செவ்வாய், 31 அக்டோபர், 2017

கடவுளும் சில கேள்விகளும் உங்கள் மனசாட்சியும்!!!

‘கடவுளின் கடவுள்’ என்னும் வலைப்பக்கத்தை[blog] வடிவமைத்து மிகுந்த உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நான் ‘வாங்கிக் கட்டிக்கொள்ள'க் காரணமாக இருந்த பதிவுகளில் ‘கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!’ என்பதும் ஒன்று.
                  
கருத்துகள், வாசிப்பவர் மனதில் ஆழப் பதிந்திட ஆங்காங்கே சற்றுக் கடுமையான சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மறுபதிப்பில் அவை தவிர்க்கப்பட்டன.  


நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பதில் அளிப்பது உங்கள் ‘மனசாட்சி’யாக இருக்கட்டும்!

கேள்வி 1:
“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரிந்திருக்கும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் சிந்திப்பீர்களா? ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற ‘வழக்குமொழி’யெல்லாம் வேண்டாம்.

கேள்வி 2:
உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்திருக்கிறார்? ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். செய்வீர்களா?

கேள்வி 3:
உங்கள் வேண்டுதல்களில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டதில்லையா? தெளிவு பெற முயன்றதில்லையா?

கேள்வி 4:
உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா? “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

கேள்வி 5:
அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். எனவே, அவரைப் போற்றித் துதி பாடுவது தேவையற்றது என்ற எண்ணம் உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையா? ஏன்?

கேள்வி 6:
துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அவை நிகழ்ந்தன என்று நம்புகிறீர்கள். அவ்வாறு நம்புவது அறிவுடைமை ஆகுமா?

கேள்வி 7:
ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையுமாறு பிறருடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா? அம்மாதிரியான வழிபாடுகளால் எத்தனை முறை பலன் கிட்டியிருக்கிறது?

வாட்டி வதைக்கும் வறுமை, தீராத நோய்கள், மதச் சச்சரவுகள், இன மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை காரணமாக, உயிர்கள் கடும் துன்பத்திற்கு ஆட்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதையும் சீரழிந்து செத்தொழிவதையும், இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை நொந்துகொண்டதுண்டா? அவ்வாறு நொந்துகொள்வது தவறாகுமா?

கேள்வி 8:
“கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் இதை நம்புகிறீர்களா?

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தாம். அத்தனை பேர் மனமும் சுத்தமானவையா என்ன? [வழிபடாதவர்களின் மனங்கள் தூய்மையானவை என்று நான் சொல்லவில்லை].

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு[இக்கருத்து, தனி விவாதத்திற்குரியது] ஒரு மருத்துவமனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று அது தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களைப் பார்வையிடலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கலாம். அவர்களின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும்போது மனதில் கருணை பிறக்கும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம் என்று நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிற இடங்கள் நிறையவே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்து, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் நிம்மதி கிட்டும்; மனம் தூய்மையடையும் என்று சொல்லப்படுபவை ஏற்கத்தக்கனவா? 

மேற்கண்ட வினாக்கள், கடவுள் வழிபாடு குறித்துச் சிந்தித்தபோது என்னுள் முகிழ்த்தவை. இவற்றிற்கான பதில்களை  நடுநிலை உணர்வுடன் தேடுவது சிறந்த சிந்தனையாளரான உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடும்.

நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளி, 27 அக்டோபர், 2017

கதைகள் எட்டு வகை!!

என் வாசிப்பு அனுபவத்தின் வாயிலாகக் கதைகளை எட்டு வகையாகப் பாகுபடுத்தியிருக்கிறேன். உங்களின் அனுபவம் மாறுபடலாம். எண்ணிக்கையும் மாறுபடக்கூடும். சும்மா படித்துவையுங்கள்!

ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.

வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை; அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை.

அனைத்துப் பிரிவுகளுக்கும் எடுத்துக்காட்டுகள் சேர்த்திருந்தால் பதிவு மிகு பயனுடையதாக அமைந்திருக்கும். நேரமில்லை. மன்னித்திடுக!