ஞாயிறு, 4 மார்ச், 2018

'அது'க்கு 'இது' தேவலாம்!!!

அண்மையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த 'ஆவத்துவாடி' கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இது, இன்றைய[04.03.2018] நாளிதழ்ச் செய்தி.
ஆண்டுதோறும், இவ்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் இந்த ஊர் மக்களிடம் ஒரு விசித்திரப் பழக்கமும் உண்டு. 

அலங்கரிக்கப்பட்ட கரகத்தைப் பூசாரி ஊர்வலமாக எடுத்துவரும்போது,  பூசாரியின் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி, குங்குமமும் பூவும் வைத்துப் பெண்கள் வணங்குவார்கள். பின்னர், கோயிலின் முன்பு, பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்[ஆண்களும் பெண்களும்] நீண்ட வரிசையில் படுத்துக்கொள்வார்கள்.

கரகம் ஏந்திய பூசாரி அவர்களின் மீது நடந்து செல்வார். இது அக்கோயிலில் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

''திருவிழாவில், பக்தர்கள்மீது கரகம் சுமந்துவரும் பூசாரி நடந்தால் திருமணம் கைகூடிவரும்; குழந்தைப்பேறு வாய்க்கும். இது ஐதீகம்'' என்கிறார்களாம் ஆவத்துவாடி கிராம மக்கள்.

''பூசாரியின் கால்களில் மிதிபடுவதால், மிதிபடும் அத்தனை பேரின் குறைகளும் நிவர்த்தி ஆகிறதா? இல்லையெனில், எத்தனை சதவிகிதம் பேர் பயன் அடைகிறார்கள்? பயன் பெறுவோர் நீங்களாக ஏனையோரை மாரியம்மன் புறக்கணித்தது ஏன்?'' என்றிப்படியான கேள்விகளை மக்கள் கேட்க மாட்டார்கள். கேட்கவும் கூடாது என்று நினைப்பவர்கள் இவர்கள்.

இவர்கள் திருந்துவது எப்போது?

எப்போது என்பது  எவருக்கும் தெரியாது. ஆயினும்.....

சபல புத்தியுள்ள போலிச் சாமியார்களைச் சரணடைந்து ஏமாறுவதை நோக்க, கோயில் திருவிழாவில், திரளான மக்களின் முன்னிலையில்,  ஒரு நாள் மட்டும், உள்நோக்கம் ஏதுமற்ற ஒரு கிராமத்துப் பூசாரியின் கால்களில் மிதிபடுவதை இவர்கள் திருந்துவதற்கான காலம் கனியும்வரை பொறுத்துக்கொள்ளலாம்.

வெள்ளி, 2 மார்ச், 2018

'சொர்க்கம் இங்கே!'...சிலிர்ப்பூட்டும் முதலிரவுக் கதை!![பழசு]

அவர்களுக்கு அது முதலிரவு.

அறைக் கதவு தாளிடப்பட்டு அரை மணி நேரம் ஆகியும் அவனும் அவளும் தொட்டுக்கொள்ளக்கூட இல்லை!

அவன் கத்தியால் ஆப்பிளைக் கீறிக்கொண்டிருந்தான். அவள் ஜடைப்பின்னலால் உள்ளங்கையில் கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.

நன்றி: 'ராணி' வார இதழ்
“ஏன் இந்தத் திரை? ஏதாவது சொல்லு” என்றான் அவன்.

“நீங்க சொல்லுங்க” என்றாள் அவள்.

“அதான், சொல்லுன்னு சொல்லிட்டேனே” -கண் சிமிட்டிச் சிரித்தான் அவன்.

அவள் சொன்னாள்: “இன்னிக்கி அது வேண்டாங்க.”

“பயமா இருக்கா?”

“ம்ம்ம்...ஊகூம்.”

“மூடு இல்லையா?”

“அப்படியெல்லாம் இல்ல.”

“பின்னே...?”

“அது வந்து...வந்து...” -ஏதோ ஒருவிதத் தயக்கம் தொண்டைக்குழி வாசலில் வார்த்தைகளை வழி மறித்தது.

“சும்மா சொல்லு.” -தைரியம் சொல்லி, அவளின் கன்னக் கதுப்பில் ஓர் ஆப்பிளை உருட்டி அழகு பார்த்தான் அவன்.

அரை நிமிட யோசனைக்குப் பின்னர் அவள் சொன்னாள்: “என் ஜாதகத்தில் தோஷம் இருக்கு. வரன் அமையவே இல்ல. பொய் ஜாதகம் தயார்ப் பண்ணி என் அப்பா உங்களை ஏமாத்திட்டார். என்னால தடுக்க முடியல.”

அவன் ஒரு 'குபீர்'ச் சிரிப்பைப் பிரசவித்தான். ஆப்பிளை அவளின் மார்பகப் பிளவில் உரசுவதுபோல் போக்குக் காட்டிவிட்டுச் சிரித்தான்;

“ஏன் சிரிக்கிறீங்க?”

“என் ஜாதகமும் போலிதான்.”

“உங்க ஜாதகத்திலும் தோஷமா?”

“எனக்கு ஜாதகமே இல்ல. பெத்தவங்க எழுதி வைக்கல. ஜாதகம் இல்லேன்னா, எனக்குப் பெருசா ஏதோ குறை இருக்குன்னு பெண் வீட்டார் சந்தேகப்படுவாங்களே. அதனாலதான் இந்தப் பித்தலாட்டம். இதைச் சொல்லத்தான் நானும் தயங்கிட்டிருந்தேன். நீ துணிஞ்சி சொல்லிட்டே. அது சரி, இதுக்கும், அது இப்போ வேண்டாம்னு சொன்னியே, அதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்குங்க. என் மெய்யான ஜாதகத்தில் தோஷம் இருக்கில்லியா? அது உங்களுக்குக் கெடுதல் பண்ணும். அதனால, ஒரு ஜோதிடர் மூலமா பரிகாரம் பண்ணனும். அதுக்கப்புறம்தான் அது.”

“பரிகாரமே இல்லேன்னா?”

“நமக்குள்ள அது எப்பவும்  வேண்டாம். நீங்க இன்னொரு கல்யாணம் செய்துக்குங்க.”

அவன் சிலிர்த்தான். “உண்மையாத்தான் சொல்றியா?” என்றான்.

“சத்தியமாங்க.”

‘ஆகட்டும்’ என்பது போலத் தலையசைத்துவிட்டு, “என் தோஷத்துக்கும் பரிகாரம் பண்ணனும்” என்றான் அவன்.

“உங்களுக்குத்தான் ஜாதகமே இல்லையே?”

“ஜாதகம் எழுதாததால தோஷமே இல்லேன்னு ஆயிடாது. கெட்ட தோஷம் ஏதும் இருந்துட்டா அது உன்னைப் பாதிக்கும்தானே?”

“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. உங்களுக்கு ஒரு கெடுதலும் வராம இருந்தாப் போதும்.”

நெகிழ்ந்து இளகினான் அவன்; கண்கள் கலங்கச் சொன்னான்: “எத்தனை நல்ல மனசு உனக்கு. இந்த மனசு எவ்வளவு பெரிய தோஷத்தையும் அண்டவிடாம, கவசமா என்னைப் பாதுகாக்கும். பரிகாரம் எதுவும் தேவையில்ல.”

சொல்லிக்கொண்டே அவளின் தோளைத் தொட்டான்; கேசம் வருடி வாசம் நுகர்ந்தான்; கண்களா, இரு கன்னங்களா, தேனூறும் இதழ்களா...எங்கே முதல் முத்தம் பதிப்பது என்ற பரிதவிப்புடன் அவளை இறுகத் தழுவித் தன்னிலை இழந்துகொண்டிருந்தான் அவன்.