செவ்வாய், 22 டிசம்பர், 2020

விந்தைமிகு 'விந்து'!!!

இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்தும் களவாடிய செய்தித் துணுக்குகளின் தொகுப்பு:

*நுண்ணோக்கி மூலம் தன்னுடைய 'விந்து'வையே ஆராய்ந்த Antony van Leeuwenhoek என்பவர், 1677ஆம் ஆண்டு, முதல் முறையாக விந்தணுக்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார்.

*விந்துத் திரவம் வேறு. உயிரணு வேறு. 

*பிராஸ்டேட் சுரப்பியிலிருந்து உற்பத்தியாவது வழவழப்பான விந்துத் திரவம். அந்தத் திரவத்தில் இடங்கொண்டிருப்பவை[மிதப்பவை] உயிரணுக்கள்; கரு உருவாகக் காரணமானவை; கருமுட்டையை நோக்கி நீந்திச் செல்பவை.  

*தலை, நடுப்பகுதி, வால் என்று மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டது உயிரணு. பரம்பரைக் குணங்கள் இடம்பெற்றிருப்பது தலைப்பகுதியில்.

*சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்துச் செல்கள்[உயிரணுக்கள்] அதில் உள்ளன என்று அர்த்தம். விந்துச் செல்கள் குறைவாக இருந்தால் விந்து மிகவும் நீர்த்துப்போய் இருக்கும்.

*உடம்பின் தட்பவெப்ப நிலையைப் பொருத்து, வெளியேற்றப்படும் விந்து கெட்டியாகவோ வழுக்கும் திரவமாகவோ இருத்தல்கூடும். புகை பிடித்தல், அதிக வெப்பத்தில் புழங்குதல்[மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்துதல் உட்பட] போன்ற பழக்கங்கள் நீர்த்துப்போகச் செய்யும்.

*ஒரு சராசரி ஆண் தன் வாழ்க்கையில் சுமார் 17 லிட்டர் விந்தணுக்களை வெளியேற்றுவதற்கான திறன் படைத்தவன் என்று உடல்கூற்று & மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். வயதாகும்போது விந்தணு உற்பத்தி குறைகிறது.

*உலகச் சுகாதார அமைப்பு(WHO), மி.லி.க்கு 15 மில்லியன் விந்தணுக்கள் அல்லது 39 மில்லியன் விந்தணுக்கள் இருப்பதானது ஒரு பெண்ணைக் கருவுறச்செய்து குழந்தை உண்டாக்கப் போதுமானது என்கிறது. 10 மில்லியனுக்கும் குறைவாக இருப்பது மலட்டுத்தன்மையைக் குறிக்கிறது.  தற்போது இந்தியாவில் 27.5 மில்லியன் தம்பதிகள் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.

*ஆஜானுபாகுவான ஆண்கள் எல்லாரிடமும் வீரியம் நிறைந்த விந்து இல்லையாம். கட்டைக் குரல் கொண்டவர்கள் நிலையும் இதுதானாம்.

*புணர்ச்சியின்போது, மிகக் குறைந்த அவகாசத்தில் விந்து வெளிப்படுவதை, 'விந்து முந்துதல்' என்பார்கள். அதற்கான காரணங்களாக அடுத்து வருபவை  சொல்லப்படுகின்றன.

பதற்றம், மிகை வெப்பம், நீரிழிவு, நரம்புக் கோளாறு, பிராஸ்டேட் சுரப்பியில் கோளாறு, பயம் போன்றவை.

*கருவுறாமை நிகழ்வுகளில் ஆண்களின் பங்களிப்பு 50 சதவிகிதம் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*ஓரு முறை வெளியேறும் விந்துவின் அளவு சுமார் 1.5 முதல் 5 மில்லிலிட்டர்[2 முதல் 6 மில்லிலிட்டர் என்றும் சொல்லப்படுகிறது]ஆகும்.

*பாய்ச்சப்பட்ட விந்துவின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை (பாய்ச்சப்பட்ட இடத்தைப் பொருத்தது).

*இயல்பான வாழ்க்கைச் சூழலில், ஓர் ஆண் மகன் குறைந்தபட்சம் 5000 முறை விந்துவை வெளியேற்றுகிறான்.

*விந்து உற்பத்தியானது விரைகளில் நிகழ்கிறது. அவை நிறைந்திட 64 நாட்கள் தேவை. பின்னர், குறைவதும் நிறைவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

*உற்பத்தியானதிலிருந்து பாய்ச்சப்படும்வரையிலான அதன் ஆயுட்காலம் 2.5 மாதங்கள்.

*விந்துவுக்கு வாசனை உண்டு; சுவையும் உண்டு. ஆணுக்கு ஆண் அவை மாறுபடும்.

* ஒரு தேக்கரண்டி விந்துவின் பெறுமானம்: 7 கலோரி.

*ஒரு சதவீதத்திற்கும் குறைவான பெண்கள் விந்து ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://kadavulinkadavul.blogspot.com/2020/12/blog-post_22.html

திங்கள், 21 டிசம்பர், 2020

"போய்யா...நீயும் உன் கடவுளும்"!

அமேசான் கிண்டிலில் இடம்பெற்றுள்ள என் நூல்களில் 'பத்து ரூபாயில் கடவுள்' என்னும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அதிலுள்ள முதல்[முதல் தரமானதும்கூட] கதைக்கான தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. தலைப்பை மட்டும் மாற்றியமைத்து["போய்யா நீயும் உன் கடவுளும்"] ஏற்கனவே வாசிக்காதவர்களின் வாசிப்புக்காகப் பதிவு செய்துள்ளேன்.

சிக்குப் பிடித்த தலைக்குச் சீகக்காய் தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களில் கணிசமானவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப்போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, இவர்களில் பலரும் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறியவர்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்.

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய்[அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு அவர்கள்  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்கமாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காக முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனைவானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய் கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?

அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலையவிட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நான் நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

''இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

''கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.”[கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே... போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.