செவ்வாய், 2 மார்ச், 2021

ஆண்டுகள் இரண்டு! 500 பெண்களிடம் சீண்டல்!! அசிங்க சாதனை!!!

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவர் அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த இளைஞரின் இருசக்கர வாகன எண்ணை வைத்துத் தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தேடியதில், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த சரண்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து  அவர்கள் விரைந்து சரணைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தான் செல்லும் இடங்களிலெல்லாம் பெண்களைக் குறிவைத்துப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சரண் தெரிவித்துள்ளார். தனது படிப்பை முடித்துவிட்டுத் தற்போது பூந்தமல்லியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பணியாளராகப் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் வசூலிப்பதற்காகச் சரண் செல்லும்போது அந்த இடங்களில் பார்க்கக்கூடிய அழகான கல்லூரி மற்றும் இளம் பெண்களைக் குறிவைத்துப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்குத் தன் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில், தனியாக நடந்து செல்லும், 500க்கும் குறையாத கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களைச் சீண்டிச் சுகம் கண்டதாகக் காவல்துறையினரிடம்  சரண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதிலும் ஒரு எல்லை வகுத்துக்கொண்ட சரண் ஒரு வித்தியாசமான ஆள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும், சீண்டலில் சுகம் காண்பதைக் கைவிட்டு, இனியேனும் அவர் கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம்.

நன்றி: https://www.kumudam.com/news/tamilnadu/29085  -Updated: Mar 02, 2021

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

கடவுளாம் கடவுள்...வெங்காயக் கடவுள்!!!

ஒரு காடு.

ஒரு மான் தான் ஈன்ற, சில நாட்களே ஆன குட்டிக்குப் பால் தந்து கொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலையவிடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை, அசுரப் பாய்ச்சலில் சீறிப் பாய்கிறது.

எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டு, எகிறிப் பாய்கிறது மான்.

மான் தப்பியது. குட்டி சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

ஓடப் பார்க்கும் மான் குட்டியைச் செல்லக் கடி கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும் கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன[டிஸ்கவரி சேனலில் இடம்பெற்ற நிகழ்வு] .

உயிரைக் காத்துக் கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும். அதைவிட, நாம் பட்ட வேதனை குறைந்ததா என்ன?

இந்தக் கொடூரக் காட்சியைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக் கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?

அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனை கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே” என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில் [கடந்த பிறவிகளில்]
உயிர் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம்காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்? உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பிய போது, “கடவுள் ஒரு போதும் தூண்டமாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும் ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” -இப்படிப் புரியாத தத்துவங்களைச் சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள்/சமாளிக்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவியில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போடமுடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும்.  ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில் அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் ஓர் அரக்கன் அல்லவா?”

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப்பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்து கொண்டு உயிர்கள் திருந்த வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?”

அப்புறம் என்ன கடவுள்? வெங்காயக் கடவுள்!