ஞாயிறு, 18 டிசம்பர், 2016

“நான் சுகவாசி அல்ல” - பெரியார்

கடவுளையும் மூடநம்பிக்கைகளையும் மட்டுமல்ல,  சுகபோகங்களையும் வெறுத்து வாழ்ந்தவர் பெரியார். தம் [அ]சுகபோக வாழ்வு குறித்து அவரே சொல்கிறார். படியுங்கள்.

#சாதாரணமாக நான் ஈசிசேரில் உட்காருவதே கிடையாது. எங்கள் வீடுகளில் விலையுயர்ந்த நாற்காலிகளும் சோபாக்களும் இருக்கிறதென்றாலும் ஈஸிசேர் கிடையாது. இருந்தாலும் அதை நான் உபயோகிக்க மாட்டேன்.

சாய்ந்த நிலையில் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை; அதை நான் விரும்புவதும் இல்லை. இம்மாதிரிப் பழக்கமெல்லாம் சுகவாசிகளுக்கு உரியவை. 

என் வாழ்நாளில் பெரும்பான்மையும் பிரயாணம்தான் அதிகம் என்றபோதிலும், பிரயாணக் காலத்தில் அநேகமாய் மோட்டார் வண்டியில் படுப்பதும் இல்லை. இரவு பகலாய்ப் பிரயாணம் செய்ய நேரிட்டாலும் பெரும்பான்மையும் கண் விழித்துக்கொண்டுதான் செல்வேன். ஏதாவது இரவு நேரங்களில் மட்டும் தூங்கும்படியாக மணியம்மையார் வற்புறுத்துவதுண்டு. நானும் அதற்கு ஏதேதோ கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்த்துவிட்டுக் கடைசியில் பெரிய ரகளை உண்டாகி அதன் பிறகுதான் சிறிது நேரம் படுப்பதுண்டு. ஆனால், அதிகம் தூங்கமாட்டேன். இப்படிப்பட்ட ரகளையின் காரணமாக நானும் மணியம்மையும் ஓரிரண்டு தினங்கள் பேசாமல்கூட வருத்தமாக இருப்போம்.

இப்படி எனக்கு, ‘தூங்குவது’ என்ற பழக்கம்கூட வெறுப்பாகிவிட்டது. தூங்காமல் இருப்பதால் கஷ்டம் தோன்றுவதே இல்லை. 

இப்படிச் சுகம் என்ற ஒவ்வொரு பழக்க வழக்கமும்  எனக்கு வெறுப்பாகிக்கொண்டும், சுகம் இல்லாவிடில் அதனால் ஒருவிதக் கஷ்டமும் இன்றியும் இருக்கிறது.............

.............எனது வார்த்தைகளும் எழுத்துகளும் செய்கைகளும் தேசத் துரோகம் என்றும், வகுப்புத் துவேஷம் என்றும் பிராமண துவேஷம் என்றும், மான நஷ்டம் என்றும், அவதூறு என்றும், ராஜ துரோகம் என்றும், நாஸ்திகம் என்றும், மத தூஷணை என்றும் சிலர் சொல்லவும் ஆத்திரப்படவும் ஆளானேன்.

அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள் என்பவர்கள் என்னை வையவும் என்னைக் கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அவர்கள் அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன்.

இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும் என்று நானே யோசிப்பதுண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்; நாம் ஏன் இவ்வளவு தொல்லைகளையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணமும் புகழும் சம்பாதிக்கிறோமா?

நமக்கு ஏன் இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவியதுண்டா? ஒரு தலைவராவது உதவியது உண்டா?

‘இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பது போல்’ இருக்கிறது என்பதாகக் கருதி விலகிவிடலாமா என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய ஆயுள் காலம் தீர்ந்துவிட்டது. இனி நாலோ ஐந்தோ, அல்லது, அதிகமிருந்தால் பத்து வருட காலமோ இருக்கலாம்.  இந்தக் கொஞ்ச காலத்தை ஏன் நம் மனசாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்றெல்லாம் யோசித்து மறுபடியும் இதிலேயே உழன்றுகொண்டிருக்கிறோமே தவிர வேறில்லை#
===============================================================================

நன்றி: ‘பெரியார் சாதித்தது என்ன?’, தொகுப்பு: செந்தமிழ்க்கோ; குடியரசு பதிப்பகம். 2ஆம் பதிப்பு, 2009.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

இப்படியும் ஒரு நோயா?!...அடக்கடவுளே!!

“அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!” -சொன்னவர் மறைந்த கவிஞர் இன்குலாப். இது நடந்த நிகழ்ச்சி.
படம்: google
#மறைந்த கவிஞர் ‘இன்குலாப்’ அவர்களுக்குச் சர்க்கரை நோய் முற்றிய நிலையில் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு காலை இழந்த நிலையிலும் தீரத்துடன் அவரின் போராட்டம் தொடர்ந்தது...இருத்தலுக்கான போராட்டம்.

சில மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் வைகறையும் கவிஞரைச் சந்திக்கச் சென்றோம். அவர் முகம் வாடியிருந்தது. அவரே சொன்னார்: “சமீப காலமாக ஒரு சித்ரவதையை அனுபவிக்கிறேன். அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!”

“என்ன சொல்கிறீகள் இன்குலாப்? இல்லாத காலின் கட்டை விரலில் வலியா?” என்றேன்.

“ஆமாம்! இல்லாத காலின் கட்டை விரல்தான் வலிக்கிறது...தாங்க முடியாத வலி. கால் அரிக்கிறது. கையைக் கொண்டுபோனால் அங்கே கால் இல்லை. வெற்றிடம்! ஆனாலும் அரிப்பு தாங்க முடியவில்லை...துடிக்கிறேன்” என்றார் வேதனையோடு.

“டாக்டரிடம் காண்பித்தீர்களா?”

“என் மகளே ஒரு மருத்துவர்தானே! மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது! அதுக்குப் பேரு ‘ஃபாண்டம் பெயின்’ என்கிறார்கள். அவயவத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன்? அப்படியானால், உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா? என்ன...என்ன இதெல்லாம்?”

கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டார். விடை தெரியாத கேள்விகள்!#

கவிஞர் இன்குலாப்பைச் சந்தித்து உரையாடியவர் ‘தஞ்சாவூர்க் கவிராயர்’.

கவிராயருக்கும் இப்பேட்டிக் கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’[09.12.2016] நாளிதழுக்கும் நம் நன்றி.

இப்பதிவு, கட்டுரையின்  ஒரு பகுதி மட்டுமே.