சனி, 18 ஜூலை, 2020

பிராமணனா, ப்ராஹ்மணனா?!

'ப்ராஹ்மணத்துவேஷம், பெரியாரிய பெருச்சாளிகள்: கறுப்பர் கூட்டத்தை விளாசிய கஸ்தூரி'

இப்படியொரு தலைப்பின் கீழ், ‘கறுப்பர் கூட்டம்’ தொடர்பாகச் செய்தி வெளியிட்டுள்ளது ‘சமயம் தமிழ்[’Shameena Parveen | Samayam Tamil Updated: 15 Jul 2020, 12:16:00 PM] செய்தி நிறுவனம்.

வலைத்தள வாசிப்பாளர் ஒருவர், கஸ்தூரியின் விளாசலுக்கு எதிராக விளாசுகிறார். சமயம் தமிழில் இடம்பெற்றுள்ள இந்த இருவரின் கருத்துப் பகிர்வைப் பதிவின் கீழ்ப்பகுதியில் தந்திருக்கிறேன்.

வடமொழிச் சொல்லான ‘ப்ராஹ்மணன்’ஐத் தமிழில் பிராமணன் ஆக்கி நீண்டகாலம் ஆகிவிட்டது. தமிழின் மீது பற்றுக்கொண்ட பிராமணர்கள், ப்ராஹ்மணன் என்று எழுதுவதைத் தவிர்த்துவிட்ட நிலையில்,  ‘விளாசல்’கஸ்தூரி இதற்கு விதிவிலக்காக இருக்கிறார்.

இவர் மட்டுமல்ல, இவரைப் போன்ற ப்ராஹ்மணர்கள், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழை ஏதேனும் ஒரு வகையில் இழிவுபடுத்துவதில் ஆத்ம திருப்தி காண்பவர்கள்.

கஸ்தூரி அம்மையார் அவர்களுக்கு அடியேனின் விண்ணப்பம்.....

ப்ராஹ்மணனைப் பிராமணன் என்று எழுதினால் உங்கள் ப்ராஹ்மணன் ஜாதி தனக்குரிய பாரம்பரியப் பெருமையை இழந்துவிடும் என்று அஞ்சுகிறீர்களா?

“ஆம்” என்றால், இனி, உங்களின் தாய்மொழியும் தேவ பாஷையுமான சமஸ்கிருதத்திலேயே எழுதுங்கள்; உரையாடுங்கள்; நீச பாஷையான தமிழை மறந்தும் பயன்படுத்தாதீர்கள்.

சமஸ்கிருதத்தைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாட மொழி ஆக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அதைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக ஆக்கும் கனவும் உங்களுக்கும் உங்களைப் போன்ற ப்ராஹ்மணர்களுக்கு உண்டு. மாநிலத்திலும் மத்தியிலும் உங்களுக்கு ஆதரவானவர்கள் ஆண்டுகொண்டிருப்பினும் கனவு நனவாவதில் தாமதம் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டுமாயின்.....

‘ப்ராஹ்மணன்’ என்னும் பெயரிலேயே ஒரு கட்சி தொடங்குங்கள். நீங்கள் ஒரு பிரபல நடிகை என்பதால், உங்கள் கட்சியும் மிக விரைவில் பிரபலமாகும். மிகக் குறுகிய கால அவகாசத்தில் மாநில ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம். பெரியாருக்கு முன்பிருந்த பிராமணர்களின் செல்வாக்கை மீட்டெடுக்கலாம்; பெரியாரியப் பெருச்சாளிகளைப் பூண்டோடு ஒழித்துவிடலாம்.

செய்வீர்கள்தானே? வாழ்த்துகள்!


# கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது[‘சமயம் தமிழ்’,  செய்தி],

கறுப்பர் கூட்டம் You tube Channel ஐ பார்த்தேன், ஜாதி சமூக நீதி எல்லாம் பேசும் சாக்கில் பிரிவினை , ப்ராஹ்மணத்துவேஷம், இந்துமத அவமதிப்பு, வன்மம் இதை மட்டுமே பேசும் காணொளிகள். பெரியாரிய பெருச்சாளிகள். இவர்களின் அண்டப்புளுகை நிஜமென்று நம்புவதற்கு பெயர் தான் பகுத்தறிவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர், கஸ்தூரி அவர்களே.. அவர்கள் ஆபாசமாக பேசினார்கள் என்று ஒப்புக்கொள்கிறேன் ஆனால் அவர்கள் பேசிய அனைத்தும் பார்ப்பனர்களால் எழுதப்பட்ட ஹிந்து மத புராணங்கள் தான் அதில் பொய் எதுவும் இல்லை.. பெரியாரிய பெருச்சாளிகள்?? அப்போ நீங்களெல்லாம் என்ன பார்ப்பன அயோக்கியர்களா? என்றார்.
அதற்கு கஸ்தூரி கூறியதாவது, எந்த புராணத்தை எந்த அந்தணர் இயற்றினார் என்று தரவு தரமுடியுமா? எதுவுமே தெரியாமல் எப்ப பாரத்தாலும் பிராமணரை மட்டும் தாக்குவோர் தான் அயோக்கியர்கள் என்றார்.

கஸ்தூரி கேட்ட கேள்வியை பார்த்த அந்த சமூக வலைதளவாசியோ, கறுப்பர் கூட்டம் அளித்த தகவல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதன் ஆதாரத்தை வெளியிட்டார். அதை பார்த்த கஸ்தூரி, நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லை. ஏனென்றால் உங்களிடம் பதிலோ ஆதாரமோ இந்து மத நூல்களை பற்றிய அறிவோ இல்லை. இருப்பது வெறும் பொய், அந்த பொய்யை கண்மூடித்தனமாக நம்பும் 'பகுத்தறிவு' என்ற பித்தலாட்டம் . உங்கள் 'வரலாறும்' மூடநம்பிக்கை தான்! என்றார்.

மூடநம்பிக்கை என்று கஸ்தூரி சொன்னதை பார்த்த அந்த நபர், உங்களுக்கு ஒரு இணைப்பையும் கொடுத்துள்ளேன் பதிலாக அதில் சனாதன வேதம் சொல்லும் பார்ப்பன உயர்வும், சூத்திர தர்மம் எனும் பெயரில் இருக்கும் ஆயோக்கியத்தனம் பற்றியும் தமிழில் தெளிவாக அந்த பாடல் எண்ணுடன் எழுதியுள்ளேன்.. படித்துவிட்டு வாருங்கள் பேசுவோம்.. அம்பேத்கரை படியுங்கள் கஸ்தூரி என்றார்.

கஸ்தூரியும் அத்துடன் நிற்பதாக இல்லை. அம்பேத்கரை படிக்கச் சொன்ன நபரிடம், புராணங்கள் அந்தணரால் எழுதப்பட்டவை என்ற உங்கள் கூற்றிற்கு சான்று எங்கே? சனாதனமும் இல்லாத வேதமும் இல்லாத "மனு தர்மம்" பற்றிய ஒப்பாரியை கையில் எடுத்ததிலேயே இளிக்கிறது உங்கள் வரலாற்றறிவு.


அம்பேத்கர் என்ற பெயரே ஒரு ப்ராஹ்மணரின் பெயர் என்பதை நீர் அறிவீரா? என்று கேட்டார்.

பதிலுக்கு அந்த நபரோ, மனு தர்மம் சனாதனம் இல்லையா?? வர்ணாசிரம தர்மம் எதன் அடிப்படையில்?? ராமாயணம் மஹாபாரதம் எதன் அடிப்படையில்??? பாவ யோனியில் பிறந்த சூத்திரனை கொலை செய்வது என்னுடைய கடமை என்று ராமன் சொல்லி சம்புகனை கொலை செய்தாரே அது மனு ஸ்மிருதி அடிப்படை இல்லையா?? என்று கேட்டார்.

கஸ்தூரியோ, சம்பூகனின் கதை, மனுஸ்ம்ரிதி, இது ரெண்டும் பெரியாரிஸ்டுக்கள் மட்டுமே சொல்லி கேட்டு உள்ளேன். எல்லாம் கறுப்பர் கூட்டம் மாடல் கற்பனை சேர்த்து பிசையப்பட்ட பொய் மொழிபெயர்ப்பு தான் என்றார்#

வெள்ளி, 17 ஜூலை, 2020

யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும்?

கடவுளின் ‘இருப்பு’ குறித்துக் கேள்விகள் கேட்பதோ, அவரைச் சாடுவதோ பாவம் என்றால் அந்தப் பாவத்தை நிறையச் சுமந்துகொண்டிருப்பவன் நான். 2011இல் நான் எழுதிய பதிவு இது. அதாவது, நான் செய்த முதல் பாவம்!           

     உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத் தேவை உணவு. ஒவ்வோர் உயிரும் தனக்குரிய உணவை எவ்வாறு பெறுகிறது? இன்னோர் உயிரைத் தாக்கி அழித்துத்தானே?!

ஓர் உயிர், தாக்கப்படும் போது அது அனுபவிக்கும் வேதனை அளவிடற்கரியது. 

தாக்கப்படும் உயிர் உறும் துன்பமும், தன்னைக் காத்துக் கொள்ள அது நிகழ்த்தும் போராட்டமும், காண்போர் நெஞ்சைக் கலங்க வைப்பவை அல்லவா? 

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து, தன்னை மறந்த சுகத்தில் லயித்துக் கிடக்கும் போது, அசுரப் பசி கொண்ட ஒரு வேங்கையோ அரிமாவோ அதன் மீது பாய்ந்து குரல் வளையைக் கவ்வி, குருதியை உறிஞ்சிக் குடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைக்கும்தானே? இப்படிப் பதற வைக்கும்...நெஞ்சைப் புண்ணாக்கும் அவல நிகழ்ச்சிகள்தான் இவ்வுலகில் எத்தனை...எத்தனை!

நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்படியான இத்தகைய கொடூர நிகழ்வுகள் நொடிதோறும் நிகழக் காரணமானவர் யார்? 

கடவுள்[எனப்படுபவர்]தானே?

உயிர்கள் செய்யும் முதல் பாவத்திற்கும்[இந்த முதல் பாவமே பல பிறவிகளுக்கும் இன்பதுன்பங்களுக்கும் காரணமாகின்றன என்கிறார்கள்] அடுத்தடுத்த பிறவி[?]களில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கும் கடவுளே காரணமாகிறார்!

“உயிர்களைத் தீங்கு செய்யத் தூண்டுவது கடவுளல்ல; அதைச் செய்வது ஒரு தீய சக்தி[சாத்தான்]” என்று  சப்பைக்கட்டுக் கட்டுவது ஆன்மிகவாதிகளின் வழக்கம்.

தீய சக்தி ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதை யார் படைத்தது?

கடவுள்தானே?[படைத்தல் அவருக்கு மட்டுமே சாத்தியமானது] அவ்வாறாயின்.....

தீய சக்தி கடவுளால் படைக்கப்பட்டு அவர்தம் ஆசியுடன் கடமை ஆற்றுகிறதா?

அல்ல எனின்.....

தானாகத் தோன்றிய, அல்லது கடவுளுக்குப் போட்டியாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் கடவுள் ஈடுபட்டிருக்கிறாரா?

அவருக்கும் அந்தச் சக்திக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதா? 

அந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும்?

இருவரில் ஜெயிக்கப் போவது யார்?

ஒருவேளை, வெற்றி தீய சக்தியின் பக்கம் என்றால், அப்புறம் அதுவேதான் கடவுளா?

அதைத்தான் உயிர்கள் வழிபட நேருமா?

அப்புறம் கடவுள்?!

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம்தான். யாரிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என்பதுதான் புரியவில்லை!
=====================================================================