ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

ரஜினி யார்?!?!

"நான் யார்?”...சிந்திக்கத் தெரிந்த மனிதர்கள் யாவரும் தமக்குத்தாமே கேட்டுக்கொண்ட கேள்வி இது; இன்றளவும் கேட்கப்படுவதும்கூட. விடை மட்டும் கிடைத்தபாடில்லை. 
சென்னையில் நடந்த[’தி இந்து’, 05.02.2017], ‘தெய்வீகக் காதல்’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில்.....

“மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் பணம், புகழ், குடும்பம், ஆசை என்று ஒரு குறுகிய வட்டத்தில் முடங்கிவிடுகிறோம்.

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் அனைவரும் புண்ணியவான்கள். நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? இறந்த பிறகு எங்கு செல்வேன்? ஆத்மா என்பது என்ன? என்பன போன்ற ஆன்மிகத் தேடலில் இறங்கியவர்கள். அக்கேள்விகளுக்கான விடை சொல்லும் குருவையும் பெற்றவர்கள். மிகப் பெரிய நடிகர், சூப்பர் ஸ்டார் என்பவற்றைவிட நான் ஒரு ஆன்மிகவாதி என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறேன். ஏனெனில், ஆன்மிகத்துக்கு அவ்வளவு பவர் உள்ளது. பவர் எனக்குப் பிடித்தமானது.....” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “ஆன்மிகத்தில் என் முதல் குரு என் அண்னன் சத்தியநாரயணா. அவர்தான் என்னை ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சேர்த்துவிட்டார். ராமகிருஷ்ண பரமஹம்சர் என் இரண்டாவது குரு. அவரிடம் ஒழுக்கத்தையும் சம்பிரதாயங்களையும் கற்றேன். ராகவேந்திரர் என் மூன்றாவது குரு. அவரிடம் பக்தியையும் சடங்குகளையும் கற்றேன்” என்கிறார்.

இரண்டு ஆன்மிகக் கதைகளையும் சொல்லியிருக்கிறார்.

இவை அனைத்திற்கும் மேலாக, “என் மூன்றாவது குருவான ரமண மகரிஷியிடம் ‘நான் யார்?’ என்பதையும் அறிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் [இந்த ‘நான்’ ஐ அறிந்திருப்பதாக ஏற்கனவே மகான்கள் எனப்படுபவர்கள் சொல்லியிருக்கிறார்கள்].

நான்...ஆத்மா...உயிர் எனப்படும் இவையெல்லாம் வெவ்வேறானவையா, ஒன்றா? வெவ்வேறு எனின் அவற்றுக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எவை? எல்லாம் ஒன்றெனின், அந்த ஒன்று உடம்புக்குள் எங்கு ஒளிந்திருக்கிறது? உடம்பு அழிந்த பின்னர் அதிலிருந்து வெளியேறுகிறதா? அப்புறம் அது என்ன ஆகிறது?...இப்படி இன்னும் எத்தனையோ கேள்விகள் உள்ளன. அத்தனைக்கும் விடை சொன்னவர் எவருமில்லை. தருகிற விடைகளிலும்  தெளிவில்லை.

இந்நிலையில், ரமண  மகரிஷி மூலம் ‘தான்[நான்] யார்?’ என்பதைப் புரிந்துகொண்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அவர் தன் உரையில், ‘நான் யார்?’....., ‘ஆத்மா என்பது என்ன?’ என்று குறிப்பிடுவதன்  மூலம், இரண்டும் ஒன்றல்ல என்று  நினைப்பது புரிகிறது.

இரண்டும் ஒன்றா வேறா என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். ‘நான்’ என்பதற்கு மட்டுமேனும் ரஜினி விளக்கம் தருவாரா?

தன் மாறுபட்ட நடிப்பால் பல்லாயிரக் கணக்கானவர்களின் உள்ளம் கவர்ந்த சூப்பர் ஸ்டார், ஊடகங்கள் வாயிலான ஓர் அறிக்கையின் மூலம் தர வேண்டும் என்பது நம் நெஞ்சார்ந்த விருப்பம்.
***********************************************************************************************************************

நேற்று வெளியிடப்பட்ட 'ரஜினி யார்?’ என்னும் பதிவு, தமிழ்மணத்தில் உரிய முறையில் வெளியாகாததால், தலைப்பு மாற்றப்பட்டு மீண்டும் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டது.

பதிவை ஏற்கனவே வாசித்தவர்கள் என்னை மன்னித்திடுக.




வியாழன், 2 பிப்ரவரி, 2017

குலைகுலையாய் முந்திரிக்காய்! வகைவகையாய்த் திருமணம்!!

14.03.1950 ‘விடுதலை’ இதழில், ‘சித்திரபுத்திரன்’ என்னும் புனைபெயரில், ‘திருமண விழா; வினா - விடை’ என்னும் தலைப்பில் சுயமரியாதைத் திருமணம் குறித்துப் பெரியார் எழுதியிருக்கிறார். அவ் வினா - விடை யைப் படித்து மகிழுங்கள்!

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனைப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணம் ஆகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாமலும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறியாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியான காரியங்களைச்[சடங்குகள்] செய்யாமல் நடத்தும் திருமணம்.

தமிழர் திருமணம் என்பது என்ன?
கணவனுக்கு மனைவி அடிமை[தாழ்ந்தவள்] அல்ல;  அவனுக்கு உள்ள உரிமைகள் இவளுக்கும் உண்டு என்னும் கருத்தை ஏற்று, நடைமுறைப்படுத்துவதாக ஒப்பந்தம் செய்துகொண்டு மணம் புரிதல்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜாதகம் பார்த்தல், சகுனம் பார்த்தல், சாமி கேட்டல் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமலும், மணமக்கள் நேரில் சந்தித்துத் தத்தம் உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டும், பேசிப் புரிந்துகொண்டும் செய்துகொள்ளும் திருமணம்.

புரட்சித் திருமணம் என்பது என்ன?
தாலி கட்டாமல் நடத்தும் திருமணம்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
மண்டபம், விருந்து, இன்னிசை, பாட்டுக் கச்சேரி முதலானவற்றைத் தவிர்த்து, ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் குறைந்த செலவில் ஒரே நாளில் நடத்தி முடிக்கும் திருமணம்.
===============================================================================

நன்றி: யுவகிருஷ்ணா, தினகரன் நாளிதழ் வசந்தம்[இணைப்பு],22.01.2017.