ஞாயிறு, 3 ஜூலை, 2016

‘இப்தார் நோன்பு’ம் முதலமைச்சர் சொன்ன கடவுள் கதையும்!

“ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருப்பதால் அகமும் புறமும் தூய்மை அடைகிறது. அதன்மூலம் இறைப்பற்றும் அன்பும் மேலோங்குகிறது. தர்ம சிந்தனை தழைத்தோங்குகிறது. இதனால் இறைவனின் அருளைப் பெற முடிகிறது..... ”

சென்னையில் நடந்த, அ.தி.மு.க. சார்பான ‘இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி’[02.07.2016]யில் மேற்கண்டவாறு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், மேலும் பல நற்கருத்துகளை வழங்கியதோடு நபிகள் நாயகம் குறித்த ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார்கள். கதை.....

‘நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பிடிக்காத எதிரிகள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். 

ஒரு நாள் இரவு, அவர்களின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து நண்பரின் இல்லத்துக்கு நபிகள் நாயகம் வந்தார். அவரைத் ‘தெளர்’ என்ற மலைக் குகைக்கு அழைத்துச் சென்றனர். எதிரிகள் அந்த இடத்தையும் மோப்பம் பிடித்து வந்துவிட்டனர்.

அப்போது நபிகள் நாயகத்தின் நண்பர் அவரிடம், “எதிரிகள் நம்மைக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்களிடம் சிக்கி இறப்பது உறுதி” என்றார். அப்போது நபிகள் நாயகம், “தோழரே பயப்பட வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் நம்மோடு இருக்கிறார். எனவே, அச்சம் என்ற சொல்லுக்கு அவசியமில்லை” என்றார்.

அப்போது எதிரிகள் குகைக்கு அருகில் வந்தனர். ஆனால், எதிரிகள் உள்ளே நுழைவதற்குள்  நுழைவாயிலில் சிலந்தி வலை பின்னிவிட்டது. 2 புறாக்கள் படுத்திருந்தன.

அதைப் பார்த்த எதிரிகளில் ஒருவன், “நாம் தேடிவந்தவர்கள் இங்கே இருந்தால் சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். புறாக்களும் இருக்காது. எனவே, அவர்கள் இங்கே இருக்க வாய்ப்பே இல்லை” என்று கூறினார். அதை ஏற்று அவர்கள் அனைவரும் திரும்பிச் சென்றார்கள்....’

கதையின்படி, சிலந்தியை வலை பின்னச் செய்து நபிகள் நாயகத்தைக் காப்பாற்றுகிறார் கடவுள். அவர் நினைத்திருந்தால், நபிகள் நாயகத்தையும் பிற நண்பர்களையும் எதிரிகளின் கண்ணுக்குப் புலப்படாமலே மறைத்திருக்க இயலும். வேறு வழிமுறைகளையும் கையாண்டிருக்க முடியும். நாம் கேட்க நினைப்பது, இறை நம்பிக்கையைத் தக்க வைக்க இம்மாதிரிக் கதைகள் இந்த அறிவியல் யுகத்தில் தேவையா என்பதே.

மக்களில் பலரும் இன்று ஆழ்ந்து சிந்திக்கக் கற்றிருக்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் எல்லாம் இறை மறுப்பாளராக மாறிவிட்டார்கள் என்று நாம் சொல்லவில்லை. ஆயினும், இம்மாதிரியான கதைகள் குறித்துக் கணக்கிலடங்காமல் கேள்விகள் கேட்கத் தலைப்பட்டுவிட்டார்கள் என்று எண்ணுகிறோம். அதை முதலமைச்சரோ மதப் பிரச்சாரகர்களோ மறுக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம்.

எனவே, கடவுளின் பெருமைகளைப் பரப்புரை செய்வோரிடம் நாம் அன்புடன் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள்......

கடவுள் நம்பிக்கையால் நன்மைகள் விளையும் என்று நம்புகிற நீங்கள், அந்த நன்மைகளைப் பட்டியலிடுங்கள்; தவறில்லை. அருள்கூர்ந்து நம்ப முடியாத கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.

நன்றி: தமிழ் நாளிதழ்கள்[03.07.2016].

வெள்ளி, 1 ஜூலை, 2016

இந்தக் கதையில்... வயாகரா 30%, சிரிப்பு 30%, சஸ்பென்ஸ் 40% !!!

“எழுபது வயதுக் கிழவன் நீ. எழுதுவதற்கு நல்ல விசயமே இல்லையா?” என்று என்னை ஏசாதீர். இது என் வாலிப வயதில்[21] எழுதிய கதை!


ஏறத்தாழ மூன்று மணி நேர சிறை வாசத்திற்குப் பிறகு, திரையரங்கிலிருந்து விடுதலையாகி வெளியேறிக்கொண்டிருந்தது ரசிகர் கூட்டம்.

அந்த அலைகடலில் எதிர் நீச்சல் போட்டேன்.

பரமசாது போல் தோன்றிய ஒரு வாலிபருக்கு “ஹலோ” சொல்லி,  “படம் பார்த்துட்டுத்தானே வர்றீங்க?” என்றேன்.

அவர், சிறிது தலையசைத்துப் பார்த்த பார்வை, “ஆமா, எதுக்குக் கேட்கிறீங்க?” என்ற ஒரு பதிலையும் கேள்வியையும் உள்ளடக்கியிருந்தது.

“குடும்பத்தோட பார்க்கத் தகுந்த படம்தானே?” -நான்.

“குடும்பம் ஓட நீங்க மட்டும் தனியா பார்க்கத் தகுந்த படம்!” என்று வார்த்தை ஜாலம் புரிந்துவிட்டுப் போனார் அவர்.

சிரித்த முகத்துக்காரர் ஒருவரை வளைத்துப் பிடித்தேன்.

”நல்ல கலைப்படம்னு சொன்னாங்க. எப்படியிருக்கு?”

“மட்டமான செக்ஸ் படம். தியேட்டர் மாறி வந்துட்டீங்க.”

மேலும் விளக்கம் கேட்க நினைத்த போது, அவர் கழன்றுகொண்டுவிட்டார்.

அவநம்பிக்கை என்னிடம் விடை பெறவில்லை.

எதிரே, மோதுவது போல் வந்த ஒருவரை லாகவமாகப் பிடித்து நிறுத்தி, “படம் எப்படி?” -விசாரித்தேன்.

“போஸ்டர்லே செக்ஸ் காட்சிகள் நிறைந்த படம்னு போட்டிருக்கான். செக்ஸுக்கு முன்னால் ஒரு பயங்கரம் சேர்த்துக்கோங்க. ஒரு ‘ஏ’ தான் கொடுத்திருக்கான். ஒன்பது ‘ஏ’ கொடுக்கலாம். ஃபிரேமுக்கு ஃபிரேம்...சே...!” -கூடை கூடையாய் வெறுப்பைக் கொட்டிவிட்டுப் போனார் அவர்.

அவரைப் போகவிட்டுத் திரையரங்க முகப்பை நுகர்ந்தேன்.

பெண் வாடையே வீசவில்லை! கண்டிப்பாக இது ஒரு ‘முழுநீல’ப் படம்தான் என்று முடிவெடுத்தேன்.

அதை உறுதிப்படுத்துவது போல், டிக்கெட் கவுண்ட்டரில் முட்டி மோதும் ரசிகர் கூட்டம்!

களத்தில் இறங்கப் போதிய உடல் பலம் இல்லாததால், நான்கு மடங்கு விலை கொடுத்து ‘பிளாக்’கில் ஒரு டிக்கெட் வாங்கினேன்.

ஏனுங்க சிரிக்கிறீங்க?

“ஆபாசப் படம்னு தெரிஞ்சி டிக்கெட் வாங்கியிருக்கே. இதுவரைக்கும், கலைப்படமா, குடும்பப் படமான்னு அபிப்ராயம் சேகரிச்சியே, அது ஏனய்யா?"ன்னு கேட்குறீங்களா?

அது வந்து...அடுத்தவங்களை அணுகி,  “இது நல்ல செக்ஸ் படமான்னு கேட்கக் கூச்சமா இருக்குங்க. கூச்சப்படாம கேட்டா, கேட்கிறவனை ஒரு சாக்கடைப் புழவாகப் பார்க்கிறாங்க. எல்லார்கிட்டேயும் ஒருவித போலித்தனம் இருக்கு. அதனாலதானுங்க இப்படியொரு தந்திர உத்தியைக் கையாண்டேன்.

"இதுக்குப் போயி இப்படி அலட்டிக்கணுமா? விளம்பரப் போஸ்டரைப் பார்த்தாலே படத்தோட தரம் புரிஞ்சி போயிடுமே”ன்னு சொல்றீங்களா?

அடப் போங்கய்யா, போஸ்டரைப் பார்த்து எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோட படம் பார்க்கப் போயி, நான் எத்தனை தடவை ஏமாந்திருக்கேன் தெரியுங்களா?

[முன்னணி வார இதழான ‘ராணி’யில் பற்பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது]

****************************************************************************************************************************************************
முதல் முறை வாசித்தவர்களுக்கு...“நன்றி”

ஏற்கனவே ஒரு முறை வாசித்தவர்களுக்கு...“மன்னியுங்கள். சரக்கு தீர்ந்துடிச்சி”