வியாழன், 14 ஜூன், 2012

தாழ்த்தப்பட்ட கடவுள்.

இது ‘குமுதம்’ இதழில் வெளியானது.

                             தாழ்த்தப்பட்ட கடவுள்! [ சிறுகதை]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது. என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்”.

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்!? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப் போறியா?”. மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“வேறென்ன, உன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் மொட்டை போடப் போறீங்களா? இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 1 ஜூன், 2012

கடவுளின் சொந்தங்கள் [சிறுகதை].

                      கடவுளின் சொந்தங்கள் [சிறுகதை].

சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, மாயமாய் மறைந்து போனது அந்த வாகனம்.

தூக்கி வீசப்பட்டு, ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்தச் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்து, அவனின் அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தகவல் அனுப்பினான் தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர் மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி, தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

“கடவுள்தான் என்னை அனுப்பி வெச்சார்னு சொல்றீங்களா?”  -அப்பாவியாய்க் கேட்டான் தங்கராசு.

“ஆமாங்க. நான் நாள் தவறாம கடவுளை வழிபடுறவன். அதுக்குப் பலன் கிடைச்சிருக்கு.”

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு: “நானும்தான் நாள் தவறாம சாமி கும்பிடுறேன். என் ரெண்டு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கோயிலுக்குப் போயி சாமி முன்னால நெடுஞ்சாண்கிடையா விழுந்து தினம் தினம் கண்ணீர் விட்டு அழறேன். சாமி கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க சொன்னா கேட்பாரு. தயவு பண்ணி என் புள்ளயைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க ஐயா”.

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

                                         மன்னிப்பு வேண்டல்.

திறந்த வீட்டில், தெருத் தெருவாய்த் திரியும் 'வெறி’ பிடித்த சொறி நாய் புகுந்தது போல, ஒரு ’இழிபிறவி’ அடிக்கடி என் வலைப்பதிவில் நுழைந்து ஆபாசமாக எழுதித் தொல்லை கொடுக்கிறான்.

எனவே, தற்காலிகமாக, என் பதிவுகளுக்கு ’மறுமொழி’ இடுவதைத் தடை செய்திருக்கிறேன்.

நண்பர்களே, மன்னியுங்கள்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^