வெள்ளி, 3 மார்ச், 2017

உலக மகாகாகாகாகாகாகாகா நம்பர் 1 நகைச்சுவைக் கதை!!!!!!!!!!

குமுதம் வார இதழ்,  தன் இணைப்பில்[‘லைஃப்’] இம்மாதிரியான அதியற்புதச் சிரிப்புக் கதைகளைத் ['கடவுளின் குரல்’ என்னும் தலைப்பில்] தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மனுஷாள் யாவரும் படித்து இன்புறலாம்; ஆயுஷு பரியந்தம் இன்ப லோகத்தில் சஞ்சரிக்கலாம்!

வழக்கப்படியான சந்திரமௌளீஸ்வர ஆராதனைக்கு அப்புறம், சின்னதா ஒரு காமாட்சி விக்ரகத்தை வைச்சு ஆராதிச்சுண்டு இருந்தார் ஆச்சார்யா.

அப்போ  எங்கிருந்தோ ஒரு பொம்பளை வேகவேகமா அங்கே வந்தா; “எனக்கு உடனடியா ஒரு புடவை குடு!...” அப்படின்னு ஆச்சார்யாளைப் பார்த்துச் சத்தம் போட்டுக் கேட்க ஆரம்பிச்சா.

மகா பெரியவா பூஜை பண்றச்சே குறுக்கிட்டுப் பேசறதே தப்பு. எல்லாத்தையும்விட, அவரைப் பார்த்து, ‘குடு’ன்னு கேட்டது மகாமகா தப்பு. ஆச்சார்யா என்ன பண்ணப் போறாரோன்னு எல்லாரும் பதட்டமா பார்த்தா.

பூஜை பண்ணிண்டு இருந்த ஆச்சார்யா, அவளைத் திரும்பிப் பார்த்தார். 

“என்ன பார்க்கிறே...முதல்ல எனக்குப் புடவை குடு!” அப்படின்னவ, தான் கட்டிண்டிருந்த பழைய புடவை இடது முழங்காலுக்கு மேலே கொஞ்சம் பெரிசா கிழிஞ்சிருக்கிறதைக் காட்டி, “இதோ பார் எப்படிக் கிழிஞ்சிருக்கு!” அப்படின்னு ரகளை பண்ண ஆரம்பிச்சுட்டா.

‘பரமாச்சார்யா பரம பவித்ரமா பூஜை பண்ற நேரத்துல இப்படி ஒரு தொல்லையா?’ன்னு மடத்துச் சிப்பந்திகள் சிலர் அந்தப் பொம்பளையை அங்கேர்ந்து வெளியில போகச் சொல்லி விரட்ட ஆரம்பிச்சா.

சட்டுன்னு கையை அசைச்சு, அவாளைத் தடுத்த பெரியவா, பக்கத்துல பழங்கள் வைச்சிருந்த தட்டைக் கீழே இழுத்துண்டு, ஒரு புடவையை எடுத்துண்டு வரச்சொல்லி ஜாடை பண்ணினார். சீடர்கள் கொண்டுவந்து குடுத்த புடவையை அந்தத் தட்டுல வைச்சு வந்தவகிட்டே குடுத்தார். புடவையை மட்டும் எடுத்துண்ட அவ, அதுக்காகவே வந்த மாதிரி, சட்டுனு அங்கேர்ந்து புறப்பட்டுட்டா.

ஆச்சார்யா தன்னோட பூஜையைத் தொடர்ந்தார். எல்லாரும் பார்த்துண்டு இருந்தா. அவ்வளவு பெரிய கூட்டத்துல அந்தச் சமயத்துல ஒரே ஒருத்தருக்கு மட்டும் ஒரு சந்தேகம் வந்துது.

கொஞ்ச நாள் முன்னாலதான் இந்த மாதிரி மனநிலை சரியில்லாத ஒருத்தி மடத்துக்கு வந்தா. அபிராமி அந்தாதி சொல்லிட்டுக் குணமாகிப் போனா. இப்போ வந்தவளும் அந்த மாதிரி சித்தபிரமை புடிச்சவளா இருப்பாளோ...வாங்கிண்டு போன புடவையை அவ என்ன செய்வா? இந்தச் சந்தேகம் வந்ததும் அந்தச் சீடர் அந்தப் பொம்பளை பின்னாலேயே வேகமாகப் போனார்.

கொஞ்ச தூரம் போனவர் அப்படியே திடுக்குன்னு நின்னார். காரணம், யாரோ பளார்னு தன்னைக் கன்னத்தில் அறைஞ்சது மாதிரி இருந்திருக்கு. கன்னம் சிவக்கத் தன்னை அடிச்சது யாருன்னு தெரியாம திகைச்சி மயங்கி விழுந்தவர், கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் ஒரு வழியா எப்படியோ எழுந்து மடத்துக்குத் திரும்பினார். 

அப்போதான் பூஜையை முடிச்சுண்டு எழுந்த மகா பெரியவா, முதல் பார்வையா அந்தச் சீடனைப் பார்த்தார். “என்ன, புடவையை வாங்கிண்டு போனவ என்ன செய்யறான்னு பார்க்கப் போனியா? அவ சித்த பிரமை பிடிச்சவன்னு நினைச்சியாக்கும். அவ யார் தெரியுமா? அம்பாள்டா! அந்த மட்டும் ஒரே அறையோட நிறுத்தினாளேன்னு சந்தோஷப்பட்டுக்கோ” என்று சொன்னவர், அங்கே இருந்த காமாட்சி விக்கிரகத்தைச் சுட்டிக்காட்டினார்.

வந்தவ[ள்] கட்டிட்டிருந்த புடவையில் முழங்காலுக்கு மேல கிழிஞ்சிருந்த மாதிரியே அம்பாள் விக்கிரகத்துக்குச் சாத்தியிருந்த புடவை கிழிஞ்சிருந்துது!

அம்பாளே ஆச்சார்யாளைத் தேடிவந்து தனக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிண்டு போறான்னா, மகா பெரியவா எப்பேர்ப்பட்ட மகான்! அவரைத் தரிசனம் பண்ண நமக்குக் கிடைச்சிருக்கிற பாக்யமெல்லாம் எப்பவோ பூர்வ ஜன்மாவுல பண்ணின புண்ணியம்னு நினைச்சு சிலிர்த்துப்போனா அங்கே இருந்தவா எல்லாரும்!
===============================================================================

பல சந்திப் பிழைகளை மட்டும் திருத்தி, கட்டுரையை[கதை!!!] அச்சு அசலாகப் பதிவு செய்திருக்கிறேன்.


புதன், 1 மார்ச், 2017

இது கதையல்ல, கண்ணீரில் எழுதிய குறுங்காவியம்!!!

கல்நெஞ்சங்களையும் கரைந்துருகச் செய்யும் கண்ணீர்க் கதை...கலக்கல் நடையில்! 

கதைத் தலைப்பு:                                   சாரதா

தரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா.

மனதில் தாங்க முடியாத வலி. முகத்தில் பயமுத்திரை.

எதிரே, கனல் கக்கும் கண்களுடன் முரட்டுக் கணவன் வரதன். இரு பக்கமும் மூட நம்பிக்கைகளின் சேமிப்புக் குதிர்களாய் மாமனாரும் மாமியாரும்.

“என்னடா, வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறே. பிறந்த நட்சத்திரத்தை மறைச்ச உன் பெண்டாட்டி பிறந்த சாதியைக்கூட மறைச்சிருப்பா. அவள் சாதி என்னான்னு கேளுடா” என்றார் வரதனின் அப்பா திருமலைச்சாமி.

“சொல்லுடி, பொய் ஜாதகம் காட்டி இதுக்கு முந்தி எத்தனை புருஷன் கட்டினே?” -கேட்டவள், வரதனை ஈன்று புறம் தந்த தனலட்சுமி.

சாரதா வாய் திறக்கவில்லை.

“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்னு சொல்லுவாங்க. இனி நம்ம கதி என்ன ஆகுமோ?” என்று தனலட்சுமி தொடர்ந்து ஒப்பாரி வைத்தபோதும் சரி, “மூல நட்சத்திரத்தில் பிறந்தவள் மருமகளா வந்தா மாமனாரைத் தின்னுடுவான்னு சொல்லுவாங்க. நான் சாகத் தயார். நீங்க பிழைச்சிருந்தா போதும்” என்று திருமலைச்சாமி முற்றும் துறந்த சாமியார் வேடம் தரித்தபோதும் சரி சாரதா மௌனமே சாதித்தாள்.

“என்னடி, வாயில் கொழுக்கட்டையா? பேசேண்டி” என்று வரதன் கையை ஓங்கிக்கொண்டு நெருங்கியபோதுதான், “நான் பிறந்தது மூல நட்சத்திரத்தில்தான். போலி ஜாதகம் காட்டி உங்களையெல்லாம் நாங்க ஏமாத்தினது தப்பு. மன்னிச்சிடுங்க. இதனால் எந்தக் கெடுதலும் நடந்துடாது” என்றாள்.

“ஏன் நடக்காது? திருவேங்கடம் என் சகலை. பெரிய ஓட்டல் வெச்சி நடத்திட்டிருந்தான். ஒரே மகன். அவன் காதலிச்ச பொண்ணையே சாதிமதம் பார்க்காம, ஜாதகம் பார்க்காம கட்டி வெச்சான். எண்ணிப் பத்தே நாள். அவன் குடும்பத்தோட போன கார் லாரி மோதி நொறுங்கிச்சி. திருவேங்கடம் அப்பவே செத்துட்டான். அவன் பொண்டாட்டிக்குப் பலத்த அடி; கோமாவில் கிடக்குறா. மகனுக்கு ஒரு கை போயிடிச்சி. மருமகக்காரி மட்டும் சின்னக் காயத்தோட தப்பிச்சுட்டா. அவ மூல நட்சத்திரத்தில் பிறந்தவள்ங்கிறது அப்புறம்தான் தெரிஞ்சுது. நீயும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவள். நீ இந்த வீட்டில் இருந்தா எங்களுக்கும் இந்தக் கதிதான்.” -அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் திருமலைச்சாமி.

“மூலமாவது கூலமாவதுன்னு மூல நட்சத்திர தோஷமுள்ள ஒரு மூதியை மருமகளா கொண்டுவந்தா என் பெரியம்மா மக. ஆறே மாசத்தில் தாலி அறுத்துட்டா. நெஞ்சு வலிக்குதுன்னு படுத்த அவ புருஷன் எந்திரிக்கவே இல்ல.” -இது தனலட்சுமி.

நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது சாரதாவுக்கு. ஓரக் கண்ணால் வரதனைக் கவனித்தாள். மீண்டும் கை ஓங்கி வருவானோ? அடித்து நொறுக்குவானோ? சிவப்பேறிப் பழுத்த அவனின் கண்கள் சாரதாவை இப்படிச் சிந்திக்க வைத்தன.

வாய் திறவாமல் இருந்தால் தண்டனை கடுமையாகலாம் என்று பயந்தாள் அவள்; சொன்னாள்: “ஒரு கார் விபத்து நடக்குதுன்னா அதுக்கு டிரைவரும் காரணமா இருக்கலாம். ஒருத்தர் திடீர்னு செத்துப் போறார்னா, அதுக்கு மாரடைப்பு மாதிரியான நோய் காரணமா இருக்கலாம். இப்படியெல்லாம் யோசிக்காம, எல்லாக் கஷ்டங்களுக்கும் மூல நட்சத்திரத்தில் பிறந்த மருமகளே காரணம்னு நீங்க சொல்றது என்னங்க நியாயம்?”

“என்னடி, நாக்கு நீளுது?” சாரதாவின் தோள்பட்டையில் எட்டி உதைத்தான் வரதன். “பத்து வருஷமா கட்டப்பஞ்சாயத்துப் பண்றேன். டூப்ளிகேட் ஜாதகம் காட்டி என்னையே ஏமாத்திட்டான் உன் அப்பன். சிங்கப்பூரில் இருந்து வந்த உன் தாய் மாமன், 'மூலநட்சத்திரத்தில் பிறந்த சாரதாவைக் கட்டிகிட்ட உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு'ன்னு பாராட்டினபோதுதான் நாங்க எமாந்தது தெரிஞ்சுது. கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்......”

பேசுவதை நிறுத்தி, எங்கெல்லாமோ தேடி, நீண்டதொரு அரிவாளை எடுத்துவந்தான் வரதன். “இந்த நிமிசமே இங்கிருந்து ஓடிடு. இல்லேன்னா வெட்டிப் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான்.

“நான் எங்கே போவேங்க?”

“எங்கேயோ போ. ஏன், உன் அப்பன் வீட்டுக்கே போயேன்.”

“ஆஸ்துமாவோடு போராடுற அம்மா. வாழாவெட்டியா ஒரு அக்கா. கல்யாணம் எப்போ ஆகும்னு கூரையை அண்ணாந்து பார்த்துட்டிருக்கிற தங்கச்சிக. வேலைவெட்டி இல்லாம ஊர் சுத்துற தம்பி. கஷ்டங்களைச் சுமக்க முடியாம என் அப்பா திணறிட்டிருக்கார். வாழாவெட்டியா நானும் போய் நின்னா அவர் மூச்சு நின்னுடுங்க.”

வரதனின் கால்களில் விழப்போனாள் சாரதா. அவன் விலகிக்கொண்டான்.

“உன் அப்பன் சாகாம இருக்க நான் என் புருஷனைப் பலி கொடுக்கணுமா?” -கொதிக்கக் கொதிக்க வார்த்தைகளைக் கொட்டினாள் தனலட்சுமி.

“வேண்டாங்க. அப்படியெல்லாம் ஏதும் நடந்துடாதுங்க. நான் கல்யாணம் ஆகிவந்து  வருஷம் ஒன்னு ஆயிடிச்சி. அசம்பாவிதம் ஏதும் நடக்கலையே.”

கவனக்குறைவாய் கழிவறையில் தனலட்சுமி சறுக்கி விழுந்து காலை முறித்துக்கொண்டது; தண்ணியடித்துவிட்டுத் திருமலைச்சாமி மாடிப்படியில் உருண்டு விழுந்து மண்டையைப் பிளந்துகொண்டது. தொழில் போட்டியில் எதிரிகளுடன் மோதி வரதன் ஒரு கையை உடைத்துக்கொண்டது என்றிப்படிக் காலாவதி ஆகிப்போன கஷ்டநஷ்டங்களுக்கெல்லாம் ஒட்டுமொத்தமாய்ச் சாரதா மீது பழி போட்டார்கள் அவர்கள்; அவள் வீட்டைவிட்டு வெளியேறத்தான் வேண்டும் என்று ஒருமித்த குரலில் உத்தரவு போட்டார்கள்.

“இன்னொரு கல்யாணம் வேணுன்னா பண்ணிக்குங்க. என்னை இங்கிருந்து விரட்ட வேண்டாம்” என்று மன்றாடினாள் சாரதா. பலனில்லை.

வரதனின் கால்களைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு கதறினாள். அவன் மனம் இளகவில்லை.

“மரியாதையாப் போயிடு. இல்லேன்னா, சீமெண்ணை ஊத்தி எரிச்சுடுவேன். போகப் போறியா இல்லியா?”

“போயிடுறேங்க.”

ஒரு நூறு ரூபாய் நோட்டை அவள் கையில் திணித்து, “ரயில் வர்ற நேரம். சீக்கிரம் கிளம்பு” என்று சொல்லி  நகர்ந்தான் வரதன்.

வெளியே பைக்கின் உறுமலோசை கேட்டது.

கொஞ்சம் துணிமணிகளை ஒரு பெட்டியில் திணித்துக்கொண்டு சாரதா புறப்படத் தயாரானபோது உள்ளறையின் கதவு சாத்தப்படுவது தெரிந்தது.

சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தாள் சாரதா. ரயில் வருவதற்கு இருபது நிமிடங்கள் போல இருந்தன. எட்டி நடை போட்டால் பத்து நிமிடங்களில் ரயில் பாதையை  அடைந்துவிட முடியும்.

வீட்டிலிருந்து வெளியேறினாள் சாரதா; நடந்துகொண்டே எதையெல்லாமோ யோசித்தாள்.

எதிர்வரும் ரயிலை எதிர்பார்த்து இரு தண்டவாளங்களுக்கிடையே மெல்ல நடந்துகொண்டிருந்தாள் அவள்.