திங்கள், 4 ஜூலை, 2011

இறைவியின் சீற்றம்

                         


                                                                
                        இறைவியின் சீற்றம் [சிறுகதை]

இறைவனும் இறைவியும் [அரூபமாக], வாகனங்களின் ஓட்டத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டம் இட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய
தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, ”அங்க பாருங்க” என்று குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் 
காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.


முகம் சுழித்த இறைவன்,  “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.


“பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது அப்பட்டமா தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே? இவளைப் பைத்தியம் ஆக்கியது யாருன்னு கேளுங்க” 
என்றார் இறைவி.


அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.


”உங்க ஆசீர்வாதத்தோட நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க”


வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, ”என்ன உளறுகிறாய்?” என்றார்.


“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப் படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்:


“இவளுக்கு அப்போ பதினாறு வயது. மக்கள் நடமாட் டம் குறைந்த தெருவில் இவள் தனியே போன போது, நான்கு ’காலிகள்’ இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி , அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க.........................”


ஐயோ........என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சி கூக்குரல்  
எழுப்பினா இவ.. இவள் கற்பைக் காப்பாத்த யாருமே முன் வரல......


கடவுளே....ஏ ஏ ஏ.........ஓ ஓ ஓ கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே, அழுது புலம்பி 
அபயக்குரல் எழுப்பினா.......

துடிதுடிச்சி, ஓடோடிப் போயி காப்பாத்த வேண்டிய நீங்களும் இவளைக் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க; அந்த வினாடியே மோனத்திலும் மூழ்கிட்டீங்க.....................

சாதாரண மனுசங்களுக்கு இந்த மோனமும் தியானமும் தேவைப் படலாம்.
முழுமுதல் கடவுளான நீங்க எதுக்கு அடிக்கடி மோனத்தில் மூழ்கிக்
கிடக்கிறீங்கன்னு எனக்குப் புரியல..........

அது கிடக்கட்டும். உங்க மெத்தனத்தால நடக்கக் கூடாத ஒரு கொடூரம் நடந்து முடிஞ்சி போச்சி.

சூது வாது அறியாத ஒரு இளம் வயசு அப்பாவிப் பொண்ணைச் சீரழிச்சி,
சித்திரவதை பண்ணி, அந்த நாலு கயவர்களும் நடுத் தெருவில் அலைய
விட்டுட்டாங்க.

தனக்குக் ‘கடவுள் தந்த பரிசை’ நினைச்சி நினைச்சி எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையற இந்தப் பைத்தியகாரியைப் பாருங்க; ரெண்டு கண்ணாலயும் நல்லா பார்த்து ரசிங்க” என்று குரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் வழிந்திட சிரமப் பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி,  ” இப்படிக் கொடூரமா
தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன? சொல்லுங்க” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்” உணர்ச்சியற்ற குரலில் சொன்னார் இறைவன்.

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதை ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியாது.அது ஒரு நீ.........ண்.....ட சங்கிலித் தொடர். எப்போதெல்லாமோ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணும்கிறது ஏற்கனவே விதிக்கப் பட்டது.
கேட்கப்படுற ஒவ்வொரு கேள்விக்கும் கணக்குப் பார்த்துப் புள்ளிவிவரம் தர்றது என்னுடைய வேலை இல்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம்
பண்ணினவள். அதுக்கான தண்டனையை இந்தப்பிறவியில் அனுபவிக்கிறாள். அவ் வளவுதான்.”

இனியும் பேச விரும்பாதவர் போல் நடையில் வேகம் காட்டினார் இறைவன்.

”நில்லுங்க”.

கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட அந்த வார்த்தை இறைவனை மேலும் நகரவிடாமல் ஆணி அடித்தாற்போல் நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாள். சரி........... இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஸ்டம் அந்த நாலு மனுச நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு, அவங்க கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் என்னய்யா?” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மீண்டும் மோனத்தில் புதையுண்டார்!

**********************************************************************************











          

செவ்வாய், 28 ஜூன், 2011

கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி

                                                 கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி


கடவுளே,


கடந்த ஒரு வினாடி வரை உம்மை நாம் நம்பியதில்லை.


’நீர் எப்படித் தோன்றினீர்? உம்முடைய தோற்றம் எப்போது, எவ்விடத்தில்,
எவ்வாறு நிகழ்ந்தது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, விடை தெரியாத நிலையில்....................................................

ஆன்மிகவாதிகள் தரும் உம்மைப் பற்றிய விளக்கங்கள் வெறும்
அனுமானங்களே தவிர, அறிவு பூர்வமானவை அல்ல என்ற காரணத்தால்..........

நீர் ‘இருப்பதாக’ நாம் ஒப்புக் கொண்டதும் இல்லை. இருப்பினும்.............................

ஆன்மிகவாதிகள் எம் போன்றவர்கள் மீது வீசுகிற சில கேள்விக் கணைகளை எம்மால் புறம் தள்ள முடியவில்லை.

அவை............................

“ஏன், எப்படி.....என்பன போன்ற கேள்விகள் கிடக்கட்டும், உன் கண் முன்னால்
கோள்களும் நட்சத்திரங்களும் எல்லையில்லாத பெரு வெளியில் இறைந்து
கிடப்பதையும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறாய். இவையெல்லாம்
பொய்; மாயை என்கிறாயா? இல்லையே. ‘உண்மை’ என ஒப்புக் கொள்கிறாய்தானே?

நீ இருப்பது; நாம் இருப்பது; நாம் இயங்குவது.............எல்லாம் உண்மைதானே?

உனக்கு ஆறாவது அறிவு இருப்பதை நம்புகிறாய்.

 அந்த அறிவைக் கொண்டுதான் சிந்திக்கிறாய்.

கடவுளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறாயே, எல்லாம் அந்த ஆறாவது அறிவு இருப்பதால்தானே?

இந்த அறிவு ‘உண்மையானது’ என்பதை நீ மறுக்க முடியாது.

ஆனால், ஓர் உண்மையையும் நீ மறந்துவிடக் கூடாது.

உனக்கு வாய்த்திருக்கிற இந்த அறிவு நிரந்தரமானது அல்ல; அழியக் கூடியது.

அழியக் கூடிய இந்த அறிவு தானாகத் தோன்றியிருக்க முடியாது; இதைத் 
தோற்றுவிக்க இதைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் அறிவு தேவை.

 விவரிப்புக்கு அடங்காத அந்தப் ‘பேரறிவைத்தான் ‘கடவுள்’ என்கிறோம்.

அந்த அறிவு எப்படித் தோன்றியது என்ற கேள்வி அவசியமற்றது. ஏனென்றால்...

கோள்கள் இருப்பது போல, நீ இருப்பது போல, நாம் இருப்பது போல, நமக்கு
ஆறாவது அறிவு இருப்பது போல நம் அறிவுக்கும் மேலான ஓர் அறிவு 
இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்”.

கடவுளே,

இவ்வாறாக எழுப்பப்படுகிற கேள்விகளை எம்மால் அலட்சியப் படுத்த
முடியவில்லை என்பது உண்மைதான்.

ஐம்புலன்கள் இல்லாமல் நீர் எப்படிப் பார்க்கிறீர், கேட்கிறீர்......என்பன போன்ற    
எத்தனயோ கேள்விகளை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு.........................

நீர் ஒருவர் ‘இருக்கிறீர்’ என்று தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு..........................

உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சம், எந்தவொரு அளவுகோலும் கொண்டு அளந்து அறிய
முடியாதது; நீளம், அகலம்,மேல்,கீழ் மையப்புள்ளி என்று எதுவுமே இல்லாதது; விளிம்பு நிலை அற்றது என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

இந்தப் பிரமிக்கத் தக்க.......................................................................................

கற்பனக்கு எட்டவே எட்டாத..........................................................................

பிரபஞ்ச வெளிக்கு நீர் ஒரே ஒரு கடவுள்தானா?

நீர் கடவுளாக இருந்தாலும் உம்மாலும் கணிக்கவே இயலாத....அளந்தறியவே இயலாத அனைத்து அண்டங்களுக்கும் நீர் ஒருவர்தான் கடவுள் என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

உம்மைப் போல இன்னும் எத்தனை கடவுள் இருந்தால், முழுமை பெறாத பிரபஞ்ச வெளியைக் கட்டி ஆள்வது சாத்தியமாகும்?


கடவுள்கள் பலர் என்றால், உங்களுக்குள் ஆதிக்கப் போட்டி வருமே?

போட்டியை எப்படித் தவிர்த்தீர்கள்?

சமரசமா? இல்லை, சமர் புரிந்து மற்றவர்களை அழித்துவிட்டு நீர் மட்டுமே அனைத்தையும் ஆள்கிறீரா?

பிரபஞ்சப் பரப்பையே அளந்தறிய முடியாத போது கடவுளரின்
எண்ணிக்கையையும் கணக்கிட முடியாதே?

கடவுளே,

கேள்விமேல் கேள்விகளை அடுக்கி உம்மை நோகடிப்பதோ, இழிவு படுத்து
வதோ எம் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.


நீர் எமக்குத் தந்த பகுத்தறிவு இவ்வாறு கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
அதைத் தடுக்க இயலவில்லையே ஐயா.

கேள்விகள் கேட்பதுகூடக் குற்றமா கடவுளே?

நீர் இருப்பது உண்மையானால், எல்லாம் வல்லவரான உம்மை இந்தக் கேள்விகள் களங்கப் படுத்திவிடுமா!?

ஓ.....கடவுளே,

இன்னும் உம்மிடம் கேட்பதற்குக் கேள்விகள் உள்ளன. அவற்றை இப்போதே முன் வைக்க நாம் விரும்பவில்லை.

இந்த ஒரு கேள்விக்கு நீர் பதில் தந்தால் போதும்.

அற்ப மனிதனான எம்மை மதித்து நீர் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டீர்
என்பது எமக்குத் தெரியும்.

சரியான பதிலை உம்முடைய ‘அவதாரங்கள்’ மூலமாக அனைத்து மக்களும் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்.

உமது பதில் எமக்கு முழுத் திருப்தி அளித்தால் உம்மை நாம் நிரந்தரமாகஏற்றுக் கொள்வோம். கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எம் ஐயனே.

**********************************************************************************
**********************************************************************************