ஞாயிறு, 15 ஜூலை, 2018

அறுபதிலும் ஆசை வரும்.....கிழவிகளுக்கு!! [நகைச்சுவை 50% & புதிர் 50%]

எச்சரிக்கை!..... நீங்கள் எதிர்பார்ப்பது உள்ளே இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். ''தலைப்பை நம்பி மோசம் போனோமே'' என்று எவரும் என்னை ஏசாதீர்!

பயணிகளின் பயணச்சீட்டைச் சரிபார்த்து முடித்த நடத்துனர் நடராசன், ஓட்டுநர் பாட்சாவுக்குக் கேட்கும்படியாக, ''வாங்கின சீட்டுல ஒன்னு குறையுது. கேட்டைக் கடக்கிறவரைக்கும் மெதுவா உருட்டுங்க பாய்'' என்றான்.

''யார்கிட்டேயும் சொல்லிட்டுப் போனாங்களான்னு கேளுப்பா'' என்றார் பாட்சா.

ஒருமுறை முன்னிருந்து பின்னாகப் பார்வையை ஓடவிட்டான் நடராசன். கேட்கவும் செய்தான். எவரும் வாய் திறக்கவில்லை.

பின்னிருக்கை ஒன்றில் ஓரமாக அமர்ந்திருந்த அருக்காணிக் கிழவி மட்டும் ஏதோ சொல்ல மெல்ல வாய் திறந்து மூடினாள். அவளருகில் நடைபாதையை அடைத்துக்கொண்டிருந்த எவர்சில்வர் அண்டா அவளின் வாயை அடைத்தது.

'இந்த அண்டாவை வெச்சிட்டுப் போனவன் வராமலே இருந்துட்டா.....' நினைக்கவே இனித்தது கிழவிக்கு.

'அண்டா ஐநூறு அறுநூறு ரூபாய் தேறும். மேற்கொண்டு கொஞ்சம் பித்தளைப் பாத்திரம் வாங்கினா வர்ற மாசியிலேயே மகள் பங்குசத்துக்குத் தனிக் குடித்தனம் வெச்சிடலாம்' -கிழவியின் மனதில் இப்படியொரு தப்பான ஆசை முகிழ்த்து மறைந்தது.

பேருந்து வந்து நின்றவுடனே சீட்டு வாங்கிக்கொண்டு வண்டியில் அமர்ந்துவிட்டிருந்தாள் அருக்காணிக் கிழவி. கிழவிக்கு வயது அறுபது[இந்தக் கதை நிகழ்ந்தது இருபது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போதெல்லாம் அறுபது வயதுக்காரிகள் கிழவிகளாகத்தான் தெரிந்தார்கள். அறுபதைத் தாண்டிய இக்காலக் குமரிகள் கோபிக்கக்கூடாது].

தன்னந்தனியளாக அவள் மட்டுமே வண்டியில் இருந்த நிலையில், ஒரு கொடுவாள் மீசைக்காரன் வெகு சிரமப்பட்டுத் தூக்கிவந்த அந்த எவர்சில்வர் அண்டாவை அவளருகே வைத்துவிட்டு, ''ஆயா, இதைக் கொஞ்சநேரம் பார்த்துக்கோ. ஒரு சிங்கிள் டீ குடிச்சிட்டு வந்துடுறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனான்.

போனவன் போனவன்தான்.

பேருந்து, நிலையத்திலிருந்து வெளிப்பட்டு, எதிரும் புதிருமாய் வந்துபோகும் வாகனங்களை ஊடுருவி மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. பத்துப் பதினைந்து நிமிடம் போல அதன் இருபக்க வாசல்படிகளையே மாறி மாறி நோட்டமிட்டாள் கிழவி. அண்டாக்காரனின் கொடுவாள் மீசையோ காதுகளில் பளிச்சிட்ட சிவப்புக்கல் கடுக்கண்களோ தென்படவே இல்லை.

கிழவியின் வதனத்தில் வெகு சன்னமாய் மகிழ்ச்சி ரேகைகள் படர்ந்தன. கண் மூடி மானசீகமாய் அவளின் குலதெய்வமான கருப்பண்ணசாமியைக் கும்பிட்டாள்; பழனி முருகனுக்குத் தலைமுடி காணிக்கை செலுத்துவதாகவும் நேர்ந்துகொண்டாள்.

கருப்பண்ணசாமியும் கந்தவேளும் அவளின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்திருக்க வேண்டும். அடுத்த சில நிறுத்தங்களில் வண்டி நின்றபோதுகூட மீசைக்காரன் அதில் ஏறவேயில்லை.

நீண்டதொரு நிம்மதிப் பெருமூச்சு கிழவியிடமிருந்து வெளிப்பட்டது. அருகிலிருந்தவர்களை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு, அண்டாவை இழுத்துத் தனக்கும் அதற்குமான இடவெளியைக் குறைத்தாள்.

''ஆயா, அண்டா உன்னோடதுதானா?'' -சற்றும் எதிர்பாராத நிலையில் ஓங்கி ஒலித்த நடத்துநரின் கேள்வி கிழவியைச் சற்றே நிலைதடுமாற வைத்தது.

'இவனுக்கு உண்மை தெரிஞ்சிருக்குமோ?' என்று சந்தேகப்பட்டாள். ஆனாலும் அண்டாவை விட்டுக்கொடுக்க மனமில்லை. ''என்ன இப்படிக் கேட்டுட்டே? அண்டா என்னோடது இல்லேங்கிறியா?'' என்று எதிர்க்கேள்வி தொடுத்தாள்.

''சும்மா கேட்டேன். கோவிச்சுக்காதே. ஆமா, அண்டாவுக்குள்ள என்ன இருக்கு?'' எனறான் நடராசன்.

அண்டாவின் மேல் பகுதி தடித்த துணியால் சுற்றப்பட்டிருப்பதை அப்போதுதான் கவனித்தாள் கிழவி; சமாளிப்பது என்று முடிவெடுத்தாள். ''என்னவோ இருக்கு. தெரிஞ்சி என்ன பண்ணப்போறே?'' என்றாள்.

''பத்து ரூபா லக்கேஜ் சார்ஜ் குடு'' என்ற நடராசு, அவளுக்கான பயணச் சீட்டுடன் லக்கேஜுக்கான சீட்டையும் தந்தான். 

வேறொரு சமயமாக இருந்திருந்தால் அவனுடன் ஒரு பட்டிமன்றமே நடத்தியிருப்பாள் அருக்காணிக் கிழவி. பல நூறு ரூபா மதிப்புள்ள அண்டாவை வெறும் பத்து ரூபா தனக்குச் சொந்தம் ஆக்குவதால், மறு பேச்சுப் பேசாமல் பணத்தை நீட்டினாள்.

எதிர்பாராத வகையில், வழியில் காவல் துறையினரால் பேருந்து நிறுத்தப்பட்டது.

காவலர்கள் சிலர் பயணிகளிடமிருந்த பெட்டிகள், கைப்பைகள் போன்றவற்றைச் சோதித்துக்கொண்டிருக்க, கிழவியின் அருகிலிருந்த எவர்சில்வர் அண்டாவைத் தன்னிடமிருந்த பிரம்பால் 'தட் தட்' என்று தட்டினார் ஆய்வாளர்.

''அண்டா யாருது?'' -கேட்டார்.

கிழவியின் மனதில் இப்போது திகில் பரவியது. 'மீசைக்காரன் கஞ்சா அபினின்னு கடத்தல் பண்டம் எதையும் வெச்சிருப்பானோ?' என்று சந்தேகித்தாள்.

''இது யாரோடது?'' ஆய்வாளரின் அதட்டல் அருக்காணியை வாய் திறக்க வைத்தது. ''என்னோடதுதாங்க'' என்றாள்.

''உள்ளே என்ன இருக்கு?'' என்று கேட்ட ஆய்வாளர் கிழவியின் பதிலை எதிர்பாராமல் அண்டாவைச் சுற்றியிருந்த துணியை அகற்றினார்.

அடுத்து, அழுத்தமாகத் திணிக்கப்பட்டிருந்த கம்பளிப் போர்வையையும் அப்புறப்படுத்தினார். சில உல்லன் சால்வைகள் மடித்து வைக்கப்பட்டிருந்தன.  உள்ளே என்ன இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் அவற்றையும் நீக்கியபோது, அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பயணிகள், ''ஐயோ... பொணம்...பொணம்..... துண்டு துண்டாப் பொம்மணாட்டி பொணம்...'' என்று வாய்விட்டு அலறினார்கள்.

அருக்காணிக் கிழவி? 

அவள் மயங்கிய நிலையில் இருக்கையில் சாய்ந்து கிடந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 13 ஜூலை, 2018

சிரிக்கச் சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!!!

'உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்' என்று மனம் கலங்கியிருக்கிறார் ஒரு தீட்சிதர். வயது முதிர்ந்த ஒரு மனிதருக்குள் இப்படியும் ஒரு குழந்தை மனமா? மாறாக, குழந்தை மனம் கொண்டவர் போல் நடிக்கிறாரா?

'திருப்பதி கோயில் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிக்கவில்லை. இதனால் மூலவருக்கு எந்தவித நைவேத்தியமும் படைக்கவில்லை. உலகிற்கே படியளக்கும் பெருமாளை 25 நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள்'['காமதேனு' வார இதழ், 08.07.2018] என்று, அந்தக் கோயிலில் 24 ஆண்டுகள் தலைமை அர்ச்சகர்களில் ஒருவராகப் பணியாற்றிப் பணீநீக்கம் செய்யப்பட்ட 'ரமண தீட்சிதர்' வருந்தியிருக்கிறார்.

ஆம். ஏழுமலையான் 'உலகத்துக்கே படியளப்பவர்'தான். 

உயிர்களைப் படைத்தவர் ஏழுமலையான்[கடவுள்]. அவை வாழ்ந்து முடிக்கும்வரை உணவூட்டுபவரும் அவரே..... சரி. 

இங்கே ஞானசூன்யனான நான் மட்டுமல்ல, ஆறறிவு படைத்த அனைவருமே எழுப்புகிற ஒரு கேள்வி..... அனைத்தையும் படைத்துக் காத்து வாழவைக்கிற அந்த ஏழுமலையான் கடவுளுக்கும்கூடப் பசி எடுக்குமா? 

பசிக்குமாயின் அவர் கடவுள் அல்ல. அல்லவே அல்ல. 

கடவுள் பட்டினி கிடந்தார்[25 நாட்கள்... கொலைப்பட்டினி!] என்று சொன்ன தீட்சிதரின் வருத்தவுரையும், இவரைக் கண்டிக்காமல் வாய்மூடி மவுனம் காப்போரின் கோழைத்தனமும் என்னுள் கோபத்தைக் கிளறின.  

என்னளவில் நான் கோபப்படலாம்; குமைந்து குமுறலாம். பிறர் அறியக் கடின வார்த்தைகளால் திட்டவும் செய்யலாம். ஆனால், திட்டுவது சாத்தியமா?

சாத்தியம்தான். ஆனால், அதை ஏழுமலையானின் பக்தர் கூட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்காது. அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வம்பிழுப்பார்கள்; வழக்குப் போடுவார்கள்[''அப்போ, மூடிகிட்டுச் சும்மா கிட'' என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!] ஆகையினால்.....

சீற்றத்தை வெளிப்படுத்தாமல், சிரித்துச் சிரித்துச் சிரித்து என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்வதென முடிவெடுத்தேன்; நேற்று ஒரு நாள் முழுக்கச் சிரித்தேன்; இப்போதும்கூடச் சிரித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

கோயிலின் அண்மைக்காலச் சர்ச்சைகள் குறித்து ஊடகங்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டுள்ளன. பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஒரு கட்டத்தில், ''திருப்பதி கோயிலில், கருவறை, மடப்பள்ளி போன்ற இடங்களில் மன்னர்கள் காலத்து நகைகள் பாதுகாப்பாகப் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. கருவறையிலிருந்து ரகசிய சுரங்கப் பாதையும் உள்ளது. இதற்கு, ஓலைச்சுவடி, கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. இதெல்லாம் தெரிந்துதான், மடப்பள்ளியை நவீனம் ஆக்குவதாகச் சொல்லி தோண்டினார்கள். நைவேத்தியம் தயாரிக்க இயலாமல் போனது. ஏழுமலையான் பட்டினி கிடக்க நேர்ந்தது'' என்று கோயில் நிர்வாகிகள் மீது குற்றம் சாட்டினார் ரமண தீட்சிதர்.

கோயில் நிர்வாகமும், 'பெங்களூர் சென்று தனியார் நிகழ்ச்சியில் பூஜை செய்தது; முகப்புக் கோபுர வாசல் வழியாகத் தன் குடும்பத்தினரைக் கோவிலுக்குள் அனுமதித்தது; கோயிலுக்குக் களங்கம் கற்பித்தது' என்று தீட்சிதர் மீது பல குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.

'கோயிலில், தீட்சிதர் சொல்வதுபோல் தவறு ஏதும் நடைபெறவில்லை. சுவாமியைப் பட்டினி போட்டதாக அவர் கூறியிருப்பது பொய். மராமத்துப் பணிகள் நடபெறுவதால், மாற்று இடத்தில் நைவேத்தியங்கள் தயாரிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படி சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கப்பட்டது. அவர் பட்டினி கிடக்கவில்லை'[நைவேத்தியம் படைக்காவிட்டால் சுவாமி பட்டினி கிடக்கும் என்று நம்புகிறார்களோ?] என்றும் அறிக்கை தந்திருக்கிறது நிர்வாகம்.

உண்டியல் காணிக்கையைத் தனியார் வங்கியில் சேமித்தது; வேற்று மதத்தவரைப் பணியாற்ற அனுமதித்தது. பிற மதத்தவரை அறங்காவலர் குழுவில் சேர்த்தது; வடகலை, தென்கலை குறித்த ஜீயர்களுக்கிடையிலான வாக்குவாதங்கள் என்றிப்படிப் பல சர்ச்சைகளுக்கும் இடமாகியிருக்கிறது திருப்பதி ஏழுமலையான் கோயில்.

இம்மண்ணில் வாழும் மனிதர்களில் கணிசமான தொகையினர் பட்டினியால் வாடுபவர்கள். இவர்களைப் புறக்கணித்து, ஏழுமலையானைப் பல நாட்கள் பட்டினி போட்டுவிட்டார்கள் என்று தலைமைத் தீட்சிதராய் இருந்த ஒருவர் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சாட்டுகிறார்.  கோயில் நிர்வாகத்தினர் அவரையே குற்றவாளியாக்கியதோடு, ஏழுமலையான் ஒருநாளும் பட்டினி கிடந்ததில்லை என்று சொல்லிப் பதிலடி கொடுக்கிறார்கள்.

இவர் அவர்களுக்கு அடி கொடுக்கிறார். அவர்கள் இவருக்குப் பதிலடி கொடுக்கிறார்கள். இந்த இருதரப்பாரும் ஒருங்கிணைந்து பக்தகோடிகளுக்கு அடிமேல் அடி கொடுக்கிறார்கள்; மூளையை மழுங்கடிக்கிறார்கள். 

இந்த இவர்களின் திருவிளையாடலை..... இல்லையில்லை, ஏழுமலையானின் இந்தத் திருவிளையாடலை நினைந்துதான் நாளெல்லாம் சிரித்தேன்... இப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்!