வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

வாரம்தோறும் ‘சதுர்த்தி’ விழா!!!

Arjun Sampath (@imkarjunsampath) | Twitter
Anmeega Thedal: பிள்ளையார் படங்கள் (Pillaiyar Images)
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிலைகளைப் பொது இடங்களில் வைத்து வழிபடுதல், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்தல்[விசர்ஜனம்!!!] போன்ற நிகழ்வுகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட வந்த இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத், தடையை நீக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்[தினத்தந்தி, 14.08.2020].

இந்தச் சிலைக் கரைத்தல் தொடர்பான புராணக் கதையொன்றைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்திருக்கிறேன். கதை மறந்துபோனதால் நேற்றுக் கூகுளில் நீண்ட நேரம் தேடியும் பலன் கிட்டவில்லை. ஆனாலும், இது தொடர்பான வேறொரு செய்தி என் மனதை ஈர்த்தது. 

‘ஆடிப்பெருக்கில் வெள்ளம் வரும்போது அது ஆற்றில் உள்ள மணல்களை கரைத்துக் கொண்டு போய்விடும். அதனால் வெள்ள நீா் அடிநிலத்தில் தங்காமல் வீணாகக் கடலில் கலக்கும். வெள்ளம் செல்லும் பாதையில் களிமண் படிந்திருந்தால், அது அந்த மண்ணால் தடுக்கப்பட்டு பூமியில் இறங்கும்’[தினமணி, தினமலர், தினகரன், தினத்தந்தி, tamil.oneindia, tamil.boldsky, என்று பல இணைய ஊடகங்கள் இக்கருத்தைப் பதிவு செய்துள்ளன. ‘விநாயகரை நீரில் கரைக்கும் போது உயிர்ப்பில் இருந்து விடுபடுகிறான். பஞ்சபூதமான நீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே மாறுகிறான். மாற்றம் இல்லாத மாற்றம். உறவைப் பேணத்தான் வேண்டும். ஆனால் அதுவே சாஸ்வதம் ஆகாது. அது மாயை’ என்பன போன்ற புரியாத தத்துவங்களும் இடம்பெற்றுள்ளன] என்பதே அது.

‘இந்த அறிவியல் அடிப்படையிலான அறிவு நம் முன்னோர்க்கு இருந்ததால்தான் விநாயகர் சதுார்த்தி அன்று சிலைகளைக் களிமண்ணால் செய்து ஆற்றில் கரைக்கச் செய்தார்கள். 

ஈரக்களிமண் சீக்கிரம் கரைந்து நீரின் வேகத்தோடு சென்றுவிடும். சற்றே காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்துவிடும். எனவே, சிலைகளைச் சில நாட்கள் காய வைத்த பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறுகளில் கரைத்தார்கள்’ என்பன போன்ற விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.

இவ்வகையிலான, இந்தச் சிலைக்கரைப்பின் அரிய பயனை அறிந்திருந்ததால்தான் அர்ஜுன் சம்பத், சதுர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும்படி அரசை வற்புறுத்தியிருக்ககூடும் என்பது என் நம்பிக்கை.

இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்தபோது, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டு ஆறுகளில் அதிக அளவில் களிமண் சேர்ந்திட வாய்ப்பில்லை என்னும் உண்மை என்னுள் உறைத்தது.

பிள்ளையாருக்கு என்றில்லாமல், மற்ற இந்துக் கடவுள்களுக்கும் சதுர்த்தி[பிறந்த நாள்] விழாக்கள் நடத்தலாம் என்னும் எண்ணமும் உள்மூளையில் பளிச்சிட்டது.

பரமசிவன், பார்வதி, பலராமன், மகாவிஷ்ணு, மகாலட்சுமி, மாகாளி, மாரியாயி,  செல்லியம்மன், வள்ளியம்மன், சரசுவதி, ஆஞ்சநேயன், ஐயப்பன், முனியப்பன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், கடகடப்பான் சாமி, குடுகுடுப்பான் சாமி  என்று  பெரும்  எண்ணிக்கையில் நமக்கான சாமிகள் இருப்பதால், வாரம் ஒரு சாமிக்குச் சதுர்த்தி விழாக் கொண்டாடி, சிலைகளை ஆறுகளில் கரைத்துக்கொண்டே இருந்தால் அனைத்து ஆறுகளிலும் களிமண்  மேலும் மேலும் படிந்துகொண்டே இருக்கும்[ஆறுகளின் ஆழம் குறைந்து, வெள்ளம் கரையுடைத்துக்கொண்டு வெளியேறும் என்று அஞ்சத் தேவையில்லை. ஆறுகளின் இரு பக்கமும் உயரமான கான்கிரீட் சுவர்களை எழுப்பிவிடலாம்]. மழைக்காலங்களில், பெருக்கெடுத்துவரும் மழை நீரில் பெரும்பகுதி ஆறுகளுக்குள்ளேயே சேமிக்கப்படுமே என்ற எண்ணமும் உள்மனதில் உதித்தது.

இந்த என் எண்ணம் செயல்படுத்தப்பட்டால் பெரும் பயன் விளையும் என்பது என் நம்பிக்கை. அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் இதனைத் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கையாக முன்வைப்பார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
=============================================================================

அண்மைச் செய்தி[ தினத்தந்தி தொலைக் காட்சி...பிற்பகல் 03.00 மணி]:
‘சிறு கோயில்களுக்கெல்லாம் அனுமதி. தடைகளைத் தகர்க்கும் கடவுளுக்கே[விநாயகர்... ஊர்வலம்] தடையா?’ -பா.ஜ.க. கேள்வி.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

‘கடவுளை நம்பாதே’! மதநூல்கள் மனிதர்களின் படைப்பு’!!

“கடவுள் உண்டா? விடையே காண முடியாத கேள்வி இது. இதற்கு விடை காண முயன்று உன் வாழ்க்கையை வீணடிக்காதே” என்பது கௌதம சித்தார்த்தன் என்னும் புத்தரின் மிக முக்கிய போதனை ஆகும்[புத்தரைப் பற்றிப் பல புனைந்துரைக் கதைகள் பின்னர் வெளியாயின; அவர் கடவுளாகவும் ஆக்கப்பட்டார்].


‘சர்வ சக்திகளும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்கும்போது, மனிதன் தனக்கென்று சுதந்திரம் இல்லாதவன் ஆகிறான். ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பதற்கேற்ப, இறைவன் ஆட்டுகிறான்; மனிதன் ஆடுகிறான் என்றாகிவிடுகிறது. மனித முயற்சிக்கு இடமே இல்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

“எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஏற்றுக்கொள்ளாதே” என்பதும் அவரின் போதனைதான்.

இந்து மதம்[?], ‘வேதங்கள் யாராலும் உருவாக்கப்பட்டவையல்ல; அவை கடவுளிடமிருந்து நேரடியாகக் காற்றில் கலந்து, மனிதக் காதுகளை வந்தடைந்தவை’ என்கிறது. அதன் காரணமாகவே, வேதங்களுக்குச் ‘சுருதி’ என்னும் பெயரை அது கொடுத்திருக்கிறது!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாயிலாக இறைவனாலேயே இறக்கி வைக்கப்பட்டதுதான் ‘குர் ஆன்’ என்று இஸ்லாம் நம்புகிறது. இதை நம்ப மறுப்பவனை மார்க்க விரோதியாகவே அது பாவிக்கிறது.

‘பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவால் உருவாக்கப்பட்டதுதான் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாகிய விவிலியம்’ என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அதில் வரும் சுவிசேஷங்கள் எல்லாம் மனிதர்களின் ஊடாகத் தேவன் அருளியது என்று அது நம்புகிறது.

இவ்வாறு, மதங்களெல்லாம் தத்தம் மத நூலை இறைவன்தான் அருளினான் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்ட, பௌத்தமோ அந்த நம்பிக்கையைச் சுக்கல் சுக்கலாகத் தகர்த்தெறிய முயல்கிறது. ‘எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஒப்புக் கொள்ளாதே’ என்று சம்மட்டித் தாக்குதல் நடத்துகிறது.

‘கடவுள் சொன்னார் என்பதை நீ ஒத்துக்கொண்டால், உன் அனுபவத்துக்கும் அதனால் நீ பெற்ற அறிவுக்கும் வேலையில்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

இந்த மூடநம்பிக்கையால் எத்தனையோ கொடூரச் சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்துவிட்டன.

பைபிளில், உலகம் தட்டையானது என்னும் செய்தி உள்ளது. உலகம் உருண்டை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற விஞ்ஞானி கலிலியோ, போப்பாண்டவர் போட்ட உத்தரவால் பொங்கும் நெருப்பில் உயிரோடு பொசுக்கப்பட்டார்!

பரிணாமக் கொள்கையை உருவாக்கிய டார்வின், தேவாலயத்தில் மதவாதிகளின் முன்பு மன்னிப்புக் கோரினார். அவர் கண்டறிந்த பரிணாமக் கொள்கை பொய்யானது என்று அறிவிக்கும்படி மதம் அவரை அச்சுறுத்த அதன்படியே அவர் செய்தார்! 

புத்தர் மகானோ ரிஷியோ அல்லர். இந்தத் தன்மையை அவர் எதிர்த்தார். ‘ரிஷி சொன்னார்; மகான் சொன்னார் என்று எதையும் நம்பாதே. யார் எதைச் சொன்னாலும், உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து ஏற்புடையதை எடுத்துக்கொள்’ என்றார்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் பௌத்தர்களையும் சமணர்களையும், ‘திருடர்கள்’, ‘கொலைகாரர்கள்’, ‘வேத வேள்வியை மறுப்பவர்கள்’ என்றெல்லாம் பழித்தார்கள்;  “பௌத்தர்களின் பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கின்ற சக்தியை எங்களுக்குக் கொடு” என்று கடவுளிடம் வேண்டினார்கள்! இது எத்தனை பெரிய அநியாயம்!

புத்தன் என்ற சொல் ஓர் ஆளைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.

புத்தியை, அதாவது அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய முயல்பவன் புத்தன். சித்தார்த்தன், தன் புத்தியைப் பயன்படுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்ததால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு பல புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

சித்தம் என்பதும் அது போன்றதே. சித்தத்தைக் கட்டுப்படுத்தி அதை நல்வழியில் செலுத்துபவன் சித்தன்.

என்சைக்ளோபீடியா, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்கள், புத்தன் என்பதற்கு, ‘எதையும் புத்தியின் மூலம் ஆராய்பவன்; குருட்டுத்தனமாக நம்பாதவன்’ என்று பொருள் தருகின்றன.

சைவ வைணவ மதத்தவரால் எண்ணற்ற புத்தமதத்தினரும் சமண மதத்தவரும் கழுவேற்றப்பட்டார்கள்; செக்கிலிட்டு அரைக்கப்பட்டார்கள்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி எறியப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த பல புத்தக் கோயில்கள் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டன. தங்கம், வைரம் இவற்றால் ஆன புத்த விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாறான பல தீச்செயல்களால், பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழும்படி வலியுறுத்திய சிறந்த ஒரு மதம் [புத்தம் மதமல்ல; ஓர் இயக்கம் என்பாரும் உளர்] அது உருவான மண்ணைவிட்டே விரட்டியடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம்!
*******************************************************************************************
கீழ்க்காணும் நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. நூலாசிரியர்களுக்கு நன்றி.

1. தமிழருவி மணியன் எழுதிய ‘ஞானபீடம்’, கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை. மறுபதிப்பு: அக். 2009.

2.ஞான.அலாய்சியசு எழுதிய ‘பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’, புதுமலர் பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு: டிசம்பர் 2005.