செவ்வாய், 6 மார்ச், 2018

நான் ஒரு 'ஞான சூன்யன்'!!!

எத்தனை சிந்தித்தாலும்.....

அண்டவெளியிலுள்ள கோள்களும் உயிர்களும் ஏன் தோன்றியன, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கு விடை தெரியவில்லை 

இவை அனைத்தும் எப்போது தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் கேள்விக்கும் பதில் அறிவது சாத்தியப்படவில்லை.

இவை எப்படித் தோன்றின, அல்லது தோற்றுவிக்கப்பட்டன என்னும் வினாவுக்கும் விடை காண இயலாமல் மூளை சோர்ந்துபோகிறது.

இடையிடையே, கோடானுகோடி கோடி கோடி உயிர்களுக்கிடையே 'நான்' ஒருவன் ஏன் பிறந்தேன் என்னும் கேள்வியும் என்னை மருட்டுகிறது.

ஞானிகள் மகான்கள் என்றெல்லாம் போற்றப்படுபவர்கள், கடவுள், பாவபுண்ணியம், மறுபிறப்பு, சொர்க்கம் நரகம் என்று எதையெதையோ சொல்லியிருக்கிறார்கள். இவற்றில் 'எது உண்மை? எது பொய்?' என்றெல்லாம் உள்மனதில் எழும் கேள்விகளுக்கு இந்நாள்வரை பதில் கிடைத்திடவில்லை.

'பிறவி' என்னும் நிகழ்வுடன் 'சாவும்' நேர்கிறதே, அது ஏன் என்னும் கேள்வி  அவ்வப்போது வாட்டி வதைக்கிறது.

'செத்த பின்னர் என்ன ஆகிறோம்?' என்னும் கேள்வி என்னுள் தீராத கவலையைப் பதிவு செய்கிறது.

இவற்றோடு, இவை போன்ற விடை அறிய இயலாத பல கேள்விகளுக்கு நான் விடை காண்பது சாத்தியமே இல்லை என்பது புரிந்ததால்.....

என் சுயசரிதையில்['என்னைத் தெரியுமா?'], 'அறிவுஜீவி' என்று  என்னைப் பற்றி நான் குறிப்பிட்டிருப்பதை நினைக்கும்போதெல்லாம் வாய்விட்டுச் சிரிக்கிறேன்; இப்போதுகூட, சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்!

திங்கள், 5 மார்ச், 2018

போர்...போர்...போர்...யுக யுக யுக யுக யுக யுகாந்தரப் போர்!!!

புதுமையானதும் புரட்சிகரமானதுமான பதிவு! படிக்கத் தவறாதீர்!! விரும்பினால், பிறருடன் பகிருங்கள்!!!

உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத் தேவை உணவு.

ஒவ்வோர் உயிரும் தனக்குரிய உணவை எவ்வாறு பெறுகிறது? இன்னோர் உயிரைத் தாக்கி அழித்துத்தானே?

ஓர் உயிர், தாக்கப்படும் போது அது அனுபவிக்கும் வேதனை அளவிடற்கரியது. 

தாக்கப்படும் உயிர் உறும் துன்பமும், தன்னைக் காத்துக் கொள்ள அது நிகழ்த்தும் போராட்டமும், காண்போர் நெஞ்சைக் கலங்க வைப்பவை அல்லவா? 

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து, தன்னை மறந்த சுகத்தில் லயித்துக் கிடக்கும் போது, அசுரப் பசி கொண்ட ஒரு வேங்கையோ அரிமாவோ அதன் மீது பாய்ந்து குரல் வளையைக் கவ்வி, குருதியை உறிஞ்சிக் குடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைக்கும்தானே?

இப்படிப் பதற வைக்கும்...நெஞ்சைப் புண்ணாக்கும் அவல நிகழ்ச்சிகள்தான் இவ்வுலகில் எத்தனை...எத்தனை!

நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்படியான இத்தகைய கொடூர நிகழ்வுகள் நொடிதோறும் நிகழக் காரணமானவர் யார்? 

கடவுள்தானே?

உயிர்கள் செய்யும் முதல் பாவத்திற்கும்[இந்த முதல் பாவமே பல பிறவிகளுக்கும் இன்பதுன்பங்களுக்கும் காரணமாகின்றன என்கிறார்கள்] அடுத்தடுத்த பிறவி[?]களில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கும் கடவுளே காரணமாகிறார்!

“உயிர்களைத் தீங்கு செய்யத் தூண்டுவது கடவுளல்ல; அதைச் செய்வது ஒரு தீய சக்தி[சாத்தான்]” என்று  சப்பைக்கட்டுக் கட்டுவது ஆன்மிகவாதிகளின் வழக்கம்.

தீய சக்தி ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதை யார் படைத்தது?
கடவுள்தானே?[படைத்தல் அவருக்கு மட்டுமே சாத்தியமானது]

அவ்வாறாயின்.............................................

தீய சக்தி கடவுளால் படைக்கப்பட்டு அவர்தம் ஆசியுடன் அட்டூழியம் புரிகிறதா?

அல்ல எனின்.......................................

தானாகத் தோன்றிய, அல்லது கடவுளுக்குப் போட்டியாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் கடவுள் ஈடுபட்டிருக்கிறாரா?

அவருக்கும் அந்தச் சக்திக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதா? 

அந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும்?

இருவரில் ஜெயிக்கப் போவது யார்?
***************************************************************************************************************