வெள்ளி, 29 மே, 2015

பதிவுலகில் நான் செய்த ‘முதல் பாவம்’!

கடவுளின் ‘இருப்பு’ குறித்துக் கேள்விகள் கேட்பதோ, அவரைச் சாடுவதோ பாவம் என்றால் அந்தப் பாவத்தை நிறையச் சுமந்துகொண்டிருப்பவன் நான். தமிழ்மணத்தில் இணைப்பு[2011]ப் பெற்ற பின்னர் நான் எழுதிய முதல் பதிவு இது. அதாவது, நான் செய்த முதல் பாவம்!                 


 உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத் தேவை உணவு.

ஒவ்வோர் உயிரும் தனக்குரிய உணவை எவ்வாறு பெறுகிறது?

இன்னோர் உயிரைத் தாக்கி அழித்துத்தானே?!

ஓர் உயிர், தாக்கப்படும் போது அது அனுபவிக்கும் வேதனை அளவிடற்கரியது. 

தாக்கப்படும் உயிர் உறும் துன்பமும், தன்னைக் காத்துக் கொள்ள அது நிகழ்த்தும் போராட்டமும், காண்போர் நெஞ்சைக் கலங்க வைப்பவை அல்லவா? 

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து, தன்னை மறந்த சுகத்தில் லயித்துக் கிடக்கும் போது, அசுரப் பசி கொண்ட ஒரு வேங்கையோ அரிமாவோ அதன் மீது பாய்ந்து குரல் வளையைக் கவ்வி, குருதியை உறிஞ்சிக் குடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைக்கும்தானே?

இப்படிப் பதற வைக்கும்...நெஞ்சைப் புண்ணாக்கும் அவல நிகழ்ச்சிகள்தான் இவ்வுலகில் எத்தனை...எத்தனை!

நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்படியான இத்தகைய கொடூர நிகழ்வுகள் நொடிதோறும் நிகழக் காரணமானவர் யார்? 

கடவுள்தானே?

உயிர்கள் செய்யும் முதல் பாவத்திற்கும்[இந்த முதல் பாவமே பல பிறவிகளுக்கும் இன்பதுன்பங்களுக்கும் காரணமாகின்றன என்கிறார்கள்] அடுத்தடுத்த பிறவி[?]களில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கும் கடவுளே காரணமாகிறார்!

“உயிர்களைத் தீங்கு செய்யத் தூண்டுவது கடவுளல்ல; அதைச் செய்வது ஒரு தீய சக்தி[சாத்தான்]” என்று  சப்பைக்கட்டுக் கட்டுவது ஆன்மிகவாதிகளின் வழக்கம்.

தீய சக்தி ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதை யார் படைத்தது?

கடவுள்தானே?[படைத்தல் அவருக்கு மட்டுமே சாத்தியமானது]

அவ்வாறாயின்.............................................

தீய சக்தி கடவுளால் படைக்கப்பட்டு அவர்தம் ஆசியுடன் கடமை ஆற்றுகிறதா?

அல்ல எனின்.......................................

தானாகத் தோன்றிய, அல்லது கடவுளுக்குப் போட்டியாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் கடவுள் ஈடுபட்டிருக்கிறாரா?

அவருக்கும் அந்தச் சக்திக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதா? 

அந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும்?

இருவரில் ஜெயிக்கப் போவது யார்?

ஒருவேளை..... வெற்றி தீய சக்தியின் பக்கம் என்றால், அப்புறம் அதுவேதான் கடவுளா?

அதைத்தான் உயிர்கள் வழிபட நேருமா?

அப்புறம் கடவுள்?!

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம்தான். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்பதுதான் புரியவில்லை!

புதன், 27 மே, 2015

‘அவனா இவன்?’.....அன்று அண்ணா சொன்ன குட்டிக்கதை!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓர் ஓவியன். அவன் கிறிஸ்து மார்க்கத்தைச் சேர்ந்தவன். உலகமெல்லாம் கிறிஸ்துவ மதம் பரவ வேண்டும்; ஓவியக்கலை வளர வேண்டும் என்ற எண்ணத்தில் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் ஓவியமாக வரைந்தான்.

பலவற்றை ஓவியமாக்கிய பிறகு, ஏசுநாதருடைய அருள் ஒழுகும் கண்கள் குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதை வரைய வேண்டும் என்னும் ஆவல் ஏற்பட்டது.

பல குழந்தைகளின் முகங்களைப் பார்த்தான். எந்தவொரு குழந்தையின் முகமும் அவனுடைய கற்பனைக்கு ஏற்றபடி அமையவில்லை.

கடைசியாக, ஓர் ஏழையின் வீட்டில் தவழ்ந்துகொண்டிருந்த குழந்தையின் முகம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதை மாடலாக வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

ஏசுநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் என்பவனையும் படமாக வரைய நினைத்தான் ஓவியன். எங்கு தேடியும் பொருத்தமான முகமுடைய ஆளைக் கண்டறிய இயலவில்லை.

ஒரு கொலைகாரனைப் போய்ப் பார்த்தான். அவன் கண்களில் குரூரம் இருந்தது. யூதாஸின் கண்களில் குரூரம் இல்லை என்பதால், அவனையும் தவிர்த்தான்.

பல வருடங்கள் தேடியும் பலனில்லை.

ஒரு நாள், மெத்த மெலிந்துபோய்ப் பசி நிறைந்த கண்களுடன், பார்வையில் வெறுப்பைக் கக்கும் ஓர் ஆளைச் சந்தித்தான். அவனிடம், “யூதாஸ் படத்துக்கு ஏற்றவன் நீதான்” என்று சொல்லி, அவனை அமர வைத்து ஓவியத்தை வரைந்து முடித்தான்.

“எவ்வளவு தேடியும் பொருத்தமான நபர் கிடைக்கவில்லை. நல்ல வேளை நீ அகப்பட்டாய்” என்று ஓவியன் நன்றி சொன்னபோது, அந்த ஆள் கேட்டான்: “என்னைத் தெரிகிறதா?”

“இல்லையே” என்றான் ஓவியன்.

“நீங்கள் ஏசுவின் குழந்தை முகம் வரைவதற்கு ‘மாடல்’ ஆக இருந்தவனும் நானேதான். குழந்தையாக இருந்தபோது ஏசு போல இருந்த நான் வளர்ந்து ஆளான நிலையில் யூதாஸ் போல ஆகிவிட்டேன்” என்றான் அந்த ஆள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘அறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100’, பாலாஜி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 14; இரண்டாம் பதிப்பு, 1964.