புதன், 30 அக்டோபர், 2024

செருப்பால்[‘த.வெ.க.’ விஜய் அடிவாங்கியது] அடித்துக்கொள்ள ரூ1000 கட்டணம்!!!

கீழ்க்காண்பது நாமக்கல்லில் நடிகர் ‘விஜய்’இன் ரசிகர்கள் அன்றாடம் நிகழ்த்தும் மெய் சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சியாகும். வாசியுங்கள். 

இச்செய்தி அறிந்த என் நண்பர்[நாமக்கல்] ஒருவர் வெகு புத்திசாலித்தனமான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார்.

முன்னதாக நடந்த ஒரு நிகழ்வு நினைவுகூரத்தக்கது. அது.....

சுமார் 10 மாதங்களுக்கு முன்பு[2023] மரணமடைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. அதைப் பத்திரப்படுத்திய விஜய் சில மாதங்கள் கழித்துத் தன் மீது வீசப்பட்ட அந்தச் செருப்பை ஏலத்தில் விடுவதாக அறிவித்தார்; தேதியும் குறிப்பிட்டிருந்தார்.

இதையறிந்த, ‘விஜய்’ஐ உயிருக்குயிராய் நேசிக்கும் நண்பர் குறிப்பிட்ட நாளில் சென்னை சென்று, விஜய் ஏலம்விட்ட அதிர்ஷ்டச் செருப்பை ஒரு லட்சம் கொடுத்துப் பெற்றுவந்து தன் வீட்டில் பத்திரப்படுத்தியிருந்தார்.

மேற்கண்ட செய்தியை[ரசிகர்கள் விஜய் காரின் முன்பு நின்று படம் எடுத்துக்கொள்வது] அறிந்த என் நண்பர், நாமக்கல் நகரிலும், அண்டை அயல் ஊர்களிலும் ஒலிபெருக்கி மூலம் கீழ்க்காணும் அறிவிப்பைச் செய்தார்.

“நடிகர் விஜயகாந்து இறுதி ஊர்வலத்தின்போது தலைவர் விஜய் மீது வீசப்பட்ட செருப்பு  என்னிடம் உள்ளது. ரூ1000/= கட்டணம் செலுத்தி, அந்த அதிர்ஷ்டச் செருப்பால் தங்களை அடித்துப்[பத்துத் தடவை மட்டும்] புண்ணியம் தேட விரும்புவோர் என் கைப்பேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

அதிர்ஷ்டச் செருப்பால் அடித்துக்கொள்ள, நண்பர் வீட்டு வாசலில், தினம் தினம் மிக நீண்ட வரிசையில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது சற்று முன்னர் நண்பர் சொன்ன தகவல்!