வெள்ளி, 1 மார்ச், 2024

பக்தர்களை கடும் பதற்றத்திற்குள்ளாக்கும் ஒரு கத்துக்குட்டிப் பகுத்தறிவாளனின் கேள்விகள்!!!

 படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள் என்று சொல்லி, பக்தர்களை நம்பச் செய்திருக்கிறார்கள் மகான்கள் என்று போற்றப்பட்டவர்கள்.

அவர்களிடம் அவர்கள் கேட்காத கொஞ்சம் கேள்விகளை இப்போது அவர்களிடம் நாம் கேட்கிறோம்.

*படைப்புத் தொழிலை முதன்முறையாக எப்போது அவர்[கடவுள்] தொடங்கினார்?

*பிரபஞ்சத்தில் உள்ள உலகங்கள், உயிர்கள் என்று அனைத்தையும் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாகப் படைத்தாரா, இல்லை, தொகுதி தொகுதியாகவா?

*தான் படைத்த உலகங்களை, அழியாமல் தானே காப்பாற்றுகிறாராம். சரி. படைப்பதற்கு முன்னால் தனிப் பெரும் சக்தியாக அவர் மட்டுமே இருந்தார்; படைத்தார். அவர் படைத்த உலகங்களுக்கு யாரால் ஊறு விளைவிக்க  முடியும்? அப்புறம் எதற்குக் ‘காத்தல்’ தொழில்?

*அனைத்தையும் படைத்த கடவுள் ஒரு கட்டத்தில் அவைகளை அழித்து விடுகிறாராம். ஏனாம்?

அதர்மம் தலைவிரித்து ஆடும்போது அழித்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

அன்பே உருவான, அறிவுக் கடலான, சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எப்படி? அது உருவானது எப்படி?

*அதர்மம் எப்படியோ தோன்றித் தொலைத்துவிட்டது. அதன் அட்டூழியம் அதிகரித்தபோதுதான் கடவுள் விழித்துக் கொண்டாரா? அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்?

*விழிப்புப் பெற்றவர், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு, ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே? ஒட்டு மொத்த உலகங்களையும் ஏன் அழிக்கிறார்?

*ஒரு முறை அழித்தால் போதும்தானே? உலகங்களோடு சேர்ந்து அதர்மமும் அழிந்துவிடும்தானே? மீண்டும் மீண்டும் தான் படைத்த உலகங்களை அழிக்கும் அவசியம் ஏன் ஏற்பட்டது?

*ஒரு முறை கடவுளால் அழிக்கப்பட்ட அதர்மம் எப்படியோ தப்பித்து, எங்கேயோ பதுங்கியிருந்ததா? எங்கே?

இப்படிக் கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

பாவம் பக்தர்கள். விடை தெரியாமல் விழி பிதுங்கியிருக்கும் அவர்கள் வெகுவாக மனம் உடைந்துபோவார்கள் என்பதால் தொடர்ந்து கேள்விக் கணைகள் தொடுப்பதைத் தவிர்க்கிறோம்!

ஹி... ஹி... ஹி!!!

வியாழன், 29 பிப்ரவரி, 2024

பொல்லாத பாலுறவும் புரியாத மனித இனத்தின் எதிர்காலமும்!!!

உலக அளவில், ஆபாசத் தளங்களின் எண்ணிக்கையும், அவற்றில் உலா வருவோரின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்நிலை தொடருமேயானால்.....

ஒரு காலக்கட்டத்தில், குடும்ப உறவுகள் முற்றிலுமாய்ச் சிதைந்து, மனிதர்கள் சுயநலமிகளாய் மாறிப்போவார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்[எங்கோ எப்போதோ வாசித்தறிந்தது].

‘செக்ஸ் அடாவடித்தனங்களால், சச்சரவுகளும், மோதல்களும் அதிகரித்து, மிகப் பெரிய அழிவை மனித குலம் சந்தித்தாலும், அதன் மூலம் பாடம் கற்றுப் படிப்படியாய்த் திருந்தும்’ என்றிப்படி அனுமானிப்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களின் அனுமானம் பொய்த்துப்போகவும் வாய்ப்புள்ளது.

ஆகவே, உலக நாடுகள் விழித்துக்கொள்ளுதல் அவசியம்.

சில இஸ்லாமிய நாடுகளில் ஆபாசத் தளங்களுக்குத்[விபச்சாரம் உட்பட] தடை விதித்திருப்பது[ஆயினும், குற்றங்கள் நிகழாமல் இல்லை] போல, உலகின் அனைத்து நாட்டு அரசுகளும் தடை விதிக்கும் காலம் வருமா?

“வரும். எப்போதும் போல உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். கவலைப்பட ஒன்றுமில்லை” என்று நம்பிக்கை தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள்.

யார் எதைச் சொன்னாலும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள், ஆபாசத் தளங்களின் வளர்ச்சி கண்டு அஞ்சவே செய்கிறார்கள்; இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை ஊகம் செய்வதும் அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள்.

எனினும், இப்போதைக்கு அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ஆபாசத் தளங்களுக்குத் தடை விதிக்கலாம்தானே?

விதித்தால்.....

திருமணம் செய்வதற்கான சூழல் இல்லாதவர்களும், ஆபாசத் தளங்களுக்கு அடிமையானவர்களும் வடிகால் தேடுவார்களே, அதனால் பாலுறவுக் குற்றங்கள் அதிகரிக்குமே,  என்ன செய்வது?

என்ன செய்வது?

‘சிவப்பு விளக்கு’த் தொழிலுக்கு  அனுமதி வழங்குவது போல, சிவப்பு விளக்குத் தளங்களுக்கும்(online prostitution) உலக நாடுகள் அனுமதி வழங்கலாமா?

வழங்கலாம்; வழங்காமலும் இருக்கலாம்.

இரண்டில் எதைச் செய்தாலும்.....

மனித இனம் இருந்துகொண்டிருக்கக் காரணமான அதே பாலுறவால் என்றேனும் ஒரு நாளில் அழியும் என்பது 100% உறுதி!!!