ஞாயிறு, 18 மார்ச், 2018

மதநூல்கள் கடவுளால் படைக்கப்பட்டவையா?!

மூடநம்பிக்கை வளர்ப்பில், கடவுளை நம்புகிற அனைத்து மதங்களுக்கும் பங்குண்டு. இவ்வகையில், “இவை  ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.”

கடவுளின் ‘இருப்பு’ குறித்த ஆய்வு, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து நடைபெறுகின்ற ஒன்று; இன்றளவும் முற்றுப்பெறாதது. மதவாதிகள், கடவுள் உண்டு என்பதற்கான அனுமானங்களை விரித்துரைக்கிறார்களே தவிர, முற்றிலும் ஏற்கத்தக்க ஆதாரங்களை முன்வைத்தாரில்லை.

இந்த நிலையில், இவர்களின் மூதாதையரில் சிலரோ பலரோ எழுதி வைத்த நூல்களைப் புனிதமானவை என்றும், அவை  கடவுளால் அருளப்பட்டவை என்றும் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.

'வேதம்[Bible] மனிதர்களால் எழுதப்பட்டதல்ல; புனிதமான அது கடவுள் மொழிந்தது’ என்பது கிறித்தவர்களின் நீண்ட நெடுங்கால நம்பிக்கை. ‘.....the long standing belief by many Christians that the Bible is the pure, unadulterated word of God untouched by human hand.’[wikkipeadia] 

இஸ்லாமியர்களும் இதையேதான் சொல்லுகிறார்கள்.

‘குரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.’                                                       Wikkipeadia.

‘வேதங்கள் கடவுளால் வெளியிடப்பட்டவை’ என்றே இந்துமதவாதிகளும் சொல்கிறார்கள். கடவுள் நேரடியாகச் சொல்லக் கேட்டு எழுதியதாம். [They are supposed to have been directly revealed, and thus are called śruti ("what is heard").] கேட்டு எழுதிய மகான் ‘வியாசர்’ என்கிறார்கள்.

கடவுளை நம்புகிற எல்லோருமே இந்த மதவாதிகளின் கட்டுக்கதைகளை நம்புவது சாத்தியமில்லை என்பதால், பெரும்பாலோர் நம்புகிறார்கள் என்று முடிவெடுப்பதில் தவறேதுமில்லை எனலாம். 

இந்த மதவாதிகளின் கூற்று ஏற்கத்தக்கதா?

கடவுளைப் போற்றுபவர்கள், அவர் கருணை வடிவானவர் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். மதநூல்கள் கடவுளின் அருட்கொடை என்பது உண்மையாயின், அனைத்து உயிர்களின் மீதான நேசத்தை அவை வற்புறுத்துமே தவிர, உயிர்வதையை எவ்வகையிலும் அனுமதிக்க மாட்டா. ஆனால், புனிதமானவை என்று போற்றப்படும் ‘மதநூல்கள்’ என்ன சொல்கின்றன?

கிறித்தவர்களின் வேதமான ‘பைபிள்’ மாமிசம் உண்பதை அனுமதிக்கிறது. அதிச்சியடையாமல் பின்வரும் வாசகங்களைப் படியுங்கள்.

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக் கனியான உன் குழந்தைகளின் மாமிசத்தைத் தின்பாய்”[உபாகமம், 28:53].

“நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாமிசத்தையும் குமாரத்திகளின் மாமிசத்தையும் தின்னச் செய்வேன். அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாமிசத்தைத் தின்பான்”[எரேமியா, 19.9].

இம்மாதிரியான இன்னும் பல வாசகங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. [‘மதமும் பகுத்தறிவும்’, மலையாளத்திலிருந்து தமிழில் த.அமலா.  சூலூர் வெளியீட்டகம், கோவை. முதல் பதிப்பு: ஜூலை 2004]

ரிக் வேதத்தில் சித்திரிக்கப்பட முக்கியமான ஐந்து யாகங்களில் ‘நரமேதம்’ ஒன்று. ஆண்மகனைக் கொன்று தீயில் சுட்டெடுத்து உண்கின்ற வழக்கத்தைக் குறிக்கிறது அது. இப்படி இன்னும் எத்தனையோ குலை நடுங்க வைக்கும் தகவல்கள்!

பெரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு[ஊழி வெள்ளம்] ‘நோவா’தான் முதல் யாக பீடத்தை[பலிபீடம்]க் கட்டியதாக பைபிள் கூறுகிறது. “அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல விலங்குகளிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின் மேல் பலியிட்டான்” [ஆதியாகமம், 8.20].

இதைத் தனக்கே உரிய விளக்கங்களுடன் குர் ஆனும் அங்கீகரிக்கிறது. “எல்லாச் சமுதாயங்களுக்கும் நாம் பலியை நிச்சயித்திருக்கிறோம்”[குர் ஆன், 22:34]

ஆக, உயிர்வதை பற்றிய இந்த ஆதாரங்கள் மட்டுமே, மத நூல்கள் கடவுளால் அருளப்பட்டவை அல்ல; மனிதர்களால் உருவாக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த நிலவுலகம் பற்றி மத நூல்களில் பதிவு செய்யப்பட்ட கற்பனைக் கதைகளை நீங்கள் அறிந்திருக்கவும் கூடும். அவை பின்வருமாறு:

பூமியிடமிருந்து ஆகாயத்தைப் பிரித்து மேலே உயர்த்தியவன் வருணன் என்கிறது ரிக் வேதம். [பூமியும் ஆகாயமும் முன்னொரு காலத்தில் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தன; அவை உடலுறவு கொண்டதன் விளைவாய் உயிர்கள் தோன்றின என்றெல்லாம் மதவாதிகள் நம்பினார்கள்].

பைபிளில் உள்ள ஆதியாகமும் இதையே சொல்கிறது: “பின்பு தேவன், நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்றும் நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார்; ஆகாய விரிவுக்கு வானம் என்று பெயரிட்டார்.”

குர் ஆன் என்ன சொல்கிறது?

“ஆகாயமும் பூமியும்[அவற்றைப் படைத்த ஆதி நாளில்] ஒன்றுக்கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பின்னர் அவை பிரிக்கப்பட்டன.”

மேற்கண்ட கதைகள், அன்றைய மதவாதிகளின் அறியாமைக்குச் சான்று பகர்கின்றன.

ஆக, மத நூல்களைக் கடவுள் அருளினார் என்று சொன்னதையும் சொல்லிக்கொண்டிருப்பதையும் அறிஞர் உலகம் ஏற்காது என்பது உறுதி.

சனி, 17 மார்ச், 2018

பாடாய்ப் படுத்தும் பாலுணர்ச்சி!...புதுப்பிக்கப்பட்ட பதிவு!!

பணத்துக்காகவோ பிற பயன்களுக்காகவோ கொள்ளும் உடலுறவு ‘விபச்சாரம்’[சதை வணிகம்] எனப்படும். இதை, உலகின் பழைமையானதொரு தொழில் என்பார்கள்.[Prostitution is the business or practice of engaging in sexual relations in exchange for payment[1][2] or some other benefit. Prostitution is sometimes described as commercial sex.....It is sometimes also referred to as "the world's oldest profession" -Wikipedia

#இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, இந்தியா, பாபிலோனியா,கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம் பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதர்கள் மிகுந்த சுறுசுறுப்புடன் இத்தொழிலைச் செய்ததாகக் குறிப்புகள் உண்டு. 

ஏதென்ஸ் நாட்டில் சட்டமேதை ஸோலன், சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில் வழிவகுத்தார். 

18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பால்வினைத் தொழில்(விபச்சாரம்) வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும், பங்கு மார்க்கெட்காரர்களுக்கும்  பிரத்தியேகமாக விலைமாதர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவ்வகை விலைமாதர்களிடம் மற்றவர்கள் உறவுகொள்ள இயலாது.# - விக்கிப்பீடியா[தமிழ்]

அயல்நாடுகளில் ‘தொழில் வரி’ செலுத்தும் அளவுக்கு வருவாய் மிக்க தொழிலாக இது இருந்திருக்கிறது![Both women and boys engaged in prostitution in ancient Greece.[20] Female prostitutes could be independent and sometimes influential women. They were required to wear distinctive dresses and had to pay taxes]

‘நம் இந்தியத் திருநாட்டில் பாலியல் தொழிலாளர்களில் 40% சிறுமியர்கள்..’ என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாகும்{.....A CBI statement said that studies and surveys sponsored by the ministry of women and child development estimated that about 40% of all India's prostitutes are children.[88]}

மேற்கண்ட தகவல்கள் இப்பதிவிற்கான ஒரு முன்னோட்டம்தான். காலந்தோறும் இத்தொழிலை ‘ஒழித்துக்கட்ட’ விதிக்கப்பட்ட தடைகள் குறித்தும், அவற்றைக் கடந்து இது வளர்ந்த விதம் குறித்தும் சேகரித்த தகவல்களின் தொகுப்பே இப்பதிவு.
*கி.மு.594 இல் ‘சாலோன்’ என்பவரால்[Solon (/ˈsoʊlɒn, ˈsoʊlən/; Greek: Σόλων; c. 638 – c. 558 BC) was an Athenian statesman, lawmaker] சட்டம் இயற்றப்பட்டு, விபச்சாரம் ஒரு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் 600 ஆண்டுகள்வரை அவை நடைமுறையில் இருந்தன; காலப்போக்கில் மறைந்தன.

*கி.பி 5ஆம் நூற்றாண்டில் இத்தொழிலைப் பரவவிடாமல் அடக்கி ஒடுக்க முனைந்தான் ஐஸ்டினியன் என்னும் மன்னன். ‘தியோடரா’ என்னும் பெயருடைய விலைமகளை மணந்து பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தானாம்!

*தியோடரா நல்ல புத்திசாலி. சீர்திருத்த மனம் கொண்டவள். ஒரே ஒரு நாள் இரவில் 500 விலைமகளிரைச் சிறையில் அடைத்தாள்; ஆடவர் நுழையாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விலைமகளிருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

அதன் பிறகு அதிர்ச்சிதரும் சம்பவங்கள் நடந்தன. சில பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். பலரின் மனநிலை பாதிக்கப்பட்டது!

*13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் ‘லூயி’ அனைத்து விலைமகளிரையும் நாடு கடத்தினான். விபச்சாரத்துக்குத் துணைபோகும் நபர்களைச் சிறையில் தள்ளினான். அப்புறம்  நடந்தது?

காலப்போக்கில், புதிய புதிய விபச்சாரிகள் நகரில் நுழைந்துவிட்டார்கள்! மிகவும் ரகசியமாகத் தொழில் செய்தார்கள்.  சதை வணிகம் ஓஹோ என்று வளரத் தொடங்கியது!

*1347ஆம் ஆண்டில், சிசிலி நாட்டைச் சேர்ந்த அரசி ஜேன்1[13 வயது] மிகக் கடுமையான சட்டங்களை இயற்றினாள்.

அவை பின்வருமாறு:

1.சதை வணிகத்தில் ஈடுபடுபவர்கள், வலது தோளில் சிவப்பு முடிச்சு போட்ட அங்கியை அணிய வேண்டும். அவர்கள் வீதிகளில் நடமாடக்கூடாது. ஒதுக்கப்பட்ட விடுதிகளில் தங்கியிருக்க வேண்டும்.

2.குறிப்பிட்ட விடுதிகளில் தங்கியிருக்க ஆண்களுக்கு அனுமதி இல்லை. இன்னும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

3.இந்த விதிகளை மீறும் குற்றவாளிகள், நாற்சந்தியில் நிறுத்தப்பட்டு சவுக்கால் விளாசப்படுவார்கள். தொடர்ந்து குற்றம் புரிபவர் நாடு கடத்தப்படுவார்.

4.ஒவ்வொரு சனிக்கிழமையும் மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் வேண்டும்.

5.வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் தொழில் செய்தல் கூடாது.

6.யூதர்கள் விபச்சாரிகளை அணுகுதல் கூடவே கூடாது.

*ஆறாவது சார்லஸ் மன்னன் காலத்தில், பொது மகளிர் வெள்ளை நிற உடை உடுத்துக் கைகளில் வெள்ளை நிற ரிப்பன் கட்டியிருத்தல் கட்டாயம். இவர்கள் தெருவுக்கு வருவதாயின், இவர்களின் முன்னே ஒருவர் முரசறைந்து செல்ல வேண்டும். இவர்களுக்கு வருமான வரி விதிக்கப்பட்டு, அவ்வருமானம் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது.

*ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி, இந்திய நாட்டிலும் கணிகையருக்கென்று தனிக் குடியிருப்புகள் இருந்தன. அவர்களுக்கென்று தனியே சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தன.

*தமிழகத்தில் ‘பொட்டுக் கட்டும்’ வழக்கம் வெகு பிரசித்தம். பொட்டுக்கட்டிய தேவதாசிகளைக் ‘கடவுளர் மனைவி’யாக்கிக் கோயில் குருக்களும் தர்மகர்த்தாக்களும் ஆசைதீர அனுபவித்தார்கள்.

*தாசி வீடுகளுக்குக் கடவுள் சிலைகளைக் கொண்டுபோகும் வழக்கம்கூட நடைமுறையில் இருந்ததுண்டு!

*1635ஆம் ஆண்டில், விலைமாதரின் தலைகளை மொட்டையடித்து நடுத்தெருவில் நிறுத்தி, சவுக்கால் அடிக்கும் வழக்கமெல்லாம் இந்த நாட்டில் இருந்திருக்கிறது.

மேற்கண்டவை போல எத்தனை எத்தனையோ சட்டங்கள் இயற்றப்பட்டு, சதை வணிகர்கள் தண்டிக்கப்பட்டும்கூட, ‘அந்த’த் தொழிலை அடியோடு ஒழித்துவிட இயலவில்லை. நாகரிகம், கலை, பக்தி போன்ற  போர்வைகள் போர்த்து, புதிய புதிய உத்திகளைக் கையாண்டு அது நாளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
***************************************************************************************************************

உதவி:

1.‘மதம், மாந்திரீகம், மருத்துவம்’, பா. கலைச்செழியன், பல்கலைப் பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1999.

2. கூகிள்.

3. Wikipedia

***************************************************************************************************************