ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

விலங்குகளைவிடவும் இழிந்தவர்களா கடவுள்கள்?!?!

ஆண் சிங்கம் தனக்குப் பிடித்தமான துணை கிடைக்கும்வரை தனித்தே வாழும். பிரியத்திற்குரிய துணை கிடைத்து, குட்டிகளை ஈன்றெடுத்த பின்னரும் வேறு பெண் சிங்கங்களைத் தேடி அலைவதில்லை. இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் பிரிக்கப்பட்டுத் தனித் தனியே வாழும் சூழலிலும்கூட, இவை இரண்டும் வேறு துணையை நாடுவதில்லை.

சிங்கம் என்றில்லை, நரிகூட, தன் துணையைத் தவிர உடலுறவுச் சுகத்துக்காக வேறொரு நரியைத் தேடி அலையாது.

கழுகு, இன்னொரு கழுகுடன் இணை சேர்ந்த பிறகு வாழ்நாளெல்லாம் பிறிதொரு கழுகைத் தன் துணையாக்கிக் கொள்வதில்லை.

பறவைகளில் புறாவும்கூட, தன் இணையுடன் மட்டுமே கலவி புரியும்.
சங்க கால இலக்கியங்களால் பேசப்படும் ‘அன்றில்’ பறவை, தன் துணை இறந்துவிட்டால் உயர உயரப் பறந்து, ஒரு நிலையில் இறக்கைகளை அசைக்காமல் தலைகுப்புற விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் என்பது செய்தி. 

சிட்டுக்குருவிகளும்கூட ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்பவைதான்.

இவை போல, இல்லற வாழ்வில் தடம் பிறழாத இன்னும் பல விலங்குகளும் பறவைகளும் இருத்தல்கூடும்.

மேற்குறிப்பிட்ட  உயிரினங்களிடம் உள்ள இந்த ‘ஒழுக்கம்’ நம்மவர்கள் கோயில் கோயிலாகச் சென்று வழிபடும் ‘கதைக்கப்பட்ட’ பல கடவுள்களிடம் இல்லை.

சிந்திக்கவே விரும்பாத நம் மக்களில் பலரும், ஆன்மிகர்கள்[‘கடவுள் ஒருவரே’ எனப்படும் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள்] சொல்லிச்சென்ற ஆபாசக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு கோயில்களில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கும் சிலைகளையும், வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் கண்டு கண்டு ரசிக்கிறார்கள்; கழிபேருவகை எய்துகிறார்கள்.

கற்பைக் கடைச்சரக்காக்கிய சாமிகளையெல்லாம் தேடிப் போய்க் குறை நேர்வதும் ஒழுக்கம் கெட்டதுகளிடம் அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை எதிர்பார்ப்பதும் தவறு என்பது இன்றளவும் அவர்களுக்குப் புரியவில்லை; புரிந்துகொள்ள அவர்கள் தயாராகவும் இல்லை.

ஆனால்.....

மூடர்கள் கட்டிவிட்ட கதைகளையும், மூடநம்பிக்கைகளையும் கண்டிப்பவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு மட்டும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்.

அசிங்க அசிங்கமாகச் சித்திரிக்கப்பட்ட கடவுள்களைப் பட்டியலிடுவதற்கோ, அவர்களை வழிபடுபவர்களைச் சாடுவதற்கோ இப்பதிவை நான் எழுதவில்லை[இப்பணியை ஏற்கனவே பல சிந்தனையாளர்கள் செய்திருக்கிறார்கள்].

‘விலங்குகள், பறவைகள் போன்ற உயிர்களிடத்தில் உள்ள சில ஒழுக்க நெறிகள், பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற, கற்பிக்கப்பட்ட பல கடவுள்களிடத்தில் இல்லை!!!’ என்பது மட்டுமே இதைப் பதிவிட்டதன் நோக்கம் ஆகும்.
===============================================================

சனி, 5 செப்டம்பர், 2020

’அது’க்கு அந்தக்காலச் கட்டுப்பாடுகள்!!![பொழுதுபோக்கு]

பதினேழாம் நூற்றாண்டு.

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் குடியேறிக்கொண்டிருந்த காலம்.

அப்போதும் காதல் கத்தரிக்காய் பண்ணுவதெல்லாம் இருந்திருக்கிறது.

சொந்த ஊரிலிருந்து வன விலங்குகள் திரிகிற அதிபயங்கரக் காடுகளின் வழியாக, இளவட்டங்கள் குதிரைகளில் பயணித்துக் காதலிகளைச் சந்திக்கச் செல்வது உண்டாம். 

இருள் படரும் மாலை நேரமாயின் காதலி வீட்டிலேயே இரவு முழுக்கத் தங்கிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாம். ஆனால், ‘அது’க்கு மட்டும் அனுமதி இல்லை!

அப்போதெல்லாம் மின்சாரம் இல்லாததால், வெளிச்சத்திற்கு ‘மெழுகுவர்த்தி’ மட்டுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

காதலனும் காதலியும் ‘கூடி’க் களிக்க அனுமதி இல்லையென்றாலும், அருகருகே படுத்துக்கொள்ளலாமாம். ஆனால், இருவருக்கும் நடுவே கழுத்திலிருந்து கால்வரையிலான நீளமுள்ள உயரமான பலகை பொருத்தப்பட்டிருக்கும். இருவரும் முகம் பார்த்துக் களிக்கலாம்; முத்தங்களைக்கூடப் பகிர்ந்துகொள்ளலாம். அதற்கும் மேலே வரம்பு மீற வழியில்லை[குடும்பத்தார்களும் அருகிலேயே படுத்துறங்குவது வழக்கமாக இருந்தது].

மேற்கண்ட இந்தப் பலகைக்குச் ‘சுருக்குப் பலகை’ என்று பெயர்.

சில வீடுகளில், காதலியின் இடுப்புவரை ‘சாக்குப்பை’ போர்த்துக் கட்டிவிடுவது உண்டு. இம்மாதிரித் தடைகளையெல்லாம் கடந்து, காதலர்கள் ‘கசமுசா’ செய்துவிட முடியாது என்பது பெற்றோர் நம்பிக்கை.

ஆயினும் என்ன, பல கில்லாடி இளைஞர்கள் தந்திர உத்திகளைக் கையாண்டு, தடைகளைத் தகர்த்துச் சல்லாபிப்பதெல்லாம் நிகழ்ந்தது. அதன் விளைவாகத் திருமணத்திற்கு முன்பே பல கன்னிகள் கர்ப்பம் ஆவதும் உண்டாம்.

இதற்கெல்லாம்  வரலாற்றுச் சான்றுகளும் உள்ளனவாம். ஹி...ஹி...ஹி!!!
===========================================================================================
முக்கியக் குறிப்பு:
இது அடியேனின் கற்பனையில் உதித்த பொய்க்கதை அல்ல; டாக்டர் நாராயண ரெட்டி அவர்களின் ‘உயிர்’ நூலிலிருந்து சுட்டெடுத்தது!

===========================================================================================

பின்னிணைப்பு:

காதலா, காமமா, வயிற்றுப்பசியா, வலிமையானது எது?[கதை]


‘பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ‘காதல் மலர்ந்தாலோ காமம் வலை விரித்தாலோ, பசியென்ன, மானம் மரியாதை சுயகௌரவம் என்று எல்லாமே காணாமல் போகும்’ என்பது இன்றைய எதார்த்தம்.

“மனிதர்கள்தான் காதலுக்கும் காமசுகத்துக்கும் பலியாகிறார்கள்    என்றால் மற்ற உயிரினங்கள் எப்படி?” என்று எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு. எனினும், விடை தேடும் முயற்சியில் தீவிரம் காட்டியதில்லை.

பழைய விகடனில்[27.05.2001] ‘பல்லி’க்கூடம் என்னும் தலைப்பிலான ஒரு குட்டிக்கதையைப்[போட்டியில், ரூ3000/= பரிசு பெற்றது] படித்தபோது, அதன் ஒரு பகுதி என் கவனத்தை ஈர்த்தது. கொஞ்சம் மாற்றங்களுடன் அதைப் பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள்
#.....நள்ளிரவில் மாதவன் வருவான். தன் மேல் உயிரையே வைத்திருக்கும் கிழவிக்குத் தெரியாமல் அவனுடன் ஓடிப்போக இருப்பது யமுனாவுக்கு வேதனையைத் தந்தது. 

மல்லாந்து படுத்துக்கிடந்த அவளின் பார்வை, சுவரின் மேற்பரப்பில் படர்ந்தது. அங்கே.....

இரைக்கான தேடலில் ஈடுபட்டிருந்தது ஒரு பல்லி. சில கணங்களில் இன்னொரு பல்லி அங்கு வந்தது. அது, இரை தேடும் பல்லியின் பின்புறமாகச் சென்று அதனைத் தழுவ முற்பட்டது. எனவே, அது   ஆண் பல்லி என்பது புரிந்தது.

பெண் பல்லியோ ஆண் பல்லியிடமிருந்து தப்பித்துப் போக்குக் காட்டியது; அதனை அலைக்கழித்தது.

சற்று நேரம் கழித்து, ஆண் பல்லி மீது பரிதாபம் கொண்டதோ என்னவோ ஆணின் தழுவலை எதிர்பார்த்து அசையாமல் நின்றது. ஆண் பல்லியும், அதுவரையிலான அலைக்கழிப்பை மறந்து புணர்ச்சி விருப்புடன் பெண் பல்லியை நெருங்கியது. அந்தச் சமயம் பார்த்து.....

எங்கிருந்தோ பறந்துவந்த பூச்சியொன்று பெண் பல்லிக்கு முன்பாக அமர்ந்தது.

அதுவரை காதல் மயக்கத்தில் திளைத்து, கலவியின்பத்தை எதிர்பார்த்துக் கிடந்த பெண் பல்லி, கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பெருக்கிலிருந்து கணப்பொழுதில் விடுபட்டுப் பூச்சியின் மீது பாய்ந்தது; ‘லபக்’கென்று அதைப் பிடித்துச் சுவைக்கத் தொடங்கியது.

ஆண் பல்லி ஏமாற்றத்துடன் நின்றது.

‘பல்லிகளைப் பொருத்தவரை, காதலை விடவும் காமத்தை விடவும் ‘பசி’ வலிமையானது’ என்பது யமுனாவுக்குப் புரிந்தது. எனவே.....

யமுனா ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். ‘வேலை இல்லாத மாதவனால், தன்னை வைத்துப் பாதுகாக்க முடியாது. அவனுக்கு வேலை கிடைக்கட்டும். அப்புறம் கிழவியிடம் அழுது கதறிச் சம்மதம் வாங்கிவிடலாம். இப்போது அவனுடன் ஓடிப்போக வேண்டாம்’# .
********************************************************************************************************
நன்றி: குட்டிக்கதையின் ஆசிரியர் வ.ந.கிரிதரன்