திங்கள், 5 செப்டம்பர், 2022

14 ஆண்டுக் கர்ப்பம்!... கடவுள் நிகழ்த்திய அதிசயம்!!

16 குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு தாய், 16ஆவது பிறந்த அடுத்த ஆண்டிலேயே தன்னுடைய 17ஆவது குழந்தையை எதிர்பார்க்கிறார்' என்றால் ஆச்சரியப்படாதீர்கள்.

இந்த அதிசயம் கடவுளால் நிகழ்ந்தது என்பதை நம்புங்கள்.

அமெரிக்காவின் 'நார்த் கரோலினா'வில் வசிப்பவர்கள் 'ஹெர்னாண்டஸ்', 'கார்லோஸ்' தம்பதியர்.


[பதினாறும் அழகோ அழகு! தாய்மார்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டாம். கண் பட்டுடும்!!]

இந்த ஜோடிதான் 14 ஆண்டுகளில் 16 குழந்தைகளைப் பெற்று[ஆறு ஆண்களும் பத்துப் பெண்களும்]அசுர சாதனை நிகழ்த்தியுள்ளது[பெயர்ப் பட்டியல் கீழே].


அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஹெர்னாண்டஸ் அம்மையார் 17ஆவது குழந்தையை ஈன்று புறந்தர இருக்கிறாராம்.


"நான் 14 ஆண்டுகளாகக் கர்ப்பமாக உள்ளேன்[!!!!!]. 17ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உணர்கிறேன்" என்று அவர் ஒரு பேட்டியில் கூறினாராம்.


இந்தப் பெண் கடந்த ஆண்டு மே மாதம் தன் இளைய குழந்தையான கிளேட்டனைப் பெற்றெடுத்தார். இவர் தனது கடைசிக் கர்ப்பம் மிகவும் கடினமானதாக இருந்தது என்று முன்பு கூறியுள்ளார். எத்தனை இடர்ப்பாடுகள் நேரினும் 20 குழந்தைகளைப் பெற்றுச் சாதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறார்.


20ஆவதையும் பெற்று முடித்தால், இவரின் குடும்பம் 10 ஆண் குழந்தைகளையும் 10 பெண் குழந்தைகளையும் கொண்டதான பெருமையைப் பெறும் என்று பெருமிதப்பட்டிருக்கிறார்.


ஆனாலும், இவர் இதற்காகக் கர்வம் கொள்ளவில்லை. காரணம்.....


"நாங்கள் குழந்தைகளைக் கேட்கிறோம். கொடுப்பது கடவுளின் விருப்பம்" என்று அடக்கி வாசிக்கிறார்.


பேரருளாளனான கடவுளை ஒவ்வொரு குழந்தைப் பேற்றின்போதும் நன்றியுடன் நினவுகூரும் ஹெர்னாண்டஸ், குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் மருத்துவமனைச் செவிலியர்களையும் நெஞ்சு நெகிழப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


"கடந்த ஆண்டு நீங்கள் இங்கு இருந்தீர்கள், ஒவ்வொரு ஆண்டும் உங்களைப் பார்க்கிறோம்" என்று செவிலியர்கள் கூறுகிறார்களாம். இதன் மூலம் அவர்கள் அம்மையாரைப் பாராட்டுகிறார்களா நக்கலடிக்கிறார்களா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்!


எது எப்படியோ, இவரைப் போன்ற அப்பாவிப் பெண்கள் இருக்கும்வரை கடவுளின் 'கொட்டமும் கும்மாளமும்' தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும்!!


* * * * *


குழந்தைகளின் பெயர்ப் பட்டியல்[மூன்று செட் இரட்டையர்கள்]: கார்லோஸ் ஜூனியர், 14, கிறிஸ்டோபர், 13, கார்லா, 11, கெய்ட்லின், 11, கிறிஸ்டின், 10, செலஸ்டி, 10, கிறிஸ்டினா, 9, கால்வின், 7, கேத்தரின், 7, காலேப், 5, கரோலின், 5, கமிலா, 4, கரோல், 4 சார்லோட், 3, கிரிஸ்டல், 2, மற்றும் கிளேட்டன், 1.


 Times Now Digital - Yesterday 7:38 am


ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

'ஒரு சொல்' பதிவு!

இன்று காலை 08.00 மணி அளவில், தொலைக்காட்சியில் வெளியாகிக்கொண்டிருந்த ஒரு செய்தி என் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அது.....

'ஒரு சொல் பதிவு'

தத்தம் சமூக வலைத்தளங்களில் தத்தமக்குப் பிடித்ததும், வாசிப்போரை ஈர்ப்பதுமான ஒரே ஒரு 'சொல்'ஐ மட்டும் பதிவு செய்தல் என்னும் புதிய நடைமுறை இது.

உலக அளவில், மிகக் குறுகிய கால அளவில் இந்த 'ஒரு சொல் பதிவு' பதிவர்களிடையே வெகுவாகப் பிரபலம் ஆகிவிட்டதாம்.

அமெரிக்க ஜனாதிபதி 'ஜோ பிடன்' இன்று ட்விட்டரில் 'ஜனநாயகம்' என்பதை ஆங்கிலத்தில் ‘democracy’ என்று பதிவிட்டார். 

அடுத்த சில நொடிகளில், நாசாவின் ட்விட்டர் பக்கத்தில், ‘universe’ என்ற சொல் பதிவிடப்பட 'ட்விட்டர்'இல் இந்த ஒரு வார்த்தைப் பதிவு [Tweet] பரபரப்பை உண்டுபண்ணியது. 

உலகின் பெரிய தலைவர்களும், பல துறைப் பிரபலங்களும் இந்த ஒரு சொல்லை 'ட்வீட்' ஆகப் போட்டுவருகிறார்கள்.

Cm stalin tweet one word tweet and ntk and more partys are twitter viral

'அதிமுக'வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘எடப்பாடியார்’ என்று எடப்பாடியார் பதிவிட, தாங்களும் தங்கள் பங்குக்குத் திமுக, நாம் தமிழர் என பல்வேறு கட்சித் தலைவர்களும் பல்வேறு சொற்களைப் பதிவிட்டு வருகிறார்கள். 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'திராவிடம்' என்றும், நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்' என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 'தமிழன்' என்றும், சீமான் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்த்தேசியம்' என்றும் பதிவிட, தத்தம் பக்கங்களில் பாரட்டுவதும் பழிப்பதுமான விமர்சனங்களைக் கொட்டித் தீர்த்துவிட்டார்களாம் இணையவாசிகள்.

பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் இந்த 'ஒரு சொல் பதிவு'க்குத் தத்தம் பங்களிப்பைச் செலுத்திவிட்ட நிலையில், பதிவர்கள் வரிசையில் 'முதல் நிலை'[நம்பர்1!--- ஹி... ஹி... ஹி!!!] பெற்றுள்ள 'பசி'பரமசிவம் பதிவிடவிருக்கும் அந்த 'ஒரு சொல்' என்ன என்பதை அறிந்திடப் பேராவலுடன் பதிவருலகம் காத்திருக்கும் என்பதை அடியேன் உய்த்துணர்ந்துள்ள காரணத்தால், அந்த ஒரு சொல்லை இப்போது பதிவு செய்கிறேன். அது.....

'நன்றி'![நீங்கள் எதிர்பார்த்த 'ஹி... ஹி... ஹி!!!' அல்ல].

மானுட மாண்பை வளர்க்கும் மகத்தான சொல் இது!

பகைவனின் மனதையும் பக்குவப்படுத்தி நண்பனாக்கும் மாயச் சொல் இது!!

உலகின் ஒட்டுமொத்த மனிதர்களையும் ஒருங்கிணைக்கும் வலிமை வாய்ந்த ஒற்றைச் சொல் இது!!!

தங்களின் வருகைக்கு நன்றி.

நன்றி... நன்றி... நன்றி!

==========================================================================

குறிப்பு:

'ஒரு சொல் பதிவு' பற்றி விரிவாக எழுதியதால், இப்பதிவு, 'நன்றி'என்னும் ஒரு சொல்லில் அமையாமல்போனது அறியத்தக்கது.