மாண்புமிகு நிதியமைச்சர் கோபி செங்கோட்டையன் அவர்களுக்கு வணக்கம்.
சாதித்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
தமிழ்நாடு அரசியலில் உங்களின் பங்கு இடையே சற்றுத் தொய்வுக்குள்ளானாலும், அரசாட்சியில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகப் பணியாற்றி மக்களின் பாராட்டுதலைப் பெற்றவர் நீங்கள். உங்களுக்கு அறிவுரை வழங்குவதற்கான தகுதி வெகு சாமானியனான எனக்கு இல்லை என்றாலும், தவிர்க்க இயலாத நிலையில் இந்தப் பரிந்துரைப் பதிவைத் தங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
தமிழ்நாட்டு அரசியலில் இன்றையக் கத்துக்குட்டிகளுக்கு முன்னோடியாகத் திகழும் நீங்கள், 'விஜய்'யுடன் ஆளுநரைச் சந்தித்தபோதும், நீங்கள் பதவி ஏற்றபோதும், 'விஜய்’யை முதல்வர் இருக்கையில் அமரச் செய்தபோதும் வெளிப்பட்ட உங்களின் மெய்ப்பாடுகள் மக்களை முகம் சுளிக்க வைப்பனவாகவும், உங்களின் மதிப்பைக் குறைப்பனவாகவும் உள்ளன.
கீழ்க்காணும் காணொலிகளை இப்போது கூர்ந்து நோக்குங்கள்.
ஆளுநரைச் சந்தித்தபோது, உடன்வந்தவர்கள் இயல்பாக நின்றுகொண்டிருக்க, நீங்கள் மட்டும் முன்புறமாகக் கைகோர்த்து மிகு பணிவு காட்டியிருக்கிறீர்கள்; மற்றவர்களைப் பார்த்த பின்னரே பக்கவாட்டில் கைகளைத் தொங்கவிட்டீர்கள்.
பதவி ஏற்றவுடன் முதல்வரை எதிர்கொண்டபோது அவர் எழுந்து நின்று கைகுலுக்கினார். நீங்களும் நின்ற நிலையில் கைகுலுக்கி நன்றி சொல்லி நகர்ந்திருக்கலாம். கூனிக்குறுகித் தலைதாழ்த்தி நன்றி பாராட்டியிருக்கிறீர்கள்.
முதல்வர் இருக்கையைச் சுட்டிக்காட்டி அவரை அமரச் சொல்லும்போதும், ஏதோ தகவல் சொல்லும்போதும், முதுகு வளைத்துப் பவ்வியமாகக் கைநீட்டி, அனுமதி வேண்டுவதுபோல் பாவனை செய்து பணிவு காட்டியிருக்கிறீர்கள்.
நம்மினும் மேம்பட்ட பதவியில் உள்ளவர்களுக்கு, உரிய நேரங்களில் உரிய வகையில் மரியாதை செலுத்தினாலே போதும். அடிமை போல் குழைந்தும் நெளிந்தும் பணிவு காட்டுவது தேவையில்லை.
இது மன்னராட்சிக் காலம் அல்ல என்பதை மறக்க வேண்டாம் மாண்புமிகு அமைச்சர் அவர்களே!
