கண்ணதாசன் | அர்த்தமுள்ள இந்துமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்ணதாசன் | அர்த்தமுள்ள இந்துமதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஏப்ரல், 2020

கண்ணதாசனின் புண்மொழிகள்!!!

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ இவர் படைத்த, பல்லாயிரக் கணக்கில்
விற்பனையான ஒரு நூல். அதில், ’நாத்திகவாதம்’ என்னும் தலைப்பிலான பகுதியை மீண்டும் படிக்க நேர்ந்தது.

அதன் விளைவாக என் மனதில் முகிழ்த்த சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்பதிவை எழுதக் காரணம்.

‘கடவுள் இல்லை என்று மறுப்பவன் காலகாலங்களுக்கு உயிரோடு இருப்பானானால், ‘இல்லை’ [கடவுள் இல்லை] என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்’ என்று கட்டுரையின் தொடக்க நிலையிலேயே  திருவாய் மலர்ந்தருளுகிறார் கவிஞர்.

‘அனைவரும் [நாத்திகர்கள்] பெறவேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்கிறார், இந்தச் சாகாவரம் பெற்ற கவிஞர்.
நாத்திக வாதம் பேசியவர்கள் போய்விட்டார்கள், சரி. ஆத்திகர்கள்? யோசித்தாரா இந்தத் தத்துவ மேதை?

ஆத்திகராய் வாழ்ந்த  உத்தமர்கள் எல்லாம் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இன்னும் சாகாமல் நம்மில் ஒருவராய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர், நம்முன் தோன்றி, அந்தப் புண்ணியவான்களையெல்லாம் கண்ணாரக் காணச் செய்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாரா?

‘மேற்கத்திய நாடுகளில், கிறித்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறித்துவ மதம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது  என்கிறார்[உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் கடவுள் மறுப்பாளர்கள், அல்லது, அவரை ஏற்காதவர்கள் என்பதை அறியாத கவிஞர் பரிதாபத்துக்குரியவர்].

மேலும் சொல்கிறார்: ‘இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம், அது சாத்விக மதம்’.

பல்லவர் காலத்தில், ஆயிரக் கணக்கில் சமண மதத்தவரை கழுவில் ஏற்றிக் கொன்றது இந்துமதம்தானே என்ற உண்மையை, எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞரைக் கண்டு பிடித்து யாரேனும் எடுத்துச் சொல்வார்களா? 

நாத்திகத்தின் முக்கிய நோக்கமே கடவுள் மறுப்புதான் என்ற உண்மையையும் அவர்கள் அவரிடம் கூறுவார்களா? 

ஏற்கனவே நாத்திகர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிற கவிஞர், நாத்திகத்தில் போற்றத் தக்க புத்தகம் இல்லை என்றும் சாதிக்கிறார்.

’போற்றத்தக்க’ புத்தகம்தான் இல்லை என்கிறாரா, இல்லை, நாத்திகம் பற்றிப் ‘புத்தகமே இல்லை’ என்கிறாரா? அவரைக் காணக் கொடுத்து வைப்பவர்கள் கேட்டுச் சொல்வார்களா?

இங்கர்சால் போன்றவர்கள் நாத்திக வாதத்தில் உறுதியாக இல்லையாம்.
அது என்ன உறுதியாக இருப்பது? அவர் நாத்திகர் என்பதிலும் கவிஞருக்குச் சந்தேகமா?

கடவுளை உறுதியாக மறுப்பவர்கள் என்று, பெர்னார்டு ஷா, சிக்மண்ட் ஃபிராய்டு, ரஸ்ஸல், நேரு, பெரியார், கோவூர் என்று நிறைய அறிஞர்களைச் சொல்கிறார்களே, அவர்களில் சிலரையாவது இந்த உத்தம சீலருக்குத் தெரியுமா?

நாத்திகனாக இருந்தவரை என்னால் அதிகம் பாட முடியவில்லை என்கிறார்!

ஓ.........கவிஞரே, கவிதை எழுதுவதற்கும் ஆத்திக நாத்திகம் பேசுவதற்கும் என்னய்யா சம்பந்தம்?
அர்த்தமுள்ள இந்துமதம் | தினகரன்
ஆத்திகன் மனசு மலர் போல மென்மையானது; கலையுணர்வு மிக்கது. நாத்திகன் மனது கருங்கல் பாறை போன்றது; உணர்ச்சியற்றது என்கிறீரா? நீர்தான் இன்னும் உயிர் வாழ்கிறீரே, நேரில் வந்து சொல்லுமய்யா.


கவிஞர் இன்னும் என்னவெல்லாம் திருவாய் மலர்கிறார் பாருங்கள்.....

‘நாத்திகன் பண்பாடு அறியாதவன்; பவித்திரமில்லாதவன்; யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்துவிடுவான்’, வாய்ப்புஅமைந்தால்

‘எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன் நாத்திகன்’

இதற்கு மேலும் இந்த மனிதர் போதையில் [புகழ் போதை என்று வைத்துக் கொள்ளுங்கள்] கிறுக்கியிருப்பதையெல்லாம் எடுத்துக் காட்டி விமர்சனம் செய்ய என் மனம் இடம் தரவில்லை. இந்த ஆள் உயிரோடு இல்லை என்பது முக்கியக் காரணம்

வாய்ப்பு அமைந்தால், இவர் மனம் போனபடியெல்லாம் கிறுக்கிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலை இனியொரு முறை  படித்துவிடுங்கள்.
========================================================================

சனி, 18 நவம்பர், 2017

பெண்களுக்குக் ‘கற்பு’ ஏன்? கண்ணதாசன் கண்டறிந்த உலக நீதி!!!

#ஒருவன், தனக்குச் சொந்தமான நிலத்தை உழவு செய்து ‘வித்து’ இடுகிறான்[பயிர் செய்கிறான்]. அந்நிலத்தில் விளையும் பொருள் அந்த நில உரிமையாளனுக்குத்தான் சொந்தம்[இது உலக நீதி]. அது போல.....

மனைவி என்பவள் கணவனின் ‘உடைமை’. மனைவி என்னும் நிலத்தில் ‘வித்து’ இடுபவன் கணவன். எனவே, மனைவி பெற்றெடுக்கிற குழந்தைகள் கணவனின் குழந்தைகள் ஆகின்றன. அதனால்தான்.....

“நீ யாருடைய பிள்ளை?” என்று கேட்டால் தந்தை பெயரைச் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தந்தை யார் என்பதைத் தாயார் சொல்லித்தான் அறிகிறோம்; அவரைத் தந்தையாக ஏற்கிறோம். தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் யார் என்பது தெரியாவிட்டால்[?!] தாயார் பெயர் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை#

‘ஆணுக்குப் பெண் அடிமையல்ல’ என்னும் உண்மையை ஏறத்தாழ உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், பெண் என்பவள் ஆணுக்குச் சொந்தமான விளைநிலம் ஆவாள்’ என்னும் பத்தாம்பசலித்தனமான கருத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல; மறைந்த கவிஞர்[இவர் சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை] கண்ணதாசன்தான்.

தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரின்  கருத்தை மேற்கோள்  காட்டி அதைப் பாராட்டவும் செய்கிறார் கவிஞர்.

‘மனைவியானவள் கணவனின் உடைமை ஆதலால், அவள் கற்பு நெறி பிறழாமல் வாழ்வது அவசியம்; அது உலக நீதி’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

இப்படிப் பல அபத்தமான கருத்துகளின் தொகுப்புத்தான் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’[‘கண்ணதாசனின் அர்த்தமற்ற இந்துமதம்’என்னும் தலைப்பில் நூல் இருப்பதை அறிவேன். அதை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை].

இந்நூலில், பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பகுத்தறிவு முலாம் பூசியிருக்கிறார் கவிஞர்.

எளிய இனிய கவித்துவ நடையைக் கையாண்டு, மூடநம்பிக்கைகளைத் திணிப்பதில் கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கில் இந்நூல் விற்பனையாகியிருப்பதே இதற்குச் சான்று[இப்பதிவுக்குப் பயன்பட்டது ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’, அறுபத்து ஒன்பதாம் பதிப்பு: ஃபிப்ரவரி, 2005].

தற்காலிக அல்லது, இறுதி மூச்சுவரை நீடிக்கிற துன்பங்களைத் தாங்குவதற்கான மன உறுதியைப் பெறுவதில் நம் மக்களுக்கு நாட்டமில்லை; அது குறித்துச் சிந்திப்பதும் இல்லை. கடின உழைப்பின் மூலம் பெற வேண்டியவற்றைக் கடவுளை வழிபடுதல், ஜோதிடனின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுதல் என்று குறுக்கு வழிகளில் பெற நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதுதான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்கள் பல்லாயிரக் கணக்கில்  விற்பனையாவதற்கான காரணம் ஆகும்.

கண்ணதாசன் போன்ற ஆன்மிகப் பரப்புரையாளர்களையே பெரும்பாலான ஊடகங்களும் ஆதரிக்கின்றன; மிகச் சிறுபான்மையினராக உள்ள பகுத்தறிவாளர்களைச் சீந்துவதே இல்லை. 

ஊடகங்களைத் திருத்தும் முயற்சியில் சிறுபான்மைச் சிந்தனையாளர்கள்[எண்ணிக்கை என்ன?] ஈடுபடுவார்களா? அவர்களின் முயற்சி எள்ளளவேனும் பலன் தருமா?

ஆழ்ந்து சிந்தித்தால் கவலைதான் மிஞ்சுகிறது.

காலம் ஒரு நாள் மாறும்[?]. காத்திருப்போம்.

[அர்த்தமுள்ள இந்துமதத்தால் விளையும் அனர்த்தங்கள் குறித்து வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் எழுதுவேன்].

நன்றி.