புதன், 5 பிப்ரவரி, 2014

அனுபவிக்க ஆண்கள்! அழுவதற்குப் பெண்களா?

ஒரு கடவுள், தன் ‘தூதரை’ ஓர் ஆண் வடிவில்தான்[முகம்மது நபி] இந்த மண்ணுலகுக்கு அனுப்பி வைத்தார். இன்னொரு கடவுள், தன் ‘புதல்வரை’ [இயேசு] அதே உருவில்தான் இங்கே பிறப்பித்தார். மற்றுமொரு கடவுள், ஆண் உருவத்தில் பல ‘அவதாரங்கள்’ எடுத்தார். ஆமைகளும்[கூர்மாவதாரம்] பன்றிகளும்[வராக அவதாரம்]கூட கௌரவிக்கப்பட்டன. பெண்ணை மட்டும் எந்தவொரு கடவுளும் கண்டுகொள்ளவில்லை!


//மதங்கள் அனைத்திலும் தலைமைக் கடவுள்கள் ஆண்கள்தான். கடவுள்கள் மட்டுமல்ல, தலைமைப் புரோகிதர்களும்கூட ஆண்களே. விவேகானந்தர் தன் சிகாகோ சொற்பொழிவில், “இந்து மதத்தின் ரிஷிகள் பெண்களாக இருந்தார்கள்” என்று சொல்லியிருக்கிறார் [இதை அவர்தான் நிரூபிக்க வேண்டும்]. அவர் கூறுவதைப் போல் ஆதிகால இந்து ரிஷிகள் பெண்களாக இருந்திருப்பார்களேயானால் இந்து மதத்தின் தலைமைக் கடவுளைப் பெண்ணாக உருவகித்திருப்பார்கள்// -https://groups.google.com/d/msg/truetamil2friends/.../96hRKWDxeDQJ‎.

மதங்கள் கற்பித்த கடவுளர் உலகிலும் ஆணாதிக்கமே மீதூர்ந்திருப்பதை ஆராய்வது இப்பதிவின் நோக்கமல்ல; எனினும், பெண்ணினத்துக்கு ஆணினம் இழைத்த கொடுமைகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மேற்சொன்ன கருத்துகள் தேவை.

நம் மக்களில் பெரும்பாலோர் பின்பற்றுகிற முக்கிய மூன்று மதங்களின், பெண்கள் பற்றிய மதிப்பீட்டை அறிந்துகொள்வதும்கூட  இப்பதிவிற்கான அடிப்படைத் தேவைதான்.

 ‘உங்கள் மனைவியர் உங்களுக்குரிய பண்ணைகள் [விளை நிலம்] ஆவர். உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று சந்ததிகளைத் தேடிக்கொள்ளுங்கள்’ என்கிறது குர்ஆன். [அத்தியாயம் 2, பாகம் 2, பிரிவு 223. [மேற்கோள்: ‘மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி, முதல் பதிப்பு: மே, 2008. ஆசிரியர்: இராசேந்திர சோழன்].


‘பெண்கள், எப்போதும் ஆண்களுக்குப் பணி செய்யக் கடமைப்பட்டவர்கள்’ என்கிறது Bible. [Christian Bible: Paul to the Ephesians in the New Testament. "The women shall be servants to their men who are their masters."].

‘இந்து மதம், பெண்களை ஈனப்பிறவிகள்; திருமணத்திற்கு முன்பே கடவுள்களால் புணரப்பட்டவர்கள்; சுதந்திரமற்றவர்கள்’ என்கிறது [--பெரியார்]

“இது கடவுளின் கட்டளை” என்பதாக மதங்கள் வாரி இறைத்த பொய்களே, இந்தச் சமுதாயம் காலங்காலமாய்ப் பெண்களை அடிமைகளாய் நடத்துவதற்கு அடித் தளமாய் அமைந்தன எனலாம்.

மனிதன் காட்டுமிராண்டியாய் வாழ்ந்த காலத்திலிருந்து, பிற குழுவினர் பெண்களை அபகரிக்க முயன்ற போதெல்லாம் பலசாலிகளான ஆண்களே அவர்களுக்குப் பாதுகாப்பளித்தனர்; எனவே, அவர்களை ஆளவும் செய்தனர்.

ஆறறிவு பெற்று, கடவுள் சிந்தனையும் காலப்போக்கில் மதங்களும் தோன்ற, அவற்றில் ஆதிக்கம் செலுத்திய ஆண் வர்க்கம் பெண்களைப் பிறவி அடிமைகளாய் ஆக்கிவிட்டது.

இதன் விளைவாக, இன்றளவும் பெண்ணினத்துக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. குறிப்பாக, பாலியல் பலாத்காரங்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

இதற்குச் சான்றளிக்கும் அசம்பாவிதங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன என்பது நாம் யாவரும் அறிந்ததே.

மறந்த, அல்லது உங்களில் கணிசமானவர்கள் அறிந்திராத ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தவே இந்தப் பதிவு.

பல ஆண்டுகளுக்கு முன்பு மராட்டிய மாநிலத்தில் நடந்தது இது.

ஏழு ஆண்டுகள் நடந்த இந்த வழக்கின் இறுதியில், ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நமது சட்டங்களின் ஓட்டை உடைசல்களுக்கும், நீதி வழங்குபவர்கள் உள்ளிட்ட ஆண்களின் ஆணாதிக்க மனோபாவத்துக்கும் ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது!

‘மதுரா’ என்பவள் பழங்குடி இனத்தைச் சார்ந்த 16 வயது இளம் பெண்.

பருவம் எய்தாத நிலையிலேயே தன் காதலனுடன் ஓடிப் போகத் திட்டமிட்டிருந்தாள் என்று அவளின் சகோதரர்களாலேயே காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறாள்.

அவளை விசாரிப்பதாகச் சொல்லி, சகோதரர்களை வெளியே நிறுத்திவிட்டு அவளைத் தங்கள் காம வெறிக்குப் பலியாக்குகிறார்கள் காவலர்கள்.

அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட, விசாரணை நடத்திய அமர்வு நீதி மன்றம், அவள் ஓடிப்போகத் திட்டமிட்டிருந்ததால் உடலுறவுக்குப்  பழக்கப்பட்டவளாக இருத்தல் வேண்டும். காவலர்களின் செயல்பாடு வன்புணர்ச்சியின் கீழ் வராது என அரியதோர் கண்டுபிடிப்பைச் செய்து குற்றவாளிகளை விடுதலை செய்கிறது!

மேல் முறையீடு செய்யப்படுகிறது. உயர் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது.

குற்றவாளிகள் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்கிறார்கள்.

“சம்பவத்தின் போது மதுரா கூச்சல் போட்டுத் தன் எதிர்ப்பைக் காட்டியதாகத் தெரியவில்லை. அவள் உடலில் காயங்கள் ஏதுமில்லை. எனவே, அவளின் விருப்பத்தோடுதான் உடலுறவு நிகழ்ந்திருக்க வேண்டும்” என்று சொல்லி காவலர்களை விடுதலை செய்கிறார் நீதிபதி!

‘பெண்களுக்கு எதிரான குற்றவியல் சட்டங்களில் எத்தனையோ ஓட்டை உடைசல்கள் இருப்பது மட்டும் குற்றவாளிகள் தப்பித்துவிடுவதற்குக் காரணமாக இல்லை. இன்னும் ஆணாதிக்க மனப்பான்மையிலிருந்து விடுபடாத நீதிபதிகளும் அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதையே இது போன்ற வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன. இவர்களெல்லாம் திருந்தாதவரை இது போன்ற வன்முறைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்’ என்று இச்சம்பவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிற நூலின்[’மிதிபடும் மானுடம்  மீட்பின் மனவலி’, மங்கை பதிப்பகம், வேளச்சேரி, சென்னை. முதல் பதிப்பு: மே, 2008] ஆசிரியரான இராசேந்திர சோழன் சொல்கிறார்.

நானும் இதை வழிமொழிகிறேன்.

*************************************************************************************
முக்கிய குறிப்பு:

‘தங்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி, ஆண்களைப் பெண்கள் பழிவாங்குகிறார்கள்’ என்று சொல்லப்படுவதில் உண்மையும் இருக்கலாம் என்ற போதிலும், அதைக் காரணம் காட்டி, தொடரும் ஆணாதிக்கப் போக்கை நியாயப்படுத்த முடியாது.

*************************************************************************************

















புதன், 29 ஜனவரி, 2014

கவிஞர் இன்குலாப்.....“மதம் ஒரு நோய்!”

‘...சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா...’

கவிஞர் இன்குலாப்பின் பெயரைப் பார்த்தவுடன், இந்த வரிகளும் உங்கள் மனத்திரையில் வலம் வந்திருக்கும்.

எழுதுகோலில் எரிமலைக் குழம்பை நிரப்பி, இது போன்ற வரிகளடங்கிய பல கவிதைகளைப் படைத்தவர் இவர்!

 'மக்கள் கவிஞர் என்ற சுட்டுதலுக்கு முழுமையாகப் பொருந்துபவர் கவிஞர் இன்குலாப். திராவிட இயக்க அரசியலில் தொடங்கி, தீவிர இடதுசாரியாகப் பரிமாணம் எடுத்து, தமிழ் தேசிய விடுதலை அரசியலில் காலூன்றியவர்.' 

மக்கள் நலன் கருதிப் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். ‘ஆனால்...’ என்னும் தலைப்பில், ஒரு கட்டுரைத் தொகுப்பு [முதல் பதிப்பு: செப்டம்பர், 2004. வெளியீடு: அகரம்] வெளியாகியுள்ளது.

இதிலுள்ள முதல் கட்டுரை, ‘மதமெனும் நோய்...’.  நல்ல சிறுகதை நடையில் அமைந்த அருமையான படைப்பு; என் உள்ளம் கவர்ந்தது. உங்களுடன் இதைப் பகிர வேண்டும் என்னும் வேட்கையின் விளைவே இப்பதிவு.

[எந்தவொரு சொல்லையும் வெட்ட மனம் வரவில்லை. இருப்பினும் அளவைக் குறைக்க, ஆங்காங்கே சில வரிகளைத் தவிர்த்திருக்கிறேன்.]

                               *                                      *                                   *

###திருப்பாலைக்குடி என்ற கிராமத்திலிருந்து பஸ்ஸில் ஏறினேன், என் மனைவியோடும் மகளோடும். மூன்று பேர் ஓடிவந்து ஏறவும் பஸ் புறப்படவும் சரியாய் இருந்தது.

அவர்களுக்கு உட்கார இடமில்லை; நின்றார்கள். ஒரு நடுத்தர வயதுக்காரர் எங்களை நோட்டமிட்டார்.

என் மனைவியின் நெற்றியில் பொட்டில்லை. மகளுடைய நெற்றியிலும்தான்.

அடுத்து நின்றவரிடம் உரக்கச் சொன்னார்:

“இந்த முஸ்லீம்களைக் கண்டாலே வெட்டணும்.”

பலர் அதைக் கேட்டார்கள். பஸ் இரைச்சலில் அமுங்கிவிடாத தொனியில்தான் அவர் அதைச் சொன்னார்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு கேட்டேன்: “முஸ்லீம்களை ஏன் வெட்டணும்?”

“பக்கத்துக் கிராமத்தில் ஒரு பொம்பளையைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டானுவ.”

“ரொம்பக் கொடுமை. இதைச் செஞ்சது முஸ்லீம்தான்கிறதுக்கு என்ன ஆதாரம்?”

“கேள்விப்பட்டோம்.”

“கேள்விப்பட்டதை வச்சி இப்படிப் பேசலாமா?”

அமைதி.

“ஒரு பொம்பளையை மானபங்கப் படுத்தறவன் முஸ்லீமோ இந்துவோ எவனா இருந்தாலும் வெட்டணும்னுதான் நான் சொல்லுவேன். முஸ்லீமை வெட்டணும்னு நீங்க சொல்றது என்ன நியாயம்?”

அவர் சொன்னார்: “நீங்க சொல்றது சரி. எல்லாரும் சொல்றாங்கன்னு நான் வார்த்தையை விட்டுட்டேன்.

‘அண்ணன், தம்பி, மாமன், மச்சான், வாப்பா, காக்கா’ என்று நாங்கள் வளர்த்து வந்த உறவுகளுக்கு என்ன ஆனது? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது மண்ணில் இப்பொழுது வேகமாகப் பரவுவது...மத நோய்.

எனது ஊரில் பல தெருக்களில் சாக்கடை தேங்குகிறது. முக்குக்கு முக்கு குப்பை நாறுகிறது. குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லை. ஒழுங்கான மருத்துவ வசதி இல்லை. மின் விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் அழுது வடிகின்றன, விரல்விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வீடுகள் தவிர. இந்த அவலம் எல்லாத் தெருக்களிலும் இருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் என்ற பேதமில்லை.

இத்ற்காக யாரும் போராட முன்வரவில்லை. ஆனால், மதத்தைக் காப்பதற்காக மட்டும் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்படுகிறது........

..........கொஞ்ச நாட்கள் முன்பு, எங்கள் ஊரிலும், நான் ஊரில் இல்லாதபோது, இப்படியொரு அநாகரிகம் நடந்து ஊர் அமளிப்பட்டு, துப்பாக்கி புகைந்தது.  சில நாள் கழித்து என் மருமகன் சொன்னார்: 

“கலவரம் தொடங்கினவுடனே எங்களை அந்த ஆசாரி அப்பு தன் வீட்டுக்குள்ளே கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. அதே மாதிரி சில முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்துக்கள்தான் புகலிடம் கொடுத்தாங்க. சில இந்துக்களை சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ப் பாதுகாத்தாங்க.”

“அப்போ யாரெல்லாம் அடிச்சிகிட்டது?” என்று என் மாப்பிள்ளையிடம் கேட்டேன்.

“சமூக விரோதிகள். அவங்களுக்கு இது ஒரு சாக்கா அமைஞ்சிட்டுது” என்றார் மாப்பிள்ளை.

ஒரு வெறியாட்டத்துக்கு இடையிலும் பலர் மனிதர்களாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.###

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc