ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

300 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வழக்கின் மறுவிசாரணை!!!

நாம் வாசித்தறிந்த, அல்லது கேள்விப்பட்ட சில அதிசய நிகழ்வுகள், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நம் நினைவகத்தில் நிரந்தர இடம்பிடித்துவிடுவது உண்டு.

அவ்வாறான நிகழ்வுகளில் கீழ்க்காண்பதும் ஒன்று.

#சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று கிறித்துவ மதவாதிகள் நம்பினார்கள். இது தவறான நம்பிக்கை. உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று நிகோலஸ் கோபர்னிகஸ்[15-16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த போலந்து நாட்டவர்] சொன்னார்.

கோபர்னிகஸ் சொல்வதே சரி என்று வாதிட்டார் வானிலை ஆய்வறிஞர் கலீலியோ[16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டவர்]. மதத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்னமைக்காக, கிறித்தவத் தலைமையகம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அவரின் வயதைக் கருத்தில் கொண்டு அதை வீட்டுச் சிறையாக மாற்றியது.

வாழ்நாளின் இறுதி ஏழு ஆண்டுகளைத் தனிமையில் கழித்தார் கலீலியோ. கண் பார்வை பறிபோனது.

அவர் இறந்தபோது, முறைப்படி அடக்கம் செய்வதற்கு மதக் குருமார்கள் அனுமதிக்கவில்லை.

என்றிவை போன்ற செய்திகள் பள்ளிப் பருவத்தில் வரலாற்றுப் பாடம் கற்றவர்கள் அனைவரும் அறிந்தவையே. கீழ்வருவது பலரும் அறியாத ஒன்றாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை.

கலீலியோ இறந்து 300 ஆண்டுகள் கழித்து, மதவாதிகள் நீதிமன்றம் அவர் வழக்கை மீண்டும் விசாரணக்கு ஏற்றுக்கொண்டு, கலீலியோ குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தது!#
=============================================================
தகவல்கள், கூகுள் தேடல் மூலம் சரிபார்க்கப்பட்டன. பிழை காணின் மன்னித்திடுக

சனி, 11 ஏப்ரல், 2020

உலகம் அழிந்துகொண்டிருக்கிறதா?!

இங்கே ‘உலகம்’ என்பது இந்தப் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கும் உயிரினங்களைக் குறிக்கிறது.

இந்தப் பூமி, இதுவரை ஐந்து உயிரினப் பேரழிவுகளைச் சந்தித்திருப்பதாகச் சொல்கிறது அறிவியல்.

சிறு சிறு அழிவுகள் எப்போதும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பேரழிவுகளைத்தான் அறிவியல் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
பேரழிவு என்றவுடன், திடீரென்று ‘படீர்’ வெடிச் சத்தத்துடன் பூமி உருண்டையானது வெடித்துச் சிதறுவதாக எண்ண வேண்டாம். அப்படியொரு அழிவு இந்தப் பூமிக்கு இதுவரை நிகழ்ந்ததில்லை. உயிரினப் பேரழிவுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதுவும்கூட பெருமளவிலான உயிர்களின் அழிவைத்தான் குறிக்கிறது.

இதுவரையிலான ஐந்து பேரழிவுகளில், முதலாவது பேரழிவு சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இந்தப் பூமியின் தென்பகுதி நிலப் பிண்டமாகவும், வடபகுதி தண்ணீர் மயமாகவும்[கடல்] இருந்தது. கடலுக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சம் உயினினங்கள்தான் இருந்தன. 

காலம் செல்லச் செல்ல, கடல் நீரை உறை பனி மூடிக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் கடலின் பெரும் பகுதி மூடப்பட்டபோது, உயிரினங்களில் 85 விழுக்காடு[சதவீதம்] அழிந்துபோயின. கவனியுங்கள், முழுதும் அழிந்துவிடவில்லை[15 சதவீத உயிர்களை அழிக்காமல் விட்டுவிட உத்தரவிட்டது கடவுளோ?!].

இரண்டாவது பேரழிவு, சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கிறது. ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா எல்லாம் ஒரே நிலப்பரப்பில் இருந்தன.

அப்போது பூமியில், பூச்சிகளும் செடிகொடிகளும் காணப்பட்டன. அஸ்டிராய்டு எனப்படும் ‘சிறு கோள்’ நிலப்பரப்பைத் தாக்கியதாலும், கடல் மட்டம் கிடுகிடுவென்று சரிந்ததாலும். கடலிலும் நிலத்திலும் வாழ்ந்துகொண்டிருந்த பெரும்பாலான உயிரினங்கள் அழிந்தன.

மூன்றாவது பேரழிவு நிகழ்ந்தது 29 கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்கிறார்கள். இதற்கு, அதீத சக்தி வாய்ந்த சிறுகோள் தாக்குதலும், பருவநிலை மாற்றங்களும் காரணமாக இருக்கக்கூடுமாம். கடலில் வாழ்ந்த உயிரினங்களில் 96 சதவீதமும், நிலப்பரப்பில் வாழ்ந்தவற்றுள் 70 சதவீதமும் அழிந்தன.

நான்காவது பேரழிவு, 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதற்குக் கண்டங்கள் தனித்தனியே பிரிந்தது காரணம் என்கிறார்கள். உயிரினங்களில் பாதி அழிந்துவிட்ட நிலையில் ‘டைனோசர்கள்’ தோன்றின.

ஐந்தாவது பேரழிவு சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதி பிரமாண்டமான ராட்சத விண்கல் அதி வேகத்தில் வந்து பூமியின் மீது மோதியது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்த நிகழ்வில் டைனோசர்கள் முற்றிலுமாய் அழிந்துபோயிருக்கலாமாம்.

மேற்கண்ட தகவல்களின் மூலம், கோடிக்கணக்கிலான ஆண்டு இடைவெளியில் பேரழிவுகள் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. ஐந்தாவது பேரழிவு நிகழ்ந்து ஆறரைக் கோடி ஆண்டுகள் முடிந்திருக்கின்றன. இனி எப்போது வேண்டுமானாலும் ஆறாவது பேரழிவு நிகழக்கூடும் என்று அனுமானிக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். 

தன்னுடைய வாழ்வாதாரங்களுக்காக, பிற உயிரினங்களை மனிதன் அழித்துக்கொண்டிருப்பதைக் காணும்போது, கொஞ்சம் கொஞ்சமாக ஆறாவது உயிரினப் பேரழிவு நிகழ்ந்துகொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்களாம். ஆக, ஆறாவது பேரழிவு என்பது மனிதனால் நிகழ்த்தப்படுவதாகும்.

இவன் செய்யும் அடாவடித்தனங்களையும், அட்டூழியங்களையும் நாளும் கண்டு கண்டு மனம் வெந்து புழுங்கியிருக்கும் கடவுள், வெகு விரைவில்  ஆறாவது பேரழிவை நிகழ்த்தப்போகிறார் என்கிறார்கள் ஆன்மிகப் பிதாமகன்கள்.

நல்லதே நடக்கட்டும்!
=======================================================================
ஆதார நூல்: அறிஞர் என்.ராமதுரையின் ‘எங்கே இன்னொரு பூமி?’