திங்கள், 9 மே, 2022

'இணைய வலை'க்குள் சிக்கித் தவிக்கும் இளைய தலைமுறை!!!

'இளையத் தலைமுறை'யினரை  `இணையத் தலைமுறை'  என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இணையத்தில் புழங்குவது வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 

அவர்களது கைகளில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில் ஆபாசப் படங்களும், அந்தரங்கக் கட்டுரைகளும் தாராளமாகக் காணக்கிடைக்கின்றன. 

இது நவீன உலகின் சாபக்கேடு என்றால் அதில் தவறேதும் இல்லை. காரணம்.....

ஒரு காலத்தில் இலைமறை காயாக மட்டுமே புழக்கத்தில் இருந்துவந்த ஆபாசம் இன்று, 'எங்கெங்கு காணினும் ஆபாசமே' என்று சொல்லும் அளவுக்கு நுண் கிருமிகளாகப் பரவிக்கொண்டிருக்கிறது. 

குளியறைகளிலும், ஒதுக்குப் புறமான இடங்களிலும் மறைத்து மறைத்துப் படித்த ஆபாசக் கதைகளையும் தத்ரூபமான காட்சிகளையும் இன்று தங்களுடைய தனி அறையிலேயே அச்சமில்லாமல் படிக்கிறார்கள்; கண்டு களிக்கிறார்கள். களம் அமைத்துக் கொடுப்பவை  லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள் ஆகியவை.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் தத்தம் பங்குக்குக் கவர்ச்சி மீம்ஸ்களை அள்ளித் தெளிக்கின்றன. 

இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசச் செய்கைகள், அரை நிர்வாணக் காட்சிகள், இளைஞர்கள்-இளம்பெண்களை மட்டுமே குறிவைத்து எடுக்கப்படும் கவர்ச்சித் திரைப்படங்கள் என இவையும் தம் பங்குக்கு ஆபாசத்தைத் திணி திணி என்று திணிக்கின்றன.

இங்கே குறிப்பிடத்தக்க இன்னொரு 'பயங்கரம்'.....

இவற்றைவிடவும், இளசுகளைச் சீரழித்துக்கொண்டிருப்பது இணையத் தளங்களின் ‘லைவ்-சாட்’ எனப்படும் வசதி.

இந்த இணையத் தளங்களில் நுழைவுக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொண்டால், நம்முடைய கட்டளைக்குத் தலையாட்டும் பொம்மைகளைப் போன்ற பெண்கள் நேரலையில் தோன்றுவார்கள். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இருந்தும் பலர் இந்த இணையத் தளங்களில் இணைந்திருப்பதால், ஆசைக்கேற்ப ஆட்களைத் தேர்வு செய்யமுடியும். 

இவை பல இளையோரின் ஆசைகளைத் தீர்க்க வழியாக அமைகின்றன. தங்களை நல்லவராகச் சமூகத்தில் காண்பிக்க நினைப்பவர்கள் இத்தகைய ஆபாச இணையத் தளங்கள் வழியாகத் தங்களின் அந்தரங்க ஆசைகளைச் தீர்த்துக்கொள்கிறார்கள். 

மேலும், உடல் அழகை வெளிப்படுத்த விரும்பியும், ஆண்மையின் பெருமையை வெளிக்காட்டும் ஆசையாலும், ஆண், பெண் நட்புகளை உருவாக்கும் நோக்கத்துடனும், நிர்வாண உடலைப் பொழுதுபோக்காகக் காட்ட நினைத்தும் பலர் இத்தகைய இணையத் தளங்களில் இணைகின்றனர். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், இணைகிறார்கள். 

அந்தரங்கக் கதைகள், ஆபாச வீடியோக்கள், 'லைவ் செக்ஸ் சாட்' சம்பந்தமான உலக மார்க்கெட்டில் இந்தியாவும் இடம்பிடித்து முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த வேகம் இணையத் தலைமுறையினரின் எதிர்காலம் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், ஆசிரியர்-மாணவர் இடையிலான காதல், கள்ளத்தொடர்பு, கூட்டாக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை போன்ற பல பிரச்சினைகளுக்கு இத்தகைய ஆபாசப் படங்கள் காரணமாகிவிடுகின்றன. அதனால்தான், ஆபாசத்தை விரும்பும் இளைய தலைமுறையினர் பற்றிய கவலை நம்மிடையே அதிகரித்திருக்கிறது.

குறிப்பாகப் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனநிலை விவரிப்புக்கு அப்பாற்பட்டதாக உள்ளது!

https://www.dailythanthi.com/amp/News/Sirappukatturaigal/2018/11/03150115/Internet-generation.vpf இல் வெளியான கட்டுரை, சற்றே சுருக்கிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிறு, 8 மே, 2022

இந்தியக் 'குடிமகள்'கள்!!!

2016 ஆம் ஆண்டில், 'ஜெண்டர் ஆல்கஹால் அண்ட் கல்ச்சர் (Gender Alcohol and Culture) என்ற அமைப்பு, உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியுடன்  இந்தியப் பெண்களின் குடிப்பழக்கம் குறித்து ஆய்வு நிகழ்த்தியது.

இதுவே, நம் 'குடிமகள்'கள் குறித்துச் செய்யப்பட்ட முதல் ஆய்வு ஆகும்.

இது கண்டறிந்த முடிவின்படி இந்தியாவில் 5%[7.5% என்கிறது மற்றொரு ஆய்வு]  பெண்கள் மது அருந்துகிறார்களாம்[வட மாநிலங்களில் இந்த எண்ணிக்கை 10-11%].

சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்தட்டுப் பெண்களிடம்தான் குடிப்பழக்கம் அதிகம் காணப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்துப் பெண்களும் உடல் வலியைக் குறைப்பதற்காகக் குடிக்கிறார்கள்..

மேற்கத்திய நாடுகளை நோக்க 5%, 7.5% என்பவையெல்லாம் குறைவுதான் என்றாலும், குடியால் இவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அயல் நாட்டுப் பெண்களைவிடவும் அதிகம். காரணம்.....

அவர்கள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவாக இருப்பதால், உணவுடன் சேர்த்து மதுவும் உட்கொள்கிறார்கள் அவர்கள். இவர்கள் உட்கொள்வதோ போதைக்காக.

அவர்கள், hard liquor[?] எனப்படும் மதுவைக் குறைவாகவே குடிக்கிறார்கள். ஒயின், பீர், வோட்கா, ஜின் போன்ற உடம்புக்கு நன்மையளிக்கிற[ஓரளவுக்கு?] மது வகைகளை அளவாக அருந்துகிறார்கள். இங்கே தண்ணீர் கலக்காமல் 'ரா'வாக அடிக்கிற அம்மணிகளும் உள்ளனர்.

ஆண்களைப் போலவே, முட்ட முட்டக் குடிக்கும் மொடாக் குடிக் கோதையரும் இங்கே இருக்கிறார்கள்.

ஆண்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மது அருந்துகின்றனர். பெண்கள் திருப்தியின்மை, விரக்தி,  சோர்வு போன்றவற்றிலிருந்து விடுபடுவதற்குக் குடிக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் உடலில் உள்ள நீரின் அளவு ஓர் ஆணின் உடலில் இருப்பதை விட மிகவும் குறைவு. அதனால், அவர்கள் அருந்தும் மதுவை  உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பெண்களின் ஹார்மோன்கள் மாற்றுகின்றனவாம்; வேறு பல உடல்ரீதியான சிக்கல்களையும் அவை உண்டுபண்ணுகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மதுவுக்கு அடிமையாகும் பெண்கள் ஆண்களைவிடவும் மனத்தளவிலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆண்களிடமிருந்து போதிய ஆதரவும் கிடைப்பதில்லை.

கணிசமான அளவிலான குடிமகள்கள் வீட்டைவிட்டே துரத்தப்படவும் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சமூக விரோதிகளிடம் அகப்பட்டு, கடத்தல், விபச்சாரம் போன்ற தொழில்களில் தள்ளப்படுகிற அவலங்களுக்கு நேர்ந்துகொண்டிருக்கின்றன.

மது குடிக்கும் இந்தியப் பெண்கள் குறித்த இந்த ஆய்வு 2016இல் நிகழ்த்தப்பட்டது['பிபிசி']. இதன் பின்னரான ஆண்டுகளில் நம் 'குடிமகள்'களின் எண்ணிக்கை குறைந்திருக்குமா?

"ஊ..........ஹூ..........ம்"