வியாழன், 13 ஆகஸ்ட், 2020

‘கடவுளை நம்பாதே’! மதநூல்கள் மனிதர்களின் படைப்பு’!!

“கடவுள் உண்டா? விடையே காண முடியாத கேள்வி இது. இதற்கு விடை காண முயன்று உன் வாழ்க்கையை வீணடிக்காதே” என்பது கௌதம சித்தார்த்தன் என்னும் புத்தரின் மிக முக்கிய போதனை ஆகும்[புத்தரைப் பற்றிப் பல புனைந்துரைக் கதைகள் பின்னர் வெளியாயின; அவர் கடவுளாகவும் ஆக்கப்பட்டார்].


‘சர்வ சக்திகளும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்கும்போது, மனிதன் தனக்கென்று சுதந்திரம் இல்லாதவன் ஆகிறான். ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பதற்கேற்ப, இறைவன் ஆட்டுகிறான்; மனிதன் ஆடுகிறான் என்றாகிவிடுகிறது. மனித முயற்சிக்கு இடமே இல்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

“எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஏற்றுக்கொள்ளாதே” என்பதும் அவரின் போதனைதான்.

இந்து மதம்[?], ‘வேதங்கள் யாராலும் உருவாக்கப்பட்டவையல்ல; அவை கடவுளிடமிருந்து நேரடியாகக் காற்றில் கலந்து, மனிதக் காதுகளை வந்தடைந்தவை’ என்கிறது. அதன் காரணமாகவே, வேதங்களுக்குச் ‘சுருதி’ என்னும் பெயரை அது கொடுத்திருக்கிறது!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாயிலாக இறைவனாலேயே இறக்கி வைக்கப்பட்டதுதான் ‘குர் ஆன்’ என்று இஸ்லாம் நம்புகிறது. இதை நம்ப மறுப்பவனை மார்க்க விரோதியாகவே அது பாவிக்கிறது.

‘பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவால் உருவாக்கப்பட்டதுதான் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாகிய விவிலியம்’ என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அதில் வரும் சுவிசேஷங்கள் எல்லாம் மனிதர்களின் ஊடாகத் தேவன் அருளியது என்று அது நம்புகிறது.

இவ்வாறு, மதங்களெல்லாம் தத்தம் மத நூலை இறைவன்தான் அருளினான் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்ட, பௌத்தமோ அந்த நம்பிக்கையைச் சுக்கல் சுக்கலாகத் தகர்த்தெறிய முயல்கிறது. ‘எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஒப்புக் கொள்ளாதே’ என்று சம்மட்டித் தாக்குதல் நடத்துகிறது.

‘கடவுள் சொன்னார் என்பதை நீ ஒத்துக்கொண்டால், உன் அனுபவத்துக்கும் அதனால் நீ பெற்ற அறிவுக்கும் வேலையில்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

இந்த மூடநம்பிக்கையால் எத்தனையோ கொடூரச் சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்துவிட்டன.

பைபிளில், உலகம் தட்டையானது என்னும் செய்தி உள்ளது. உலகம் உருண்டை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற விஞ்ஞானி கலிலியோ, போப்பாண்டவர் போட்ட உத்தரவால் பொங்கும் நெருப்பில் உயிரோடு பொசுக்கப்பட்டார்!

பரிணாமக் கொள்கையை உருவாக்கிய டார்வின், தேவாலயத்தில் மதவாதிகளின் முன்பு மன்னிப்புக் கோரினார். அவர் கண்டறிந்த பரிணாமக் கொள்கை பொய்யானது என்று அறிவிக்கும்படி மதம் அவரை அச்சுறுத்த அதன்படியே அவர் செய்தார்! 

புத்தர் மகானோ ரிஷியோ அல்லர். இந்தத் தன்மையை அவர் எதிர்த்தார். ‘ரிஷி சொன்னார்; மகான் சொன்னார் என்று எதையும் நம்பாதே. யார் எதைச் சொன்னாலும், உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து ஏற்புடையதை எடுத்துக்கொள்’ என்றார்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் பௌத்தர்களையும் சமணர்களையும், ‘திருடர்கள்’, ‘கொலைகாரர்கள்’, ‘வேத வேள்வியை மறுப்பவர்கள்’ என்றெல்லாம் பழித்தார்கள்;  “பௌத்தர்களின் பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கின்ற சக்தியை எங்களுக்குக் கொடு” என்று கடவுளிடம் வேண்டினார்கள்! இது எத்தனை பெரிய அநியாயம்!

புத்தன் என்ற சொல் ஓர் ஆளைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.

புத்தியை, அதாவது அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய முயல்பவன் புத்தன். சித்தார்த்தன், தன் புத்தியைப் பயன்படுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்ததால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு பல புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

சித்தம் என்பதும் அது போன்றதே. சித்தத்தைக் கட்டுப்படுத்தி அதை நல்வழியில் செலுத்துபவன் சித்தன்.

என்சைக்ளோபீடியா, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்கள், புத்தன் என்பதற்கு, ‘எதையும் புத்தியின் மூலம் ஆராய்பவன்; குருட்டுத்தனமாக நம்பாதவன்’ என்று பொருள் தருகின்றன.

சைவ வைணவ மதத்தவரால் எண்ணற்ற புத்தமதத்தினரும் சமண மதத்தவரும் கழுவேற்றப்பட்டார்கள்; செக்கிலிட்டு அரைக்கப்பட்டார்கள்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி எறியப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த பல புத்தக் கோயில்கள் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டன. தங்கம், வைரம் இவற்றால் ஆன புத்த விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாறான பல தீச்செயல்களால், பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழும்படி வலியுறுத்திய சிறந்த ஒரு மதம் [புத்தம் மதமல்ல; ஓர் இயக்கம் என்பாரும் உளர்] அது உருவான மண்ணைவிட்டே விரட்டியடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம்!
*******************************************************************************************
கீழ்க்காணும் நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. நூலாசிரியர்களுக்கு நன்றி.

1. தமிழருவி மணியன் எழுதிய ‘ஞானபீடம்’, கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை. மறுபதிப்பு: அக். 2009.

2.ஞான.அலாய்சியசு எழுதிய ‘பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’, புதுமலர் பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு: டிசம்பர் 2005.

புதன், 12 ஆகஸ்ட், 2020

பக்தி சுடும்!!!

நடராஜருக்கு 6 முறை அபிஷேகம் || chidambaram ...கோவில்களில் உள்ள சிலைகளுக்கு ...
Best of TamilNadu - Medicines,Naturals,Knowledge ...அபிஷேகம் hashtag on Twitter

காசு பணம் கொடுத்து ஏழைகளின் துன்பம் போக்குதல்; உடல் உழைப்பை ஈந்து இயலாதவர்களுக்கு உதவுதல் என்றிப்படிப் பிறருக்கு உதவுவதன் மூலம் மனம் அமைதி பெறுவதற்கான வழிகள் எத்தனையோ இருக்கக் கடவுளை வழிபடுவதன் மூலமாகத்தான் அதை முழுமையாகப் பெற முடியும் என்று நம்புகிறவர்கள் நம்மில் மிகப் பலர்.

கடவுளை நம்பட்டும்; இது அவரவர் விருப்பம் சார்ந்தது.

பாலாபிஷேகம், நெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், பழரச அபிஷேகம், சந்தன அபிஷேகம், மஞ்சள் அபிஷேகம் என்றெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டு, அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உள்ள இப்பொருள்களைக் கணக்கு வழக்கில்லாமல் வீணடிப்பதுதான் நம்மை அதிர வைக்கிறது.

பிரபலமான நடிகர்களின்  திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம். ரசிகர்கள், அபிஷேகம் என்னும் பெயரில் அவர்களுடைய ‘கட் அவுட்’களுக்கு லட்சக்கணக்கான லிட்டர்  பாலைக் கொட்டி வீணடிக்கிறார்கள். மக்களின் நலம் நாடுவோர் பலரும் இதைக் கண்டிக்கிறார்கள். ஆனால்.....

கோடிக்கணக்கான லிட்டர் பாலும் பிற பொருள்களும், பக்தியின் பெயரால் சாமி சிலைகள் மீது கொட்டி வீணடிக்கப்படுவதை எவரும் கண்டிப்பதில்லை. நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.

நாட்டை ஆளுபவர்கள் நினைத்தால், ‘சிலைகளைச் சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்தால் போதும்; விலைமதிப்பற்ற பொருள்களை வீணடித்தல் கூடாது’ என்று ஆணை பிறப்பிக்கலாம். சட்டம் இயற்றலாம். ஆனால், இது பக்தி சம்பந்தப்பட்டது. தொட்டால் சுட்டுப் பொசுக்கிவிடும் என்றஞ்சிக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். 

இந்த வீணடித்தலுக்கு விடிவுகாலமே இல்லையா எனின், இல்லை என்றே சொல்லலாம்.

அயராமல் முயன்றால், மூடநம்பிக்கைகள் பலவற்றை ஒழித்துவிட முடியும்; பக்தியின் பெயரால் வழக்கப்படுத்திக்கொண்ட மூடநம்பிக்கைகளை ஒழிப்பது என்பது அத்தனை எளிதல்ல. 

அது, கடவுள் நம்பிக்கையை ஒழித்தால் மட்டுமே சாத்தியப்படும்!
=====================================================================