வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஒரு 'சொதப்பல்' சொல் ஆராய்ச்சி!

கடவுளின் ‘இருப்பு’ குறித்து நான் எழுதியதொரு பதிவைப் படித்த என் உள்ளூர் நண்பர், “என்ன சொல்ல வர்றீங்க, கடவுள் இல்லேன்னுதானே?” என்று கேட்டார்.

“சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லல. கடவுள் உண்டு என்பதற்குத் தரப்பட்ட ஆதாரங்களை நான் மறுத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

“ஆதாரங்களை மறுக்கிறதுன்னா என்ன அர்த்தம்? இல்லேன்னு சொல்றது தானே?” - மடக்கினார்.

“ஆதாரங்களை மறுக்கிறது வேற; கடவுளே இல்லேன்னு சொல்றது வேற.”

“சரியான ஆதாரங்கள் தந்தா நம்புவீங்கதானே?”

“தாராளமா”.

“கடவுள் இருக்கிறார்னு அவரை நம்புறவங்க சொல்றாங்க. நம்பாதவங்க இல்லேன்னுசொல்றாங்க. ரெண்டு பேருமே கடவுளை முன்நிறுத்தித்தான் விவாதிக்கிறாங்க. இதிலிருந்தே கடவுள் இருக்கார்ங்கிறது உறுதியாகுது. இல்லையா?”

“இன்னும் விளக்கமா சொல்லுங்க”.

“நாம் பயன்படுத்துற ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்குது. நிலம்கிற சொல் இருக்கு. ‘நிலம்’ கிற பொருளும் இருக்கு. கடவுள்ங்கிற சொல் இருக்கு; கடவுளும் இருக்கார். இப்படி எல்லாமே. இல்லாத எந்தப் பொருளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாது. கடவுள்ங்கிற சொல் இருப்பதால் கடவுளும் இருக்கார்னு நம்பணும்”.

சிறிது மவுனத்திற்குப் பிறகு நான் கேட்டேன்: “ஆகாயத் தாமரைன்னு தமிழ் இலக்கணக்காரங்க ஒரு எடுத்துக்காட்டுத் தருவாங்க. தாமரைன்னு ஒரு பொருள் தண்ணீரில்தான் இருக்க முடியும். ஆகாயத்தில் தாமரை ஏது? இங்கே, இல்லாத ஒரு பொருள்தான் நினைக்கப்படுது. இன்னும், ஆகாயத்தில், ஆயிரம் தலைகளோட அறுபதாயிரம் கால்களால ஒரு யானை நடந்து போச்சுங்கிற மாதிரி நிறையச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அது உண்மை ஆயிடாது. கடவுளும் அப்படித் தான்”

நண்பர் லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னார்: “இங்கே ஒரு தனிச் சொல்லைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளணும். ஆகாயத் தாமரையில் ரெண்டு சொற்கள் இருக்கு. ஆகாயம் ஒரு சொல். அது குறிக்கிற பொருள் ‘வெளி’. வெளின்னு ஒன்னு இருக்கு [இல்லையென்று சொல்கிற மதம் ஒன்று உண்டு]. தாமரை ஒரு சொல். அது குறிக்கிற தாமரைங்கிற பொருளும் இருக்கு. நீங்க ரெண்டு சொற்களை இணைச்சி இல்லாத ஒரு பொருளைக் [ஆகாயத் தாமரை] கற்பனை பண்ணியிருக்கீங்க. இது உண்மை அல்ல. இது மாதிரிதான் யானை உதாரணமும். இம்மாதிரி உதாரணமெல்லாம் இங்கே பொருந்தி வராது.” என்றார் நண்பர்.

நான் கேட்டேன்: “எல்லாத் தனிச் சொல்லுமே ‘நிஜமான’ பொருளை உணர்த்துதா?”

“பொருளை மட்டுமல்ல, உணர்ச்சியைக் குறிக்கலாம்; ஒரு பண்பைக் குறிக்கலாம். ‘வெறுமை’ ‘பொய்’ போல நம்மால் உணரத்தக்க ஒன்றைக் குறிக்கலாம். இன்னும் சொல்ல நிறைய இருக்கு.”- இது நண்பர்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, தனிச் சொற்கள் தரும் பொருள்கள்தான் உண்மை. ரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் தர்ற பொருள் எல்லாம் உண்மை இல்லைன்னு ஆகுதே?”- நான்.

“ஆகாயத்தாமரை மாதிரி, திட்டமிட்டுத் தொகுத்த சொற்களும் தொடர்களும்
தான் அப்படி.” - அவர்.

“கடவுளும் அப்படித்தான்னு நான் சொல்றேன். இதுவும் திட்டமிட்டுத் தொகுத்த சொல்தான். அதைப் பிரிச்சா, கட+உள். ‘கட’ன்னா கடத்தல். ‘உள்’னா உள்ளே. இந்த ரெண்டு சொற்களும் இணைந்து கடவுள்ங்கிற பொருளைத் தந்துவிடா. உள்ளே கடப்பதுன்னா எதனுள்ளே? கடப்பது எது? அது கடவுளானது எப்படி? இப்படி எழும் கேள்விகளுக்கு இந்தச் சொற்கள் மட்டும் விளக்கம் தந்துவிடா. நீண்ட விவாதம் தேவைப்படும். அதிருக்கட்டும், தனிச் சொல்லானது கடவுள்ங்கிற பொருள் தரும்னு சொன்னீங்களே, உதாரணத்துக்கு ஒரு சொல் சொல்லுங்களேன்.”

“இறை.”

“பொருள்?”

“தங்கியிருப்பது. அதாவது கடவுள்.”

“இந்தத் தனிச்சொல்லும் நேரடியா கடவுளைக் குறிக்கல. ஒவ்வொரு பொருளிலும், அல்லது அணுவிலும்[?] தங்கியிருக்கிற ஒன்னு, அதாவது கடவுள்னு [ஆகுபெயராக] பிற சொற்களையும் சேர்த்து விளக்கம் தரணும். அது எளிதல்ல. கடவுள்ங்கிற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது. கடவுள் உண்டுன்னோ இல்லைன்னோ ஆதரிப்பவர், மறுப்பவர் என இரு தரப்பாரும் அதைச் சொல்றதால கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஏற்க முடியாது.

அவ்வாறு ஏற்றால், சாத்தான், ஆவி, பூதம், காத்து, கருப்பு, பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் என்று அத்தனை கற்பனைகளையும் ‘உண்மை’ என ஏற்றாக வேண்டும்” என்றேன் நான்.

“இலக்கணம், சொல்லாராய்ச்சின்னு இறங்கினா,  குழப்பம்தான் மிஞ்சும்.” - நண்பர் சலித்துக்கொண்டார்; விடை பெற்றார்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

'பத்தரை மாற்று'ப் பகுத்தறிவாளன்!!!

30.05.1778 அன்று இரவு 11 மணி.

200 ஆண்டுகளுக்கு முன்னரே, மக்களைப் பிணித்திருந்த மூடநம்பிக்கைத் தளைகளை அறுத்தெறிவதற்காக ஓய்வறியாது உழைத்த ஓர் இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர்.....

''அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்களின் உபதேசங்கள் அறிவுக்குப் பொருத்தமானவையா என்று எண்ணிப்பார். பொருத்தம் என்றால் ஏற்றுக்கொள். இல்லையேல், தயவுதாட்சண்யமின்றி அவற்றை ஒதுக்கித் தள்ளு'' என்று எவருக்கும் அஞ்சாமல் முழக்கமிட்ட பிரெஞ்சு நாட்டு அறிஞன் 'வால்ட்டேர்'[Voltaire] ஆவார்.

வால்ட்டேர், மரணத்தைத் தழுவுவதற்குச் சற்று முன்னர் மதகுருமார்கள்  இருவர் அவரை நெருங்கினார்கள். ஒருவரின் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதில்.....

'எல்லாம் வல்ல ஆண்டவனே, நான் அறியாமை காரணமாக மதங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறேன். மதகுருமார்களின் செயல்பாடுகளையும் கண்டித்திருக்கிறேன். என் அறியாமை காரணமாகக் கடவுள் தத்துவங்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னுடைய அடாத இச்செயல்களுக்காக இப்போது வருந்துகிறேன். இறைவனே, நான் மரணத்தைத் தழுவ இருக்கின்ற இந்தத் தருணத்தில் நீர் என்னை மன்னிப்பீராக!' என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பத்திரத்தில் வால்ட்டேர் கையொப்பம் இடுவாரேயானால், 'நம் மதத்தை எதிர்ப்பவர் எவராயினும் என்றேனும் ஒரு நாள் இப்படிச் சரணடைந்தே தீரவேண்டும்' என்று மக்களிடையே பரப்புரை செய்வது மதகுருமார்களின் நோக்கமாக இருந்தது. சாவைத் தழுவவிருந்த வால்டேரைப் பத்திரமும் கையுமாக அவர்கள் சந்தித்ததன் நோக்கமும் அதுவே.

பத்திரம் வைத்திருந்த மதகுரு, ''வால்ட்டேர் அவர்களே, உங்களுடைய வாழ்க்கை முடியப்போகிறது. இந்தத் தருணத்திலாவது, நீங்கள் ஏசுநாதர் கடவுளின் அவதாரம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிட்டும்'' என்றார்.

வால்ட்டேர் அதற்கு உடன்பட்டாரா? ஊஹூம்!

மதகுருவின் நடவடிக்கையால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார் பகுத்தறிவுச் சிந்தனையாளர் வால்ட்டேர்; ஒரு கையால் அந்த மதகுருவை ஒதுக்கித் தள்ளினார்; சொன்னார்:

''என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள்.''

வால்ட்டேர் இறந்த பின்னரும், குருமார்களின் பழிவாங்கும் போக்கு நீடித்தது. அவரைப் புதைப்பதற்கு எந்தவொரு கல்லறையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அவரின் கல்லறைப் பெட்டி 100 கல் தொலைவிலிருந்த திருச்சபையின் மண்ணில் புதைக்கப்பட்டது.

வால்ட்டேர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. ஆட்சிக்கட்டிலில் வீற்றிருந்த பதினாறாம் லூயியின் தலை துண்டிக்கப்பட்டது. பிரபுக்களின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவை அனைத்தையும்விட மகத்தானதொரு சம்பவமும் இடம்பெற்றது பிரெஞ்சு மண்ணில்! அது.....

வால்ட்டேரின் கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து, மாபெரும் ஊர்வலம் நடத்தி, பாரீஸ் நகரத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் புதைத்து வால்ட்டேருக்குச் சிறப்புச் செய்தார்கள் பிரெஞ்சு மக்கள்!
========================================================================
ஆதார நூல்: 'வால்ட்டேர்', வ.உ.சி.நூலகம்; ராயப்பேட்டை, சென்னை. முதல் பதிப்பு: 2003.