குவதும், கொம்புகளை அழுந்தப் பற்றி அதன் கழுத்தை முறிப்பதுபோல் பக்கவாட்டில் திருகுவதும், வாலை இழுப்பதும் துன்புறுத்தல்கள் அல்ல; அல்லவே அல்ல. இது வெறும் விளையாட்டு...வீர விளையாட்டு.

பதிலுக்குக் காளையும் விளையாடுகிறது. ஆனந்தப் பரவசத்துடன், துள்ளிக் குதித்து, எகிறிப் பாய்ந்து வீரர்களை மூர்க்கமாய் முட்டித் தள்ளுவதுபோல் பாசாங்கு செய்கிறது. சில நேரங்களில், எசகுபிசகாக அதன் கொம்புகள் குத்திச் சில வீரரகள் காயம்பட்டு உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போது உயிரிழப்புகள் நேரத்தான் செய்கின்றன. குறைந்தது மூன்றுநான்கு பேர்.

இதற்காகவெல்லாம் நாம் வருத்தப்படத் தேவையில்லை. ஏனென்றால், இந்த உயிரிழப்புகள்தான் நம் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காக்கின்றன. இது தெரிந்துதான், நம் தலைவர்கள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும் என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அலங்காநல்லூர்க்காரர்கள், ‘காலங்காலமா ஜல்லிக்கட்டு நடத்திட்டு வர்றோம். கடந்த ஆண்டு அது தடைபட்டது. எல்லா ஊருக்கும் பெய்த மழை எங்கள் ஊரில் பொய்த்துவிட்டது. காரணம் சாமி குத்தம்’ என்கிறார்களாம். இது பத்திரிகை[தின மலர், 27.12.15]ச் செய்தி.

கடந்த ஆண்டுக்கு முந்தை ஆண்டுகளில் எல்லாம் தவறாமல் மழை பெய்ததா என்று நாம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதும்கூட குத்தம்தான்...சாமி குத்தம்.

எந்தவொரு குத்தத்துக்கு ஆளானாலும் சாமி குத்தத்துக்கு நாம் ஆளாகக் கூடாது. மழைமாரி பொய்த்துப் போக, தமிழினமே பூண்டோடு அழிந்துவிடக்கூடும். ஆகவே......

போராடுவோம். தடைகளைத் தகர்ப்போம். . நம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டாடுவோம். உயிரிழப்புகள் ஒரு பொருட்டல்ல.

ஆம், உயிரிழப்புகள் நமக்கு ஒரு பொருட்டல்ல!

செவ்வாய், 22 டிசம்பர், 2015

காளைப் பருவத்தில் ‘பிரமச்சரியம்’ சாத்தியமா? -குடும்பக் கதை!

பழைய[தேதி சிதைந்துவிட்டது] தினத்தந்தி ‘ஞாயிறு மலர்’ பகுதியில் ‘வேகத் தடை’ என்னும்  தலைப்பில் வெளியான சிறுகதை.


எழுதியவர்:

பரந்தாமன், தான் பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்த பிரமச்சரியம் கொஞ்ச நாட்களாகவே ஆட்டம் கண்டுகொண்டிருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தான்.

“முதலில் தங்கையின் கழுத்தில் தாலி. அப்புறம்தான் இந்த அண்ணனின் கல்யாணம்” என்று சங்கல்பம் செய்துகொண்டதோடு, ’பெண்  சகவாசமே’ வேண்டாம் என்று ‘முழுப் பட்டினி’ கிடந்ததெல்லாம் இப்போது முட்டாள்தனமாகப் பட்டது.

தீர்த்தகிரி அடிக்கடி சொல்வான்:  “டேய் பரந்தாமா, உன்னையும் என்னையும் மாதிரி தலைச்சனாய்ப் பிறந்து, பெத்தவங்களையும் பறி கொடுத்த ஆண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் என்பது கானல்நீர். பொம்பளை சுகத்துக்கு ‘அந்த மாதிரி’ பொண்ணுகளைத்தான் தேடிப் போகணும்.”

நண்பனின் பேச்சு எத்தனை எதார்த்தமானது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது பரந்தாமனுக்கு.

தீர்த்தகிரி சொல்லி, டைரியில் குறித்து வைத்த மோகனாவின் முகவரியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஒரு தடவை, அவள் வீட்டு வாசல்படி வரை போய்விட்டு, மனசாட்சி முரண்டு பிடிக்கவே வீடு திரும்பினான்.

'சேலத்துக்காரர்கள், தங்கை பொன்மணியைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களின் பதில் பாதகமா இருந்தா விரதத்துக்கு அழுத்தமாய் ஒரு முற்றுப்புள்ளி’ என்று முடிவெடுத்திருந்தான்
பரந்தாமன்.

அவர்களின் பதில் பாதகமாகவே இருந்துவிட்டது.

“உடம்பை வித்துப் பிழைச்சாலும் மோகனா ரொம்ப டீஸண்ட்டானவள்..மாதம் தவறாம மெடிக்கல் செக்கப் செஞ்சுடுவா. வி.டி., எயிட்ஸுன்னு பயந்து சாகாம அவளைக் கையாளலாம்” என்று தீர்த்தகிரி அளித்த சான்றிதழ், பரந்தாமனிடமிருந்த கொஞ்சநஞ்ச தயக்கத்தையும் விரட்டியடித்தது.

கைபேசியை எடுத்தான்.

“ஹலோ...மோகனாவா...?”

“ஆமா...நீங்க....?”

“நான் பரந்தாமன்...தீர்த்தகிரி ஃபிரண்டு”

“சொல்லுங்க சார்.”

“அது வந்து...வந்து...”

வஞ்சனையில்லாமல் சிரித்தாள் மோகனா. “பாவம் சார் நீங்க. பயந்து பயந்தே வாலிப் பருவத்தை வீணடிக்கிறீங்க. தீர்த்தகிரி உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கார். யூ ஆர் வெல்கம்.” -தேன் தடவிய குரலில் பரந்தாமனைக் கிறங்கடித்தாள் மோகனா.

பரந்தாமன் தங்கையை அழைத்தான்.

‘ஒருத்தரைப் பார்க்கணும். வெளியே போய் வர்றேம்மா.”

“அவர் யாருண்ணா?”

“அவர் நீ தெரிஞ்சிக்க வேண்டிய ஆளல்ல.”

“நீங்க எப்பவுமே இப்படிப் பூடகமா பேசினதில்ல. இன்னிக்கி உங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. காலையில் டிபனுக்கு ரசம் கேட்டீங்க. எப்பவும் என்னோடு சேர்ந்துதான் சாப்பிடுவீங்க. இன்னிக்கி நீங்க பாட்டுக்குத் தனியாவே சாப்பிட்டீங்க......”

திடுக்கிட்டான் பரந்தாமன். “அது வந்து...ஏதோ ஞாபகத்துல...” -வார்த்தைகளை மென்று 
விழுங்கினான்.

“எல்லார்த்தையும்விட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? இன்னிக்கி என் பிறந்த நாள். என் பிறந்த நாள் அன்னிக்கித் தவறாம கோயிலுக்கு அழைச்சிட்டுப் போவீங்க. அதையும் செய்யல.” -அழுகையைக் கட்டுப்படுத்தி வெறுமனே சிரித்தாள் பொன்மணி.

“நீங்க உங்க ஃபிரண்டோட போனில் பேசினதை அரைகுறையாக் கேட்டேன். உங்க குழப்பத்துக்கான காரணத்தை ஓரளவு புரிஞ்சிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.......” தொடராமல் சற்றே இடைவெளி கொடுத்தாள் பொன்மணி.

பேசினாள்: ”ஒடிசலான தேகம்; ஒடுங்கிய கன்னம். இரண்டு உதடுகளையும் ஒட்டவிடாம தடுக்கிற தூக்கலான பல்லுங்க. அட்டக் கறுப்பு. இதுதான் நான். அழகு ரசனையுள்ள எவனும் கத்தை கத்தையாப் பணம் கொடுத்தாலும் என்னைக் கட்டிக்க மாட்டான். அப்படியே ஒருத்தன் சம்மதிச்சாலும், கொடுக்க நம்மகிட்டப் பணம் இல்ல. அதனால, இனி எனக்கு மாப்பிள்ளை தேடுறதை நிறுத்திடுங்க...” -சொல்லி நிறுத்தி, பரந்தாமன் மீது பார்வையைப் படர விட்டாள்.

அவன் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தான்.

தொடர்ந்தாள் பொன்மணி:  “வீட்டை ஒட்டியிருக்கிற நம் காலி மனையில் சின்னதா ஒரு செட் போட்டு ’டெய்லரிங் கடை’ வைத்துக் கொடுங்க. என்னால முடிஞ்சவரை உங்க குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்து காலம் கழிச்சுடுவேன். உடனே ஒரு தரகரைப் பார்த்து உங்களுக்குப் பெண் தேடச் சொல்லுங்க.”

மவுனமாய்த் தலையசைத்தான் பரந்தாமன்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000