திங்கள், 23 செப்டம்பர், 2013

நீங்கள் ‘சஸ்பென்ஸ்’ கதைப் பிரியரா? புத்திசாலியா? ஒரு ‘டெஸ்ட்’!!!

“இந்தக் ‘குமுதம்’ கதையின் கடைசி இரண்டு பத்திகளைப் படிக்காமல் கதையின் முடிவைச் சொல்ல முடியுமா?” சவால் விட்டாள் என் தோழி. ஒரு வாரம் போல யோசித்தேன். ஊஹூம்...!!! உங்களால் முடிகிறதா பாருங்கள்.


தலைப்பு:                                   கவலை

எழுதியவர்:                              ‘மலர்மதி’

வெளியான இதழ்:                 ‘குமுதம்’ வார இதழ் [28.08.1986].


“என்ன கண்ணபிரான், ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்கீங்க? என்ன ஆச்சு?”

“அதை ஏன் கேட்குறீங்க? என் மனைவி, மூனு மாசம் முழுகாம இருக்கும்போதே எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரைக் காக்கா பிடிச்சேன்!”

“எதுக்கு?”

“வேற எதுக்கு? எல்.கே.ஜி. அட்மிஷனுக்குத்தான்!”

“சரி.....!”

“அந்தக் கான்வெண்ட் பிரின்சிபால் அவருக்கு ரொம்ப தோஸ்து!”

“அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!”

“அவர் என்னை அழைச்சுட்டுப் போயி முதல்வர்கிட்டே அறிமுகப்படுத்தினார்.”

“அப்புறம்?”

“ரெண்டு வருசத்துக்கு மூச்சு விடக் கூடாது. எல்லா சீட்களும் அல்ரெடி ரிசர்வ்டு. மூணாவது வருசத்துக்கு வேணும்னா நீங்க டிரைப் பண்ணிப் பார்க்கலாம்னு சொல்லிட்டார்!”

“நல்லதுதானே? உங்க குழந்தைக்கு மூனு வயசு ஆகறதுக்கும் சீட் கிடைக்கிறதுக்கும் சரியா இருக்குமே!”

“அப்படித்தான் நானும் நினைச்சி சந்தோசப்பட்டேன். அவர் ரெண்டாயிரம் டொனேஷன் வேறு [இது நடந்தது 26 ஆண்டுகளுக்கு முன்பு!] கேட்டார். சரின்னு சொல்லி, அலைஞ்சி திரிஞ்சி ரெண்டாயிரத்தைத் திரட்டி அவர் கையில் திணிச்சேன். அவரும் 1989ஆம் ஆண்டுக்கான அட்மிஷன் சீட்டைக் கைப்பட எழுதிக் கொடுத்துட்டார். என்னோட சீட்தான் கடைசி. எல்லாம் பூர்த்தி ஆயிடிச்சி!”

“அடடா...! ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க!”

“தாய் வீட்டுக்குப் போன என் பெண்டாட்டிக்குப் பிரசவம் ஆயிடிச்சி.....”

“கன்கிராட்ஸ். சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் இது. ஆனா, நானும் வந்ததிலிருந்து கவனிச்சிட்டிருக்கேன், நீங்க ஏன் இப்படி இடிஞ்சி போயி உட்கார்ந்திருக்கீங்க?”

........................................................................................................................................

”அடுத்து, கதையின் முடிவு வரப்போகுது. அட்டகாசமான சஸ்பென்ஸ் காத்திருக்கு. கடைசி ரெண்டு பாரா படிக்காம, ‘முடிவை’ச் சொல். சொல்லிட்டா, நீ  மகா மகா புத்திசாலி”ன்னு குமுதம் இதழைப் பிடுங்கிட்டா என் கேர்ள் ஃபிரண்டு. 

நான் ஏற்கனவே மகா புத்திசாலின்ற மிதப்பில் இருக்கிறவன். “மகா மகா புத்திசாலி நீ”ன்னு அழகான தோழியால் புகழப்படணும்ங்கிற ஆசை எனக்கு மட்டும் இருக்காதா என்ன?

ஒரு நாள் அல்ல; ரெண்டு நாள் அல்ல; ஒரு வாரம் போல,  பசி நோக்காமல், மெய் வருத்தம் பாராமல் சிந்தித்தும் என்னால் கதையின் மர்ம முடிச்சை அவிழ்க்கவே முடியவில்லை.

உங்களால் முடிந்ததா? நீங்கள் மகா மகா புத்திசாலியா?!

‘முடிவு’ கீழே..........












கதை முடிவு.....

“எல்.கே.ஜி.ல ஒரே ஒரு சீட் பிடிக்க நான் பட்டபாடு கொஞ்ச நஞ்சமில்ல. இப்ப என்னடான்னா, என் பெண்டாட்டி ரெட்டைக் குழந்தை பெத்துத் தொலைச்சிருக்கா!”

“அடப் பாவமே!”

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வெள்ளி, 20 செப்டம்பர், 2013

சிறுநீரிலிருந்து சொர்க்கத்துக்கு!!!

‘ஓஷோ’[ரஜனீஷ்]வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்னும் நூலைப் படித்ததால் விளைந்த ‘விபரீதம்’தான்  இந்தப் பதிவு

உலக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில் ‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று.

அப்படி என்ன இருக்கிறது அந்த நூலில்?

ஓஷோவே [மறைந்த] சொல்கிறார், படியுங்கள்.....

//நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சை தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு,காமத்திலிருந்து கடவுளுக்கு. அதற்கு பிறகு என்னுடைய நூற்றுக் கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால்,மற்றவற்றை படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக இந்தியாவில் எல்லாரும் படித்ததுகாமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகைத்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள். எதிர்த்தார்கள். இன்னும் அதை பற்றி கட்டுரைகளும்,மறுப்பு நூல்களும் எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்து கொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களை பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா? நான் ஏதோ ஒரே புத்தகத்தைதான் எழுதியது போல.

மக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதை குணப்படுத்தியாக வேண்டும்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை, உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்த சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.

அது, அந்த விஷயம் பற்றிய என் அறிவியல் அணுகுமுறை. காரணம், மனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும், காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு, உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது.நான் மக்களுக்கு இந்த உண்மையை சொல்வதால்தான் உலகமே என்னை கண்டனம் செய்கிறது.

காமத்திலிருந்து அதி பிரக்ஜைக்கு செல்வது பற்றி நான் பேச போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன். கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம்,முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லா சன்னியாசிகளும் அதை படித்து விட்டார்கள்.

இந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்த புத்தகத்திற்கு சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்த புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். காமத்திலிருந்து கடவுளுக்கு. அதை வாங்கி தமது ஆடைக்குள் மறைந்து வைத்து கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்.//     [இடுகை...நந்தன்,மே,2012]

அன்பு நெஞ்சங்களே,

தங்கள் வருகைக்கு நன்றி.

மேலே கண்ட பத்திகளில், அடிக்கோடிட்டவற்றை மீண்டும் படியுங்கள்.

கடவுளை உணர்வதற்கும் அடைவதற்கும் வழிகோலுவது தியானம் என்கிறார்கள்.

தியானம் புரிவதற்கு, மனமற்ற காலமற்ற ஒரு பரவச நிலையை நாம் எய்த வேண்டும் என்கிறார் ஓஷோ. 

இந்த நிலையை எய்த ஒரு முன் அனுபவம் வேண்டும். அந்த அனுபவத்தைக் காம உணர்ச்சி அளிக்கிறதாம்.

உடலுறவில் ஏற்படும் பரவசம், ‘மனமற்ற...காலமற்ற’ ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்குகிறதாம். இது பற்றித்தான் இந்நூலில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் இந்த செக்ஸ் சாமியார்.

காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றுவது குறித்த அற்புதமான நூல் இது என்கிறார்கள் இவரின் சீடர்கள்.

இந்தக் காம குரோத ஆன்மிக தத்துவம் நம்மைப் போன்றவர்களுக்குப் புரியுமா என்று யோசித்திருக்கிறார் இந்தக் காம யோகி.

நமக்கெல்லாம் புரியும்படியாக ஒரு உதாரணமும் தந்திருக்கிறார்.....

//ஒருவன் காலையில் இருந்து விரதம் இருக்கிறான் என்றால், அந்த நாள் முழுவதும் அவன் நினைவு சாப்பாடு மீதுதான் இருக்கும் கடைத்தெருவுக்கு போனால் கூட அவன் கண்களில் ஹோட்டல்களும் தின்பண்டங்கள் மட்டுமே தென்படும், எத்தனையோ நாள் அந்த வீதியை தாண்டி சென்று இருந்தாலும் அன்றுதான் அவனுக்கு ரொட்டியின் வாடை தெரியும்’//

//வயிறு நிறைய சாப்பிட்டவன் எப்படி ஒரு நான்கு மணி நேரம் உணவினை பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறானோ அதுபோல் காமத்தினை முழுமையாக அனுபவித்தவன் ஒருவன் மட்டுமே அந்த சிந்தனை இன்றி இருக்கமுடியும். அதுபோல, உடலுறவு கொள்ளும் கணம் மட்டுமே ஒருவன் அல்லது ஒருத்தி தன்னை “நான்” மறந்த கணம். அந்த “நான்” மறைந்த எந்த சிந்தனையும் இல்லாத கணம் ஒரு உடலுறவில் ஒரு நிமிடம்தான் நீடிக்கும், அந்த ஒன்றும் இல்லாத ஒரு நிமிட கணத்தின் மேல் உள்ள ஆசையால்தான் தான் மனம் திரும்ப திரும்ப அதை கேட்கிறது. உடலுறவால் அந்தக் கணத்தை நீட்டிக்கமுடியாது. தியானம் மூலமே அந்த “நான்” மறைந்த கணத்தை நீட்டிக்கமுடியும்//

காம சக்தியை ஆன்மிக சக்தியாக மாற்றுவது புரிகிறதோ இல்லையோ, பட்டினி கிடந்து வயிறு நிறையச் சாப்பிடும் உதாரணம் நமக்கு நன்றாகவே புரிகிறது.

காம இச்சையைத் தணிக்க வடிகால் இல்லாமல் அலைந்தவன், வடிகால் கிடைத்து அதை அனுபவிக்க நேரும்போது  தன்னை இழந்து,  மனமற்ற காலமற்ற நிலையை எய்துவதற்கு இந்தப் பட்டினி...வயிறு முட்டச் சாப்பிடும் உதாரணம் தரப்பட்டுள்ளது.

ஆக, நாள் கணக்கில் பட்டினி கிடந்த ஒருவன், உணவு கிடைத்து உண்ணும்போது, தன்னை இழந்து மனமற்ற காலமற்ற நிலையை [’நான்’ மறந்த கணம்]எய்துவான் என்பது அறியப்படுகிறது. [இது, ஏற்கனவே நாம் அறிந்ததுதான்]

இங்கே, ‘பசி’ என்னும் சக்தி, ஆன்மிக சக்தியைப் பெறுவதற்கு அடிப்படையாய் அமைகிறது.

இங்கே, அழுத்தமாய் மனதில் கருதத் தக்கது ஒன்று உண்டு. அது..........

கடவுளை நினைந்து தியானம் புரிவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறுவதற்கு, இந்தப் பசி என்னும் ஆற்றலே போதும். காமம் என்னும் ஆற்றலைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

சிறுநீர் வெளியேறும் உணர்வு ஏற்படுகிறது. வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கிறோம்.

வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற உச்சக்கட்ட நிலையில் சிறுநீரை வெளியேற்றுவதாக வைத்துக் கொள்ளுங்கள். அது வெளியேறுகிற போது நாம் பெறுகிற பரவச நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.

தன்னை மறந்த, ‘நான்’ஐ மறந்த, 'காலத்தை' மறந்த நிலையல்லவா இது!?

சிறுநீரை நெடுநேரம் அடக்கி வைத்து வெளிப்படுத்தும் கலையைக் கற்றால், எளிதில் கடவுளைக் காணலாம்; சொர்க்கம் புகலாம்!

தியானம் புரிவதற்கு முன்னால், தன்னை மறந்த ஒரு பரவச நிலையை அனுபவித்துப் பார்க்க இப்படியான எளிய...இடர்ப்பாடுகள் ஏதுமற்ற வழிகள் இருக்கும்போது “காமமே கடவுளை அடைவதற்கான ஒரே வழி” என்று தன் வாழ்நாள் முழுக்க செக்ஸ் சாமியார் ஓஷோ வாய் கிழியப் பேசித் தீர்த்தாரே; அது ஏன்?

‘காமமும் கடவுளும்’னு நூல் வேறு எழுதிக் கிழிச்சாரே! எதற்கு?

இது, முப்பத்து நான்கு மொழிகளில் வெளியாகி, பன்னிரண்டு பதிப்புகள் [இப்போது இன்னும் அதிகம் விற்றிருக்கும்] வெளியாகி விற்றுத் தீர்ந்துவிட்டதாம். எல்லாச் சாமியார்களும் படிச்சிட்டாங்களாம்.

வெட்கக் கேடு!

இனி இந்த உலகத்தை அந்தக் கடவுள்[?!]தான் காப்பாற்ற வேண்டும்!