ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

'ஆன்மா' உண்மையெனின், அது உடம்புக்குள் புகுவது எப்படி?!

ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்கிறது அறிவியல்.
குழந்தை பிறந்து, வளர்ச்சி பெற்று வாழ்ந்து மடிகிறது.

அந்த உடம்புக்குள்தான் ஆன்மா புகுந்து உடம்பு அழியும்வரை அதை ஆண்டு, அது அழியும்போது வெளியேறுவதாகச் சொல்கிறார்கள்.

அந்த ஆன்மா, உடம்புக்குள் புகுவது எவ்வாறு?

காது, மூக்கு, வாய், மலத்துவாரம், மர்ம உறுப்பு ஆகிய முக்கிய துவாரங்கள் வழியாகவா, இல்லை, வேர்வைத் துவாரங்கள் மூலமாகவா?

ஒவ்வொரு துவாரத்திலும்  கணக்கற்றவை நுழைய முடியும். ஒன்றுக்குத்தான் அனுமதி என்பது கடவுள் வகுத்த விதியா? ஒன்றுக்கும் மேற்பட்டவை போட்டியிட்டு, வென்ற ஒன்று உட்புகுகிறதா?

உடம்புக்குள் புகுகிற அந்த ஒன்று, துவாரம் இல்லாத சினை முட்டையைத் துளைத்தது எவ்வாறு?

கருப்பையில் இருக்கும் சினை முட்டையை அடைவதற்கான வழி, பெண்ணுறுப்புப் புழைதான்.

எனவே, ஆண், தன் விந்துவைப் பெண்ணுறுப்பில் தெளிக்கும்போதே, அதன் ஒவ்வொரு துளியிலும் கோடானுகோடி ஆன்மாக்கள் கோடிக்கணக்கான உயிரணுக்களுடன் பயணித்தல் வேண்டும். உயிரணுக்களுக்கான ஓட்டப் போட்டியில் வென்று, சினை முட்டையைத் துளைத்து உட்புகும் ஒற்றை உயிரணுவுடன் ஒட்டிக் கொண்டு வீரியமுள்ள ஓர் ஆன்மா மட்டும் சினை முட்டைக்குள் நுழைதல் வேண்டும்; மூளை உருவாகக் காரணமான செல்களில் அது நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும். 

இவ்வாறுதான் ஓர் ஆன்மா சினை முட்டைக்குள் நுழைகிறதா?

மேலும்.....

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், தனக்குரிய உடம்பைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் உண்டா?

புகுந்த உடம்பின் மீது வெறுப்பு ஏற்பட்டால், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஆன்மா வெளியேறலாமே! ஏன் அவ்வாறு செய்வதில்லை? கடவுள் கட்டுப்படுத்துகிறாரா? நிபந்தனைகள் விதித்திருக்கிறாரா?

இன்றுவரை இவ்வினாக்களுக்கு விடை ஏதும் இல்லை.

ஆன்மாதான் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகிறது என்றால், மூளை இல்லாமலே மனித உடம்பு இயங்க வேண்டும்; சிந்திக்கவும் வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்றால் நகைப்புதான் மிஞ்சுகிறது.

'உடலின் இயக்கத்துக்கு மூளைதான் காரணம்; ஆன்மாவின் பணி, இந்த மண்ணில் மனிதன் பெறும் அனுபவங்களையும் செய்யும் பாவ புண்ணியங்களையும் மரணத்துக்குப் பின்னர் சுமந்து செல்வது மட்டுமே' என்றால், அடுத்த பிறவியில், இப்போது பெற்ற அனுபவங்கள் நினைவுக்கு வருதல் வேண்டும். அதுவும் சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

‘ஆன்மா இருப்பதும், பிறவிதோறும் வேறு வேறு உடல்களில் புகுந்து புகுந்து இருந்து இருந்து வெளியேறுவதும் உண்மையாயின், ஒரு பிறவியில் மருத்துவராக இருந்து அனுபவம் பெற்ற ஓர் ஆன்மா அடுத்த பிறவியில் மருத்துவக் கல்லூரியில் கற்காமலே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று பதிவர் ‘வவ்வால்’ அவர்கள், பதிவர் ‘சார்வாகன்’ அவர்களின் ஒரு பதிவுக்கான பின்னூட்டமாகப் பதிவு செய்த கருத்து இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.
=================================================================================

2014ஆம் ஆண்டில் நான் வெளியிட்ட ஒரு பதிவின் சிறு பகுதி இது.

சனி, 13 பிப்ரவரி, 2021

'மகா... பெரியவா'வும் மகாப் பெரிய சூனியக்காரியும்!!!

'மகா பெரியவா' திருச்சிக்கு அருகே முகாமிட்டிருந்தாராம்.

அவரைத் தரிசிக்கச் சுற்றுவட்டார மக்கள் வந்தார்களாம். அவர்களுள் 60 வயது மதிக்கத்தக்க ஒரு சூனியக்காரியும் இருந்தாளாம். அவள் பணத்துக்காகப் பணம் தர்றவங்களோட எதிரிகள் மேல, எலுமிச்சம்பழத்தை மந்திரிச்சி ஏவல், சூனியம் எல்லாம் செய்யுறவளாம்.

அவள் சூனியக்காரிங்கிறது அங்கிருந்த மத்தவாளுக்குத் தெரியலையாம்.

ஆனா, நம்ம பெரியவா பெரிய மாகானல்லவோ, அவள் சூனியக்காரிங்கிறதையும், தனக்கே சூனியம் வைக்க வந்தவள்ங்கிறதையும் 'ஞானக் கண்'ணால் தெரிஞ்சுண்டாராம். ஆனா, தெரிஞ்ச மாதிரி காட்டிக்கலையாம்.

"பெரியவா, நான் இப்போதான் முதன் முதலா உங்களைத் தரிசிக்க வந்தேன்"னு சூனியக்காரி சொன்னாள். அதுக்குப் பெரியவா, "நீ வர்றேங்குறது தெரியும்; எதுக்கு வந்திருக்கேங்குறதும் தெரியும்"னு சொன்னதோட, அவளுக்கு நூறு எலுமிச்சம் பழமும் கொடுத்தார்.

தான் வந்த நோக்கத்தை யாரும் சொல்லாமலே[வழக்கமா, தரிசணம் பண்ண வர்றவங்களோட குறையை அவங்க சொல்லாமலே தெரிஞ்சி, அதை நிவர்த்தி செய்வது பெரியவா வழக்கம். இது எப்படிச் சாதியமாச்சுன்னு கேட்டுடாதீங்க. மகானை நிந்திச்ச பாவம் உங்களைச் சேரும். ஜாக்கிறதை!] பெரியவா கண்டுபிடிச்சதை நினைச்சிப் பயந்துபோனாள் அந்தச் சூனியக்காரி.

கதறி அழுது, மகாப் பெரியவாகிட்டே மன்னிப்புக் கேட்டாள். பெரியவாவும் அவளை மன்னிச்சி ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.

"ரொம்ப நல்லவரான பெரியவாவுக்குச் சூனியம் வைக்கத் தூண்டினது யாரு? ஏன் தூண்டினாங்க? இவரைப் பத்திச் சூனியக்காரிக்குத் தெரியாதா?" என்கிற மாதிரியெல்லாம் கேள்வி கேட்டுடாதீங்க. 

மறைந்த பெரியவாவுக்குப் பெருமை சேர்க்கிறதா நினைச்சுண்டு இப்படியான 'ஓட்டை உடைசல்' கதைகளை வாராவாரம் 'குமுதம்' வார இதழ்க்காரங்க எழுதிட்டு வர்றாங்க.

தவறாம படிங்க. உங்களுக்குப் புண்ணியம் சேரும். ஏடாகூடமா கேள்வியெல்லாம் கேட்டா நரகத்துக்குப் போவீங்க! உஷார்!!