சனி, 23 செப்டம்பர், 2017

'ஷீரடி ஃபக்கீர்’, பகவான் சாய்பாபா ஆனது எப்படி?!

'சாய் பகவான் நல்ல பொன் நிற மேனியும் நீல நிறக் கண்களும் கொண்டவர். இவர் பல் துலக்கியதை எவரும் பார்த்ததில்லை. இவரின் பற்கள் காறை படிந்து நிறம் மாறிக் காட்சியளிக்கும்'.....ஒருவர் எளிய மனிதனாக இருந்து உலகம் போற்றும் பகவானாக உயர்வதற்கு இதுவும் ஒரு தகுதி போலும்!

மழைக்குக்கூட இவர் பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கியது இல்லை. ஆனாலும், பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே யூகித்துவிடும் அபூர்வ ஞானசக்தி இவருக்கு இருந்ததாக ஏராளமானோர் நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள்.

இந்தப் பகவான் சிறு வயதில், அழுக்கு உடையுடன் காடுகளில் திரிவதும் மரங்களின் அடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதுமாக இருப்பாராம். மற்ற சிறுவர்கள் இவரைக் ‘கேணப் பக்கிரி’ என்று எள்ளி நகையாடுவார்களாம். 

ஆனால், பயாஜி என்பவரோ இவரைக் காண நேர்ந்தபோதெல்லாம், ‘இவன் சாதாரணச் சிறுவன் அல்ல. இவனிடம் அற்புதமான சக்தி உள்ளது. தெய்வத்தன்மை நிறைந்திருக்கிறது. கடவுளின் அவதாரம் இவன்’ என்று நினைத்தாராம்; பிறரிடம் சொன்னாராம். 

இவ்வாறே மேலும் பல பேர் நினைத்தார்களாம்; சொன்னார்களாம். விளைவு.....

இளம் பருவத்திலேயே இவருக்குப் பல சீடர்கள் உருவானார்கள். ஞானி என்றும் மகான் என்றும் பலரும் போற்றத் தலைப்பட்டார்கள். ஃபக்கீர், பகவான் சாய்பாபா ஆனார்.

இவர் நிகழ்த்திய அற்புதங்கள் அளவிறந்தவை[ஆதாரம்: ‘சீரடியும் சீடர்களும்’, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.முதல் பதிப்பு: 2011.] என்கிறார்கள். அவற்றில் சில.....

*தனக்கிருந்த ஆஸ்துமா நோயைக் குணப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் செத்த சவமாகக் கிடந்து[பிணத்துக்குக் காவல் இருந்தவர் ஒரு பக்தர்] பின்னர் உயிர்பெற்று எழுந்தாராம்.

*தான் 72 பிறவிகள் எடுத்ததாக இவர் சொல்லிக்கொள்வதுண்டு.

*“நான் புனித நீராடுவதற்காகப் பிரயாகை செல்ல வேண்டும்” என்று சாய் பாபாவிடம் ஒரு பக்தர் சொன்னார்.

“அங்கெல்லாம் எதற்குப் போகிறாய்? இங்கேயே பிரயாகை இருக்கிறது” என்றார் இவர்.

பாபா ஏதோ அற்புதம் நிகழ்த்தப்போவதைப் புரிந்துகொண்ட பக்தர் இவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்போது....

கூடியிருந்தோர் கண்டு வியந்து புளகாங்கிதம் பெறும் வகையில் சீரடி பகவானின் கட்டை விரல்களில் கங்கையும் யமுனையும் பெருக்கெடுத்ததாம். “பாபா...பாபா” என்று பக்தி முழக்கம் செய்த பக்தகோடிகள் புனித நீரைத் தத்தம் தலைகளில் அள்ளித் தெளித்துப் பாவம் போக்கிக்கொண்டார்களாம்[வெள்ளத்தில் முங்கிக் குளித்துப் பரவசப்பட்டார்கள் என்று ஏனோ நூலாசிரியர் குறிப்பிடவில்லை!].

*“குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றார் ஒருவர் இவரிடம்.

“உங்களுக்குக் கீழேயே இருக்கிறது” என்றார் சீரடி.

குழப்பமடைந்த அவர், தான் அமர்ந்திருந்த பாறையின் மேற்பரப்பை மெல்லச் சுரண்டினார். என்ன ஆச்சரியம்! பாறையிலிருந்து இளநீர் போன்ற சுவையான நீர் பெருகி வழிந்தது. நீர் கேட்ட ‘நானா’ என்ற அந்தப் பக்தர் தன் தாகம் தீரப் பருகினாராம்.

*தன்னைச் சரணடைந்த பக்தரொருவர் நடைப்பயணம் மேற்கொண்டபோது, வழியிலிருந்த ஒரு தேனீர்க் கடைக்காரரிடம் பயணிக்குத் தேனீர் வழங்குமாறு அசரீரியாகச் சொன்னாராம் பகவான் சாய். பகவானின் அதியற்புத சக்தியை எண்ணி எண்ணிப் பயணி அகமகிழ்ந்தாராம்.

*பிச்சைக்காரராக நாயாக எல்லாம் உருமாறித் தன் பக்தர்களை இவர் சோதித்ததுண்டு.

*இவரின் அருட்பார்வை பட்டு இவரிடம் மேலாளராக இருந்த ஒருவரின் கண் வலி காணாமல் போனது.

*பாம்பு தீண்டி, உடம்பில் நஞ்சு ஏறிக்கொண்டிருந்த ஒருவரை இவரிடம் தூக்கிவந்தார்கள். “ஏறாதே... ஞ்இறங்கு” என்று இவர் கட்டளை இட்டவுடன், நஞ்சு மேலே ஏறாமல் முற்றிலுமாய் இறங்கிவிட நோயாளி முழுமையாகக் குணமடைந்தார்.

*படிப்பறிவில்லாத பாபா ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார்.

மேற்கண்டவை போல எத்தனையோ அடுக்கடுக்கான அதிசயங்களை இவர் நிகழ்த்தியதாக நூலாசிரியர் பரவசப்பட்டிருக்கிறார்; சீரடியாரின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஆக,

ஃபக்கீர் என்னும் சாதாரண மனிதரை, மகான் ஆக்கியவை பொய்யும் புனைந்துரையும் விரவிய இம்மாதிரி நூல்களும் இவை போன்ற ஊடகங்களும்தான்.

பிறருக்கு உரியவற்றை அபகரிப்பதும் விபச்சாரம் செய்வதும் போதைப் பொருள்களை விற்பதும் குற்றங்கள் என்று கருதும் அரசு, ஆன்மிகத்தின் பெயரால் அவதாரங்களையும் மகான்களையும் இட்டுக்கட்டுதல் மூலம் உருவாக்கி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும்  செயலைக் குற்றமாகக் கருதுவதில்லை. இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோரைத் தண்டிப்பதும் இல்லை.

இந்த அவல நிலை மாறுவது எப்போது?

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

டுபாக்கூர் வாஸ்துவும் டூப்ளிகேட் கடவுள்களும்!!!

‘வாஸ்து’வுக்குச் 'சவக்குழி’ தோண்டும் நீண்ட[மிகப் பழைய] பதிவு. பொறுமையுடன் படியுங்கள்.

நவக்கிரகங்களை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு ’ஜோதிடம்’ கட்டமைக்கப்பட்டது போல, எட்டுத் திசைகளையும் ஆதாரக்  களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாஸ்து என்பது அனைத்து வாஸ்து தோஸ்துகளும் அறிந்ததே.

வாஸ்து பற்றி விஸ்தாரமாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், ’திசை’யைப் பற்றி அத்துபடியாய் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.

திசை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கும் [உயர்திணை அஃறிணை என்று எதுவாகவும் இருக்கலாம்] இன்னொரு பொருளுக்கும் இடையிலான நேர்க்கோணத்தைத் [கோடு] திசை என்கிறார்கள். [மன நிறைவு தரும் விளக்கம் ஆங்கில விக்கிபீடியாவில்கூட இல்லை]

'The line along which anything lies, faces, moves etc.....' என்கிறது  www.definitions.net.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகியவற்றை, அல்லது பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான பொருள்களைப் புலன்களால் அறிவது போல, திசையும் அறியத்தக்க ஒன்றா?

இல்லை என்பதே அறிவியல் தரும் பதில்.

ஆயினும், பொருள்கள் நிலைகொண்டிருக்கும் இடத்தை அல்லது அவற்றின் இயக்கத்தின் போக்கை அறிய நாம் கிழக்கு முதலான திசைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

உருண்டை வடிவத்தில் சுழன்றுகொண்டிருக்கிற இந்தப் பூமியில் அது எப்படிச் சாத்தியமாயிற்று?

தோன்றி மறைகிற சூரியனை முன்னிலைப்படுத்தி, அது உதயமாகிற நேர்க் கோணத்தைக் கிழக்கு என்றார்கள்.

எனவே, சூரியன் தோன்றுகிற பக்கம் கிழக்கு ஆயிற்று.

கிழக்கில் சூரியன் தோன்றுகிறான் என்பது தவறு. காரணம், உண்மையில் கிழக்கு என்று எதுவும் இல்லை என்பதே. [பாபு என்பவர், ‘செம்புலப் பெயல் நீராவோம்’ என்னும் தலைப்பில், முக நூலில் திசை பற்றி எழுதியிருக்கிறார்]

கிழக்கு என்பதற்கு எதிர்த் திசை மேற்கானது. இடப்பக்கம் வடக்கு. வலப்பக்கம் தெற்கு.....இப்படித் திசைகள் உருவாக்கப்பட்டன.

இரவுப் பொழுதில், வட திசையில் தெரியும் துருவ நட்சத்திரம், வட திசைக்கான அடையாளமாகவும் கொள்ளப்பட்டது. பழங்காலத்தில், மரக்கலப் பயணங்களில், இந்நட்சத்திரமே திசை அறிய உதவியிருக்கிறது. இன்று புதிய சாதனங்கள் வந்துவிட்டன.

அதே போல, விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட காந்த சக்தியும் வடதிசைக்கான அடையாளமாக அறியப்பட்டது.

காந்த சக்தி என்பது, புவியீர்ப்பு சக்தி போல பூமியில் இயற்கையாக உள்ள ஒரு ஈர்ப்புச் சக்தி. அதுவும் ஓர் அடையாளம்தான். வடதிசையில் ஈர்ப்புச் சக்தி இருக்கிறது. அவ்வளவே. ஈர்ப்புச் சக்தி இருப்பதால் அது வடதிசை ஆகிவிடாது.

ஆக, மேற்கண்ட தகவல்களின் மூலம், இந்தப் பூமி உருண்டையில், ஐம்புலன்களால் அறியத்தக்க வகையில் திசை என்பதே இல்லை; அது இயற்கையானதும் அல்ல; அது, மனித குலம் தன் வசதிக்காக உருவாக்கிக் கொண்ட குறியீடு[?] என்பதை நம்மால் அறிய முடிகிறது.

திசை இல்லை என்பதை, அகன்று பரந்து விரிந்து கிடக்கும் விண்வெளியில் மனதைச் செலுத்தினால் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வானவெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரியன் முதலான கோள்களையும், கோடானுகோடி நட்சத்திரங்களையும் ஒன்று மிச்சமில்லாமல் துடைத்தெறியுங்கள் [கற்பனையாகத்தான்].

இப்போது வெற்று வானம் மட்டுமே உங்கள் கண்முன் விரிகிறது, “கிழக்கே பார்” என்று அசரீரியாக ஒரு குரல் ஒலிக்கிறது. பார்க்கிறீர்கள்.

கிழக்கு தெரிகிறதா? இல்லைதானே?

காரணம், ’வெளி’க்குத் திசை இல்லை என்பதுதான்.

மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் கோள்களையும் வெளியில் இடம் கொள்ள வையுங்கள். இப்போது மட்டும் திசை தெரிகிறதா என்ன? இல்லைதானே? துருவ நட்சத்திரத்தை வைத்து ஓரளவு அறியலாம் என்கிறார்கள்.

பூமியில் இடம் கொண்டிருப்பதால், மேல் - கீழ் என்பனவற்றை உணர்கிறோம். உருண்டை உருண்டையாக விண்வெளியில் அலைந்து திரியும் கோள்களுக்கோ பிறவற்றிற்கோ மேல் - கீழ், பக்கவாட்டு என்பனவெல்லாம் இல்லை.

இப்போது, பதிவின் தலைப்புக்கு வருவோம்.

சுழன்று கொண்டிருக்கும் உருண்டை வடிவான இந்தப் பூமிக்கோ, பிரபஞ்ச வெளிக்கோ திசைகளே இல்லாத நிலையில், இந்த வாஸ்துகாரர்கள் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடங்கள் கட்டுவதற்கென்று, கட்டுப்பாடுகளை உருவாக்கியது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

இதை, இந்திய நாட்டின் அரிய பொக்கிஷம் என்கிறார்கள்.

5000 ஆண்டு பழைமையான விஞ்ஞானம் என்கிறார்கள்.

விஞ்ஞானம் என்று சொன்ன அதே வாயால், “தத்துவம் மிகுந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது” என்கிறார்கள் [ustrology. dinakaran.com/vastu.asp]

விஞ்ஞானிகள் கண்டறிந்து சொன்ன cosmic force, காந்தசக்தி பற்றியெல்லாம் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

நமக்கு, உடல் நலமும் மகிழ்ச்சியும் மன உணர்வுகளாலோ, உடற்பயிற்சியாலோ கிடைக்காதாம். அவற்றை நமக்கு வாரி வழங்குவது வாஸ்துதானாம்.

இன்னும் எத்தனை எத்தனையோ பொய்யுரைகள்; புளுகுகள்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், பழங்காலக் கட்டடக் கலைஞர்கள், மண்ணின் தன்மை, மரங்கள், கற்கள் போன்றவற்றின் உறுதிப்பாடு, கட்டடத்தின் பரப்பளவு, உயரம், வெளிச்சம், காற்று போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கலையம்சமும் நீண்ட ஆயுளும் பொருந்திய அழகிய கட்டடங்களைச் சமைப்பதற்குக் கட்டடக் கலை இயலை உருவாக்கினார்கள். வாஸ்து பண்டிதர்கள் மூட நம்பிக்கைகளைப் அதில் புகுத்திவிட்டார்கள்.

இந்த வாஸ்துகாரர்கள், பொது மக்களிடம் அள்ளிவிடும் பொய்கள் அளவிறந்தவை.

இந்த வாஸ்துவுக்கென்று ஒரு கடவுள் இருக்கிறாராம்.

தேவர் அசுரர் போரில், அசுரர்கள் புரிந்த அலம்பல்களை முழுமுதல் கடவுளான சிவனிடம் தேவர்கள் சொல்ல, அவர் கடுங்கோபம் கொள்கிறார். அவர் உடம்பிலிருந்து வேர்வை [நல்ல வேளை, அது வேர்வைதான். வேறெதுவுமில்லை] சுரக்கிறது. [முழுமுதல் கடவுளுக்கும்கூட வேர்க்குமா என்று குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப வேண்டாம்]. அந்த வேர்வைதான் வாஸ்துவாக வடிவம் கொண்டு, அசுரர்களை அழித்ததாம்!

சிவபெருமானின் உத்தரவுப்படி, அசுரர்களின் சடலங்களை அழித்துவிட்டு, இந்த மண்ணுலகிலேயே உறங்க ஆரம்பித்தார் வாஸ்து பகவான். முழுமுதல் கடவுளின் கட்டளைப்படி, ஓர் ஆண்டில் எட்டு நாட்கள் மட்டும் விழித்திருந்து, சிவபெருமானைத் துதி பாடுகிறாராம். [அதென்ன கணக்கு எட்டு? புரிந்தால் சொல்லுங்கள். உங்களுக்குக் கணக்கில்லாமல் திருப்பதி லட்டு வாங்கித் தருகிறேன்!]

ஈசனுக்குச் சொந்தமான வடகிழக்குத் திசையில் தலை வைத்து, தென்மேற்கில் இரு பாதங்கள் நீட்டி சயனம் செய்கிற இவரை [வாஸ்து புருஷன் என்று சொல்கிறார்கள்] மக்கள் வழிபட்டால் நற்பயன் விளைவது நிச்சயம் என்கிறார்கள் வாஸ்து மேதைகள்!

வீட்டின் தலைவாசல் அருகே பூஜை அறை கூடாது.

காரணம் என்ன தெரியுங்களா?

சாமிக்கு அதிர்ச்சி ஏற்படுமாம்! இழவுக்குப் போய் வர்றவங்களும் வீட்டுக்குத் தூரமான பெண்களும் நுழைவதால் சாமிக்கும் தீட்டுப் படுமாம்!

‘படுக்கை அறையில் தையல் மிஷின் இருந்தால் புருஷன் பெண்ஜாதிக்கிடையே அடிக்கடி சண்டை வரும்.’

ஒன்னுக்கு ரெண்டு பீரோவா வெச்சா, தினசரி சண்டை வருமில்லையா?

வெகு சுளுவா பெண்டாட்டையை கழட்டி விட்டுட்டுப் புதுப் பெண்டாட்டி கட்டிக்கலாம்.

‘நீங்கள் பணம் வைக்கிற பெட்டி அல்லது லாக்கர் தென்திசை அறையில் இருத்தல் குற்றம்.’ ஏன்னா, அந்த திசையில் யமதர்மன் இருக்கிறார்.

யமன் உயிரைத்தான் பறிப்பான்னு நினைச்சிட்டிருந்தோம். பணத்தையும் பறிச்சிடுவான்னு தெரியுது!

அதே போல, குபேரனுக்குச் சொந்தமான வடதிசையிலும் செல்வத்தை வைக்கக் கூடாதாம்.

சாமி இருக்கிற பூஜை அறையில் வைத்தாலும் சேமிப்பு அதோ கதிதான்!

படுக்கையறை, சமையலறை, கக்கூஸ்னு எது எதை எங்கெங்கே வைக்கணும்னு வாஸ்து விஞ்ஞானிகள் அத்துபடியா சொல்லியிருக்காங்க. அதன்படிதான் நீங்க நடந்துக்கணும். மீறினா அதுக்கான தண்டனையை அனுபவிக்க நேரும்.

நீங்க பாட்டுக்கு, கக்கூஸை ஈசான முலையில் அமைச்சிடக் கூடாது. அது ஈசனுக்குரிய மூலை இல்லையா? கக்கூஸ் நாத்தம் அவர் மூக்கைத் துளைக்குமே.

வடக்கு-குபேரன், தெற்கு-யமன் வடகிழக்கு-ஈசன்.....இப்படி எட்டு திக்குகளையும் எட்டு கடவுள்கள் காக்கிறார்கள்!

கடவுள் ஒருவனே. அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான் என்று என்று சொல்லப்படும் நிலையில் திசைக்கொரு குட்டிக் கடவுளை நியமனம் செய்தது யார்?

அந்த முழு முதல் கடவுளேவா?

எட்டு பேரில் ஒரு பெண் கடவுள்கூட இல்லையே? கடவுளர் சமூகத்திலும் பெண் இனத்துக்கு அநீதியா?

‘மாணவர்கள் தெற்கு கிழக்காகப் படுக்க வேண்டும். மாணவியர், கிழக்கு மேற்காக. தம்பதியர் தெற்கு மேற்காக.....’

சின்ன வீட்டோடு படுக்கும் போது......?

‘பிரபஞ்ச சக்தியை வீட்டுக்குள் வரவழைக்கிறது வாஸ்து.’

அந்தச் சக்திதான் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடக்கிறதே, நீங்க என்ன வரவழைச்சிக் கிழிக்கிறீங்க?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கதைவிட்டு மக்களில் பெரும்பாலோரை வசியம் செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வாஸ்து விற்பன்னர்கள்.

சிற்பம் மற்றும் கட்டடக்கலை வல்லுநரான கணபதி ஸ்தபதி பற்றி அறியாதார் வெகு சிலரே. நம் பெருமதிப்புக்குரியவர். 2011 ஆம் ஆண்டு காலமானார். அவரிடம், “இன்று பயன்பாட்டிலுள்ள வாஸ்துவும் தாங்கள் அறிந்த வாஸ்துவும் ஒன்றா?” என்று கேட்கப்பட்ட போது, [எழுத்தாளர் திலகவதியின் பேட்டி. ‘இவர்கள் இப்படித்தான் சாதித்தார்கள்’ என்னும் நூலில். அம்ருதம் பதிப்பகத்தின் 2006 ஆம் ஆண்டு வெளியீடு] “நான் அறிந்த வாஸ்து வேறானது” என்கிறார்.

அவர் குறிப்பிடும் வாஸ்து ஓரளவுக்கேனும் அறிவுபூர்வமாக இருக்கும் என்று நம்பலாம்.

அது எவ்வாறிருப்பினும், இன்று நாம் ஏற்க வேண்டிய தலையாய கடமை, அறியாமை மிகுந்த நம் மக்களை இந்தப் பொய்யர்களிடமிருந்து விடுவிப்பதுதான்.

‘வாஸ்து சம்பந்தமான புளுகுகளை வெளியிட வேண்டாம்’ என்று மனோ டேனியல் என்பவர் ‘இந்து’ஆங்கில நாளிதழுக்கு ஒரு கடிதமே எழுதினாராம்! [www.keetru.com]

'அரசியல் சாசனப்படி, விஞ்ஞானம் அல்லாத இந்த வாஸ்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று பகவான்ஜி ரயானி என்பவர் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது நக்கீரன் வார இதழ்ச் செய்தி.

இப்படிச் சிலர் தம்மால் இயன்றதைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.