வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கடவுளுக்கும் ‘அது’வோ அதுபோல் வேறு ‘எது’வோ தேவைதானே?!

பொருள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பார்ப்பதற்குக் கண்களும், ஒலியை உள்வாங்குவதற்குச் செவிகளும், சுவைப்பதற்கு நாவும், நுகர்வதற்கு நாசியும், தொட்டு அறிவதற்கு உடம்பும் [மெய்] உதவுகின்றன.

ஐம்புலன்களால் ஈர்த்து அனுப்பப்படும் காட்சி முதலானவற்றை உணர்ந்து அறிவதற்குப் பயன்படுவது மூளை.

மனிதன், விலங்கு, பறவை என்று எந்தவொரு உயிரினமாக இருப்பினும் அந்த உயிரினத்தைப் பொருத்தவரை மூளைதான் எல்லாமே. அது செயல் இழந்தால் [மூளைச் சாவு] அந்த உயிர் செயல்படும் திறனை இழக்கிறது.

ஆக, உணர்தல், அறிதல், அனுபவித்தல் என உயிர்களின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையே ஆதாரம்.

மனிதன், தன் மூளையைப் பயன்படுத்தித்தான் புதியனவற்றைப் படைக்கிறான்; பயன்படுத்துகிறான்.

மனிதனையும் ஏனைய அனைத்தையும் படைத்தவன் கடவுள் என்கிறார்கள்.

எல்லாம் அறிந்த, விரும்பும்போதெல்லாம் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில் செய்கிற, தீராத விளையாட்டுப் பிள்ளையான அவருக்கும் மூளை தேவைதானே?

மனித மூளையைக் காட்டிலும் மிக மிக மிக...........மிக மிக மிக.............[இந்த ’மிக’வுக்கு நம்மால் வரம்பு கட்ட இயலாது] சக்தி வாய்ந்த கடவுளின் மூளை எத்தன்மையது?

அது உருவம் உள்ளதா, அருவமானதா?

மூளையைத் தவிர்த்து வேறு ‘ஏதோ’ ஒன்றை அவர் சிந்திக்கப் பயன்படுத்துகிறாரா?
அந்த ‘ஏதோ’ எப்படியிருக்கும்?!

கடவுளின் ‘இருப்பு’ உறுதிப்படுத்தப்படவில்லை; இந்தக் கேள்விக்கு விடையில்லை; பயனேதும் இல்லை[?] என்பவை தெரிந்திருந்தும், கடவுள் குறித்துச் சிந்திக்கும்போதெல்லாம், எனக்கு நானே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன்!!!

நீங்கள் எப்படி?

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தீக்குண்ட[பூக்குழி] நெருப்பு சுடாமலிருப்பது பக்தியினாலா?!

கோயில் திருவிழாக்களில், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்றவை இன்றளவும் பரவலாக நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகள். இவற்றைச் சாதிக்கக் கடவுள் பக்தியும் விரதமும் இன்றியமையாத் தேவைகள் என்று நம்புவது மூடத்தனத்தின் உச்சமாகும்.

தண்ணீரில் குளித்து, நீர் சொட்டும் ஈரமான ஆடையுடன் நெருப்பின் மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாவதால், காலுக்கும் நெருப்புக்கும் இடையே ‘ஆவித்திரை’ உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்துதான் வெப்பம் தீ மிதிப்பவரின் காலைச் சுட முடியும். இதற்குச் சிறிது அவகாசம் தேவை. அவசர அவசரமாக உரிய தூரத்தை நடந்து முடித்துவிடுவதால் பாதங்களில் தீக் காயங்கள் ஏற்படுவதில்லை. சூடு தாக்காமல் இருப்பதற்கு, நெருப்பின்மீது படிந்திருக்கும் சாம்பலும் ஒரு காரணம்.

மற்றபடி, விரதம் இருந்து பெறும் கடவுள் சக்தியால் இது சாத்தியமாகிறது என்பது வெறும் குருட்டு நம்பிக்கைதான்.

பூக்குழி மிதிப்போர், ஐந்தே ஐந்து நிமிடம் நெருப்பின் மீது அசையாமல் நிற்பார்களா? குழியில் உருண்டு எழுந்து வருவார்களா?

தீச்சட்டி தூக்குவதும் இதைப் போன்றதுதான்.

சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு, நெருப்பை எரியச் செய்து தூக்கினால், பொறுக்க முடியாத அளவுக்குச் சட்டி சுடாது. மண் பானைக்குள் நெருப்பிட்டுத் ‘தீச்சட்டு’ தூக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன செம்பு அல்லது, எவர்சில்வர் குடத்தில் நெருப்பிட்டுக் கோயிலை வலம் வருவார்களா?

மேற்கண்டவை போலவே, கூரிய அரிவாள் மீது ஏறி நிற்பதற்கும் பக்திக்கும் சம்பந்தமே இல்லை. இந்த வித்தையை எவர் வேண்டுமானாலும் செய்து காட்டலாம்.

அரிவாள் எவ்வளவு கூர்மையாக இருந்தாலும் பரவாயில்லை. அதன் வெட்டும் முனை நீளமாக இருப்பதும், உடலின் எடை வெட்டும் முனையில் சமமாகப் பரவியிருப்பதும் முக்கியம். அரிவாள் மீது ஏறும்போது, கவனமாக இருபுறமும் கைகளை ஊன்றிக்கொண்டு, முழு எடையையும் ஏற்றி நிற்றல் வேண்டும்.

அரிவாளைச் சாய்த்துப் பிடித்து ஏறுவதோ, குதித்து ஏறுவதோ கூடாது. ஒரு வெட்டும் கருவி எந்தவொரு பொருளையும் வெட்டுவதற்கு , வெட்டும் கோணம், வெட்டும் வேகம், அழுத்தம் ஆகியவை காரணமாக அமைகின்றன.

அரிவாள் மீது ஏறி நிற்கும் பக்தர்கள், நீண்ட பெரிய ஊசிகளை நட்டு வைத்து அவற்றின் மீது ஏறி நின்று, தம் பக்தியின் மேன்மையைப் பறைசாற்றுவார்களா?

அலகு குத்துவதிலும் சில நெறிமுறைகளைப் பின்பற்றினால் போதும். பக்தி விரதம் என்று எதுவும் தேவையில்லை.
‘கூர்மை’யான கொக்கியைத் தோலில் குத்துவதால் தாங்கிக்கொள்ளும் அளவுக்குத்தான் வலி இருக்கும். சில குறிப்பிட்ட காரணங்களால் ரத்தம் கசிவதில்லை. கொக்கி தாங்கக்கூடிய அளவுக்கு எடை இருத்தல் அவசியம். எடைக்கு ஏற்பவே கொக்கிகளின் எண்ணிக்கையும் இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு கொக்கி ஐந்து கிலோகிராம் எடையைத் தாங்கும் என்றால், 100 கிலோகிராம் எடையைச் சுமப்பதற்கு அல்லது, இழுப்பதற்கு 20 கொக்கிகளை மாட்டிக்கொள்ள வேண்டும். இதைச் சாதிக்க விரதமோ பக்தியோ தேவையில்லை.

===============================================================================