சனி, 2 மார்ச், 2019

முன்னாள் நம்பர் 1 குமுதத்தில் வெளியான 'உயர்தர' ஒரு பக்கக் கதை!

முன்னொரு காலத்தில் தரத்தில் நம்பர் 1 ஆக இருந்த 'குமுதம்' வார இதழில் வெளியான என் கதை. வாசித்து மனம் நெகிழுங்கள்!

பீரோவில் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவது போல் பாவனை செய்துகொண்டே, +2 மாணவன் குணசீலனை நோட்டம் விட்டார் நூலக உதவியாளர் ஆறுமுகம்.

அலைபாயும் திருட்டுப் பார்வையுடன் சட்டைப் பையிலிருந்து ஒரு பிளேடை எடுத்து, படித்துக்கொண்டிருந்த பத்திரிகையின் ஒரு தாளில் கால் பக்க அளவுக்குத் துண்டித்தான் குணசீலன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அந்தத் துண்டுக் காகிதத்தை மடித்துச் சட்டையின் உள் பாக்கெட்டில் செருகினான்; எழுந்து நடந்தான். ஆறுமுகம் பின்தொடர்ந்தார்.

குணசீலன் முதல்தர மாணவன். தினமும் தவறாமல் செய்தித்தாள் படிப்பான். ஆசிரியர்களிடம் நல்ல பெயர். இவனா இப்படிச் செய்தான்? ஆறுமுகத்தால் நம்ப முடியவில்லை.

நூலக அறையிலிருந்து வெளியேறவிருந்த குணசீலனைத் தடுத்து நிறுத்தி, நூலகரிடம் அழைத்துப் போனார் ஆறுமுகம். “அந்த வினா விடைத் திருடன் இவன்தான் சார்” என்றார்.

“சார்...இல்லை சார்...அது வந்து சார்...” நினைத்ததைச் சொல்ல இயலாமல் நாக்குழறினான் குணசீலன்.

“உனக்கு ரொம்ப நல்ல பையன்னு பேராச்சே. நீயா இப்படி நடந்துகிட்டே? எல்லாருக்கும் பயன்படுற வினா - விடைப் பகுதியை வெட்டி எடுக்கலாமா? தலைமை ஆசிரியரிடம் சொல்லி உன்னை.....”

“சார், நான் வினா விடையைத் திருடல சார். அது வந்து.....”

“கையும் களவுமா பிடிபட்டும் இப்படிப் பொய் சொல்றியேடா.”

“நான் பொய் சொல்லல சார். என் அப்பா கள்ளச் சாராயம் காய்ச்சி போலீசில் பிடிபட்டுட்டார். இந்தப் பத்திரிகையில், அவர் ஃபோட்டோவோட செய்தி வந்திருக்கு. இதைப் பார்த்தா எல்லாரும் என்னைக் கேவலமா பார்ப்பாங்களேன்னுதான் இந்தத் தப்பைப் பண்ணிட்டேன்.” அழுதுகொண்டே பத்திரிகையில் துண்டித்த பகுதியின் மறு பக்கத்தைச் சுட்டிக் காண்பித்தான் குணசீலன்.

ஃபோட்டோவில், சாராயப் பானையைத் தலையில் சுமந்துகொண்டிருந்தார் குணசீலனின் அப்பா. அவரைச் சுற்றிப் போலீஸ்காரர்கள். படத்துக்குக் கீழே விரிவான செய்தி.

“சே! ஒரு உத்தமமான புத்திசாலிப் பையனுக்கு இப்படி ஒரு அப்பனா?” 

நூலகரின் கண்கள் லேசாகக் கலங்குவது தெரிந்தது.
========================================================================

குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு என் நன்றி.



புதன், 27 பிப்ரவரி, 2019

''மட்டும்''.....உளவியல் கதை!

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி தனலட்சுமியிடம், “உன் மருமகளுக்கு ஃபோன் பண்ணிடு” என்றார் முத்துசாமி.

''எதுக்கு.”

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சி. பேரப் பிள்ளைகளைப் பார்க்கணும்னு தோணலையா? வந்து ஒரு மாசம் இருந்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டே இருக்கான் நம்ம புள்ள. நாளை  சென்னை கிளம்புவோம். விசயத்தை அவளுக்குச் சொல்லிடு” என்றார் முத்துசாமி.

“ஊருக்கு வர்றோம்னு சொன்னா பதிலே சொல்லாம ஃபோனை வெச்சுடுறா. அவனுக்குச் சொன்னா போதாதா?” என்றாள் தனலட்சுமி.

“போதாது. அவ ரோசக்காரியாச்சே. அவன் வேலைக்குப் போனதும் இவ வீட்டைப் பூட்டிட்டுப் போயிடுவா. நாம வாசப்படியில் காத்துக் கிடக்கணும். இப்பவே ஃபோன் பண்ணிடு.”

ஃபோனை உயிர்ப்பித்து, “நாளை கழிச்சி நானும் மாமாவும் அங்கே வர்றோம். அது வந்தும்மா...இங்கே ரெண்டு மூனு கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருக்கு. ரெண்டு நாள் மட்டும் தங்கிட்டு ஊர் திரும்பிடுவோம்.” -'மட்டும்' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தனலட்சுமி.

“சரிங்க அத்தை” என்றாள் மருமகள்  வினிதா.

பேசி முடித்து செல்ஃபோனை அணைத்தபோது  முத்துசாமி சிரித்தார்; “கல்யாண அழைப்பு இருக்குன்னு எதுக்குப் பொய் சொன்னே?” என்று கேட்டார்.

“நாம ரெண்டு நாள்தான் இருப்போம்னு முன்கூட்டியே சொல்லிட்டா, கொஞ்சம் மரியாதை கொடுத்து உபசரிப்பா. சொல்லலேன்னா, நாள் கணக்கில் கேம்ப் போட்டுடுவோமோன்னு முகம் கொடுத்துப் பேச மாட்டா. உபசரிப்பும் படு மட்டமா இருக்கும்” என்றாள் தனலட்சுமி.

“நீ ரொம்பத்தான் புத்திசாலி.”
========================================================================

இப்பதிவு, indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.