வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

உலகமகா.....'புருடா' மன்னர்கள்!!!


தற்செயலாக, நேற்று[14.02.2018] 'கலைமகள்'[பிப்ரவரி,2018]' மாத இதழை வாசிக்க நேர்ந்தது. 'தாமிரவருணி கேள்வி-பதில்' பகுதியில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. வாசியுங்கள்.....

நம் முன்னோர்கள் எழுதி வைத்தது நாடி ஜோதிடமாம். சரி.

பிற்கால மனிதர்கள் பற்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். 'பிற்காலம்' என்பதற்கு வரையறை என்ன? அத்தப் பிற்காலம் எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? அவை கோடானுகோடி ஆண்டுகளா? கோடானுகோடி யுகங்களா?

நிலவுலகம் உள்ளவரை பிறந்து வாழ்ந்து மடிகிற அத்தனை மனிதர்களைப் பற்றியும்[ஆயுள், மனைவி, வாரிசுகள், சாதனைகள், வேதனைகள் என்றிப்படி] எழுதி வைத்திருக்கிறார்களா?

பிற்கால மனிதர்களுக்கு என்று 'பொத்தாம் பொதுவா' அடித்துவிட்டு, வாழ்ந்துகொண்டிருகிற அத்தனை பேர்களையும் மூடர்கள் ஆக்குகிறார்கள்.

வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி பிறந்து வாழவிருக்கிற அவ்வளவு பேருக்கும் சுவடிகள் உள்ளனவென்றால், அவற்றின் எண்ணிக்கை என்ன? அவை யாரிடமெல்லாம் உள்ளன? எங்கெல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன?

இந்த விவரங்கள் எல்லாம், அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளுக்காவது தெரியுமா?

'பிரபஞ்சம் முழுமைக்கும்' என்கிறார்கள். எந்தவித அளவுகோல்களால் யாரெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் பரப்பைக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு பட்டியல் தருவார்களா?

இவர்கள் அள்ளி இறைக்கும் புளுகுகளுக்கு அளவே இல்லையே!!!

இவர்களின் இழி செயலைத் தட்டிக் கேட்பார் எவருமில்லையா?

ஆன்மிக வேடம் புனைந்து பொய் சொல்லி, மக்களை மூடர்கள் ஆக்கிப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க அரசியல் சட்டத்தில் இடமேதும் இல்லையா?

மக்கள் நலனில் அக்கறை கொண்டோரே சிந்திப்பீர்!
___________________________
இப்பதிவு, indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

மதவெறியர்களால் அழியப்போவது மதங்களா, மனிதகுலமா?!


#ஷியா முஸ்லிம் என்பதால் சவுதியில் 6 வயது சிறுவன் தனது தாயின் முன் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், சகாரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தனது தாயுடன் மெதினாவில் உள்ள புனிதத் தளத்திற்குச் செல்வதற்காகத் தனது தாயுடன் யாத்திரைக்கு வந்தார். அப்போது டிரைவர் ஒருவர்[சன்னி முஸ்லிம்] அவர்களிடம் ''நீங்கள் ஷியா முஸ்லிமா?'' என்று கேட்டுள்ளார்.
அதற்கு சகாரியாவின்  தாய் ''ஆம்'' என்று கூற, டாக்ஸியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த டிரைவர், சகாரியாவிடம், ''நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன்'' என்று கூறிக்கொண்டே சகாரியாவின் தொண்டையில் குத்திக் கொலை செய்தார். இதனைக் கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்தார்'' என்று செய்தி வெளியானது
இதனைத் தொடர்ந்து சகாரியாவின் கொலைக்கு நியாயம் வேண்டி, அந்நாட்டு முற்போக்காளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும் #JusticeforZakaria என்று பதிவிட்டு அவரது மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்#['தமிழ் இந்து, 13.02.2018].

சகாரியா அல் ஜாபர்.....

நன்றி: makkalviruppam.blogspot.com

காதல் வெறியோ, காம வெறியோ, மத வெறியோ வெறி பிடித்து அலைபவர் எவராயினும் அவர்களால் மனித சமுதாயம் அளவிறந்த அல்லல்களுக்கு உள்ளாகி, ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் அழிந்தொழியும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்டது போன்ற சூதுவாதற்ற மழலைச் செல்வங்களைச் சிதைத்து அழிக்கும் கொலைவெறியர்கள் பிற மதங்களிலும் இருக்கிறார்கள்.

இந்தக் கொலைகாரர்களுக்கு எதிராகப் பல்முனைத் தாக்குதல் நிகழ்த்துவது உடனடித் தேவையாகும். மனித நேயம் போற்றும் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
================================================================================
அமேசான் கிண்டிலில் என் படைப்புகள்.....