வியாழன், 28 செப்டம்பர், 2017

கர்னாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஒரு தமிழனின் பாராட்டும் எச்சரிக்கையும்!

மூடநம்பிக்கைகள் நிறைந்த இந்திய மண்ணில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் பகுத்தறிவாளராக இருப்பது அரிதினும் அரிதான ஓர் நிகழ்வாகும்.

‘மகாராஷ்ட்ராவைப் போல கர்நாடகாவிலும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் காலங்காலமாகச் சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

மத வழிபாட்டுத் தலங்களில் செய்யப்படும் மனிதத் தன்மையற்ற சடங்குகள், ஜோதிடம், மாந்திரீகம், நரபலி உள்ளிட்டவை ஒழிக்கப்படும். குறிப்பாக, மங்களூரு குக்கே சுப்பிரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு[மடே ஸ்நானா], நிர்வாண பூஜை உள்ளிட்ட சடங்குகளுக்குத் தடை விதிக்கப்படும்’  என்று கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2013ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தார்.

இதற்குப் பாஜக, ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன; மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டின. எனினும்.....

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முற்போகுவாதியான சித்தராமையாவுக்கு கன்னட எழுத்தாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்தனர்; தொலைக்காட்சியில் இடம்பெறும் ஜோதிடம், வாஸ்து உள்ளிட்ட மூடநம்பிக்கை வளர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், “சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தலைமையில் சட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு இந்தச் சட்டத்துக்கு முழு வடிவம் அளிக்கப்படும். மதப் பெரியோர்கள், அரசியல் கட்சியினர், முற்போக்கு அமைப்பினர், மடாதிபதிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வரும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும்” என்று சித்தராமையா அறிவித்துள்ளார்[தி இந்து 28.09.2017].

சித்தராமையாவின் இந்த அறிவிப்பை முற்போக்குச் சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்றுள்ளனர்.

துணிச்சலானதொரு  நடவடிக்கையை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் சித்தராமையாவை மனதாரப் பாராட்டுகிறோம்.

இந்தப் ‘புண்ணிய பூமி’[?] யான பாரத தேசத்தில் மூடப் பழக்க வழக்கங்களைக் கண்டித்துப் பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் பகுத்தறிவாளர்கள் கணிசமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இம்மாதிரிப் பழக்க வழக்கங்களை வேரோடு களைந்தெறியச் சட்டம் இயற்றவுள்ள சித்தராமையாவுக்கு, மூடத்தனங்களை நம்பிப் பிழைப்பு நடத்துவோரால் பெரும் தீங்குகள் நேரக்கூடும்; உயிருக்கும் பங்கம் நேரலாம். மிக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்களை அன்புடன் வேண்டுகிறோம்.

சனி, 23 செப்டம்பர், 2017

'ஷீரடி ஃபக்கீர்’, பகவான் சாய்பாபா ஆனது எப்படி?!

'சாய் பகவான் நல்ல பொன் நிற மேனியும் நீல நிறக் கண்களும் கொண்டவர். இவர் பல் துலக்கியதை எவரும் பார்த்ததில்லை. இவரின் பற்கள் காறை படிந்து நிறம் மாறிக் காட்சியளிக்கும்'.....ஒருவர் எளிய மனிதனாக இருந்து உலகம் போற்றும் பகவானாக உயர்வதற்கு இதுவும் ஒரு தகுதி போலும்!

மழைக்குக்கூட இவர் பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்கியது இல்லை. ஆனாலும், பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே யூகித்துவிடும் அபூர்வ ஞானசக்தி இவருக்கு இருந்ததாக ஏராளமானோர் நம்பினார்கள்; இன்றும் நம்புகிறார்கள்.

இந்தப் பகவான் சிறு வயதில், அழுக்கு உடையுடன் காடுகளில் திரிவதும் மரங்களின் அடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்துவிடுவதுமாக இருப்பாராம். மற்ற சிறுவர்கள் இவரைக் ‘கேணப் பக்கிரி’ என்று எள்ளி நகையாடுவார்களாம். 

ஆனால், பயாஜி என்பவரோ இவரைக் காண நேர்ந்தபோதெல்லாம், ‘இவன் சாதாரணச் சிறுவன் அல்ல. இவனிடம் அற்புதமான சக்தி உள்ளது. தெய்வத்தன்மை நிறைந்திருக்கிறது. கடவுளின் அவதாரம் இவன்’ என்று நினைத்தாராம்; பிறரிடம் சொன்னாராம். 

இவ்வாறே மேலும் பல பேர் நினைத்தார்களாம்; சொன்னார்களாம். விளைவு.....

இளம் பருவத்திலேயே இவருக்குப் பல சீடர்கள் உருவானார்கள். ஞானி என்றும் மகான் என்றும் பலரும் போற்றத் தலைப்பட்டார்கள். ஃபக்கீர், பகவான் சாய்பாபா ஆனார்.

இவர் நிகழ்த்திய அற்புதங்கள் அளவிறந்தவை[ஆதாரம்: ‘சீரடியும் சீடர்களும்’, ஆர்.எஸ்.பி. பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை - 14.முதல் பதிப்பு: 2011.] என்கிறார்கள். அவற்றில் சில.....

*தனக்கிருந்த ஆஸ்துமா நோயைக் குணப்படுத்துவதற்காக மூன்று நாட்கள் செத்த சவமாகக் கிடந்து[பிணத்துக்குக் காவல் இருந்தவர் ஒரு பக்தர்] பின்னர் உயிர்பெற்று எழுந்தாராம்.

*தான் 72 பிறவிகள் எடுத்ததாக இவர் சொல்லிக்கொள்வதுண்டு.

*“நான் புனித நீராடுவதற்காகப் பிரயாகை செல்ல வேண்டும்” என்று சாய் பாபாவிடம் ஒரு பக்தர் சொன்னார்.

“அங்கெல்லாம் எதற்குப் போகிறாய்? இங்கேயே பிரயாகை இருக்கிறது” என்றார் இவர்.

பாபா ஏதோ அற்புதம் நிகழ்த்தப்போவதைப் புரிந்துகொண்ட பக்தர் இவரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்போது....

கூடியிருந்தோர் கண்டு வியந்து புளகாங்கிதம் பெறும் வகையில் சீரடி பகவானின் கட்டை விரல்களில் கங்கையும் யமுனையும் பெருக்கெடுத்ததாம். “பாபா...பாபா” என்று பக்தி முழக்கம் செய்த பக்தகோடிகள் புனித நீரைத் தத்தம் தலைகளில் அள்ளித் தெளித்துப் பாவம் போக்கிக்கொண்டார்களாம்[வெள்ளத்தில் முங்கிக் குளித்துப் பரவசப்பட்டார்கள் என்று ஏனோ நூலாசிரியர் குறிப்பிடவில்லை!].

*“குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றார் ஒருவர் இவரிடம்.

“உங்களுக்குக் கீழேயே இருக்கிறது” என்றார் சீரடி.

குழப்பமடைந்த அவர், தான் அமர்ந்திருந்த பாறையின் மேற்பரப்பை மெல்லச் சுரண்டினார். என்ன ஆச்சரியம்! பாறையிலிருந்து இளநீர் போன்ற சுவையான நீர் பெருகி வழிந்தது. நீர் கேட்ட ‘நானா’ என்ற அந்தப் பக்தர் தன் தாகம் தீரப் பருகினாராம்.

*தன்னைச் சரணடைந்த பக்தரொருவர் நடைப்பயணம் மேற்கொண்டபோது, வழியிலிருந்த ஒரு தேனீர்க் கடைக்காரரிடம் பயணிக்குத் தேனீர் வழங்குமாறு அசரீரியாகச் சொன்னாராம் பகவான் சாய். பகவானின் அதியற்புத சக்தியை எண்ணி எண்ணிப் பயணி அகமகிழ்ந்தாராம்.

*பிச்சைக்காரராக நாயாக எல்லாம் உருமாறித் தன் பக்தர்களை இவர் சோதித்ததுண்டு.

*இவரின் அருட்பார்வை பட்டு இவரிடம் மேலாளராக இருந்த ஒருவரின் கண் வலி காணாமல் போனது.

*பாம்பு தீண்டி, உடம்பில் நஞ்சு ஏறிக்கொண்டிருந்த ஒருவரை இவரிடம் தூக்கிவந்தார்கள். “ஏறாதே... ஞ்இறங்கு” என்று இவர் கட்டளை இட்டவுடன், நஞ்சு மேலே ஏறாமல் முற்றிலுமாய் இறங்கிவிட நோயாளி முழுமையாகக் குணமடைந்தார்.

*படிப்பறிவில்லாத பாபா ஆங்கிலத்தில் பேசி அசத்தியிருக்கிறார்.

மேற்கண்டவை போல எத்தனையோ அடுக்கடுக்கான அதிசயங்களை இவர் நிகழ்த்தியதாக நூலாசிரியர் பரவசப்பட்டிருக்கிறார்; சீரடியாரின் புகழ்பாடி மகிழ்ந்திருக்கிறார்.

ஆக,

ஃபக்கீர் என்னும் சாதாரண மனிதரை, மகான் ஆக்கியவை பொய்யும் புனைந்துரையும் விரவிய இம்மாதிரி நூல்களும் இவை போன்ற ஊடகங்களும்தான்.

பிறருக்கு உரியவற்றை அபகரிப்பதும் விபச்சாரம் செய்வதும் போதைப் பொருள்களை விற்பதும் குற்றங்கள் என்று கருதும் அரசு, ஆன்மிகத்தின் பெயரால் அவதாரங்களையும் மகான்களையும் இட்டுக்கட்டுதல் மூலம் உருவாக்கி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கும்  செயலைக் குற்றமாகக் கருதுவதில்லை. இம்மாதிரிக் குற்றங்கள் புரிவோரைத் தண்டிப்பதும் இல்லை.

இந்த அவல நிலை மாறுவது எப்போது?