புதன், 18 மே, 2022

'Big Bang'[பெரு வெடிப்பு] தெரியும்! அதென்ன 'Big Crunch'?!...'Big Rip?!

'Big Bang' என்று சொல்லப்படுகிற 'பெரு வெடிப்பு'இன் மூலம் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ, அது போலவே  2.8 பில்லியன் - 22 பில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுருங்கி ஒரு கருந்துளையாக அது மாறிவிடும் என்று நம்புகிறார்கள் விஞ்ஞானிகள்[நமது பேரண்டம் இப்படிச் சுருங்கிப் பின் ஒரு பெரு வெடிப்பினைத் துவங்கி விரிவடையும். மீண்டும் சுருங்கும். ஆனாலும் அது தோன்றுவதும் மறைவதுமாக இருந்துகொண்டுதான் இருக்கும். அதாவது, பெரு வெடிப்பு மற்றும் 'பெரும் குழைவு' ஆகிய நிலைகளைப் பிரபஞ்சம் மாறி மாறி அடையும் -'விக்கிப்பீடியா'].

லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் வானியற்பியல் விரிவுரையாளர் 'தாமஸ் கிச்சிங்' என்பவர்,  "ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உட்பட, நீண்ட காலமாக விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது மற்றும் எல்லையற்றது என்று நினைத்தனர். ஆனாலும், அதற்கு ஒரு முடிவு இருக்கும் என்பது அறியத்தக்கது" என்கிறார். 

அந்த முடிவு எப்படி அமையலாம் என்பதற்கு மூன்று கோட்பாடுகள் உள்ளன என்கிறார்கள்.

முதல் கோட்பாடு: 

விரிவடைந்துகொண்டிருக்கும் பிரபஞ்சம் ஒரு பெரிய பிளவுடன்[Big Rip] முடிவடையும் என்று நம்பப்படுகிறது. காரணம், பிரபஞ்சத்தின் விரிவாக்கச் சக்தி அதில் உள்ள ஈர்ப்பு விசையைவிட வலுவானது என்பதே. பிரபஞ்சத்தின் விரிவாக்கம் 'அதிகபட்ச அளவை'த் தொடும்போது பிரபஞ்சம் பிளவுபடுதல் நிகழும். 

விரிவாக்கம் ஒரு எல்லையைக் கடந்துவிடும் நிலையில், உருவாகும் சக்தி விண்மீன் திரள்களைத் துண்டாக்கும்; பூமி முதலான கோள்களைச் சிதைக்கும். 

கடந்த ஆண்டு, டென்னிசியில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் கணித உதவிப் பேராசிரியரான 'மார்செலோ டிஸ்கான்சி', இயற்பியல் பேராசிரியர்களான 'தாமஸ் கெபார்ட்' மற்றும் 'ராபர்ட் ஷெரர்' ஆகியோருடன் இணைந்து, 'பிக் ரிப்'பிற்கான புதிய கணித மாதிரியை உருவாக்கினார்.

இரண்டாம் கோட்பாடு:

இது, 'பெரும் அண்டக்குழைவு'[Big Crunch] என்று அழைக்கப்படுகிறது.

பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டிருக்கையில்,   புவியீர்ப்பு ஆதிக்கச் சக்தியாக மாறி, பிரபஞ்சத்தை சுருங்கச் செய்து, நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் முழு விண்மீன் திரள்களையும் ஒன்றோடொன்று மோதச் செய்து அழிவை உண்டுபண்ணும்.

மூன்றாவது கோட்பாடு: 

இது, பிரபஞ்சம் ஒரு பெரிய உறைபனியால்[Big Freeze] முடிவடையும் என்று கூறுகிறது. அது, 'வெப்ப உறைவு'[Heat Death]'] என்றும் சொல்லப்படுகிறது.

இவ்வாறான காரணங்களால் அழியும் இந்தப் பிரபஞ்சம், பின்னர் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் பெருவெடிப்பினால் மீண்டும் தோன்றுவது சாத்தியமாகலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் அதன் அழிவுக்கான செயல்முறை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறுகின்றனர்[Certain researchers even suggest the process of its demise has already begun].

இங்கே நாம் கவனத்தில் கொள்ளத்தக்கது என்னவென்றால்.....

பேரழிவு[Big Crunch] நேரும்போது பிரபஞ்சக் கரைசலுக்குள் கலந்து நம் மனித குலம் காணாமல் போகும் என்பதுதான்!

நம்மைப் போன்ற சாமானியர்கள் அழிந்தொழிவது ஒரு பொருட்டல்ல; கடவுளின் அவதாரம் என்றும் மரணத்தை வென்றவர்கள் என்றும் நம்மவர்களால் புகழ்ந்து வழிபடப்படுகிற அவதாரங்களும் மகான்களும்கூட, பிரபஞ்ச அழிவு என்னும் ஊழிப் பெருவெள்ளத்தில் கரைந்து மறைந்து போவார்களா?

மாறாக.....

கடவுளின் திருவடிகளின் கீழ் அமர்ந்து, பிரபஞ்சப் பேரழிவுக் காட்சியை வேடிக்கை பார்த்து மகிழ்ந்துகொண்டிருப்பார்களா?! ஹி...ஹி...ஹி!!!

***தலைப்புக்குத் தேவையான தகவல்களை[தெளிவாகப் புரிந்தவை] மட்டுமே தொகுத்துப் பதிவாக்கியிருக்கிறேன். கட்டுரையை முழுமையாக வாசிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் முகவரியைக் 'கிளிக்' செய்து உள்நுழையலாம்.

https://www.wired.co.uk/article/how-will-universe-end  

செவ்வாய், 17 மே, 2022

இந்திய உளவுத்துறை எச்சரிக்கையும் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கமும்!!!

#இலங்கையில் மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, தி இந்து நாளிதழ் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைப் புலனாய்வுத் துறையினர், இந்தியப் புலனாய்வுத் துறையிடம் விடயங்களை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து, இது சாதாரணமான ஒன்றுதான் என இந்திய உளவுத்துறை, இலங்கைப் புலனாய்வுத் துறையிடம் கூறியுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இந்தத் தகவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது[https://www.bbc.com/tamil/sri-lanka-61454566]#

இது, நேற்று[16.05.2022] அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள செய்தி.

நம்மை வியப்பில் ஆழ்த்துவது என்னவென்றால்.....

'சாதாரணமான ஒன்றுதான்' என்று சொல்லுகிற உளவுத்துறை, தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொண்டது எப்படி?

இலங்கையில் 'விடுதலைப் புலி' இயக்கத்தினர்[அப்பாவித் தமிழ்ப் பொதுமக்களும் உள்ளடக்கம்] முற்றிலுமாய் அழிக்கப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை.

உண்மை இதுவாக இருக்கையில், பிழைப்புக்கு வழி தேடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் தமிழர்கள், குழு சேர்ந்து இலங்கை வந்து தாக்குதல் நடத்தப்போகிறார்கள் என்ற ஒரு செய்தியை இந்திய உளவுத்துறை ஏன் வெளியிட வேண்டும்? 

உரிய விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசிடம் இந்திய உளவுத்துறை தெரிவிக்குமாம். புலியோ பொதுமக்களோ, அவர்களைக் கட்டுப்படுத்துவது இலங்கை அரசின் வேலை. அதில் இந்திய உளவுத்துறை பங்காற்றுவதன் உள்நோக்கம் என்ன?

பங்காற்றும் அளவுக்கு இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்குச் செய்த தீமைகள்தான் என்ன? அவர்கள் இந்தியாவின் எதிரிகளா?

மேற்கண்ட அனுமானச் செய்தி புலிகள் மீது வெறுப்புணர்வை வளர்க்காது. ஏனென்றால், புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருப்பதற்கான ஆதாரம் எதையும் இலங்கை அரசோ இந்திய அரசோ வெளியிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்.....

இந்த உறுதிப்படுத்தப்படாத செய்தி, தமிழ் மக்களின் மீது வெறுப்புணர்வை வளர்க்கும், அல்லது, இலங்கையில் அரை வயிற்றுக்குக் கஞ்சிக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் தமிழர்களைச் சிங்கள அரசு சந்தேகக் கண்கொண்டு பார்க்கத் தூண்டும் என்பது உளவுத்துறைக்குத் தெரியாதா?

விடை அறிய இயலாத கேள்விகள் இவை!?

ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தவர்கள் இவற்றிற்கு விடை கண்டறிய முயற்சி செய்யலாம்!