சனி, 20 மார்ச், 2021

ஒரு முதிர்கன்னியின் முன் அனுபவங்கள்!!!

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது இந்த என் கதை. ஏற்கனவே நீங்கள் வாசித்திருப்பினும், இன்றையப் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மறந்துபோவதற்கான வாய்ப்பு மிகுதி[ஹி...ஹி...ஹி...] என்பதால் மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

வழக்கமான வரவேற்பு, அறிமுகங்களுக்குப் பின்னர் ‘பெண் பார்க்கும்’ சடங்கு ஆரம்பமாகியிருந்தது. பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு, ‘குழம்பி’ குடித்து, மணப்பெண் பத்மாவதியைக் காணும் ஆவலுடன் மாப்பிள்ளை வீட்டார் காத்திருந்தார்கள்.

பத்மாவதி ஒரு முதிர்கன்னி; வயது முப்பத்தி மூன்று; ஒரு வெல்ல மண்டிக் கணக்குப்பிள்ளையின் மூன்றாவது மகள்; அழகு விசயத்தில்  சராசரிக்கும் கீழே. அது இருந்திருந்தால் காதல் கத்தரிக்காய் பண்ணி எவனையாவது தொத்திகொண்டிருப்பாள். ஒரு பெண் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு கல்யாணச் சந்தையில் விலை போக முடியுமா? பாவம் பத்மாவதி!

 முகத்தில் ‘ரெடிமேட்’ புன்னகை தவழ, சற்றே குனிந்த தலையுடன் அனைவரையும் கும்பிட்டுவிட்டு அறையொன்றில் அடைக்கலம் புகுந்தாள் அவள்.


“மாப்ள, பொண்ணு பிடிச்சிருக்கா?” -கேசவனின் காதைக் கடித்தார் அசோகன்; மணமகனின் தாய்மாமன்.

“அதுகிட்டத் தனியாப் பேசிட்டுச் சொல்றேன் மாமா” என்றான் கேசவன்.

அவன் விருப்பத்தை அறிந்த பெண் வீட்டார், பத்மாவதி இருந்த அறைக்குள் அவனை அனுமதித்தார்கள்.

செயற்கைப் புன்னகையுடன் அவனை வரவேற்ற அவள், அவனை ஓர் இருக்கையில் அமரச் சொல்லி, இன்னொன்றில் தானும் அமர்ந்தாள்.

“உன்கூட மனம் திறந்து பேச விரும்பறேன். முதல்ல நான் கொஞ்சம் கேள்விகள் கேட்குறேன். அப்புறம் நீயும் கேளு. வந்து.....நீ யாரையும் காதலிச்......”

“கொஞ்சம் பொறுங்க.....” -குறுக்கிட்டாள் பத்மாவதி; சொன்னாள்: “ஏழெட்டு வருசமா அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டு வர்றார்.  எனக்கு வயசு முப்பத்தி மூனு. இதுவரைக்கும் ஐம்பது பேரு என்னைப் பெண் பார்த்துட்டாங்க. கேள்வி மேல் கேள்விகள் கேட்டாங்க. நானும் பதில் சொல்லியிருக்கேன். கசப்பான அந்த என் அனுபவங்களை ஒன்னுவிடாம எழுதி வெச்சிருக்கேன். உங்க வீட்டுக்குப் போயி சாவகாசமா படிச்சிப் பாருங்க. மேலே எதுவும் கேட்கத் தோணினா  ஃபோன் பண்ணுங்க. பதில் சொல்றேன். என்னைக் கட்டிக்கறீங்களோ இல்லியோ, மறக்காம இதைத் திருப்பிக் கொடுத்துடுங்க. இது விசயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.” -வறண்ட புன்னகையுடன் ஒரு சிறிய ‘டைரி’யைக் கேசவனிடம் நீட்டினாள்; அவனுக்கு விடை கொடுக்கும் விதத்தில் எழுந்து நின்று கை கூப்பினாள்.

வெள்ளி, 19 மார்ச், 2021

இனி கச்சத்தீவு நம் கையில்?!?!

"கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

தமிழர்களின் காதுகளில் தேன் பாய்ச்சுகிற இந்தச் செய்தி[இன்று முற்பகலில் வெளியானது https://www.ibctamil.com/india/80/161686 ] உண்மையானதா, இல்லை, விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காகப் பா.ஜ.க. நடுவணரசு கையாளும் தந்திரமா?

இராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்திய மத்தியக் கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் 'வி கே சிங்'தான்  மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கீழ்க்காணும் வகையிலான சில தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.

<>கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

<>இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

<>இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

<>ஆழ்கடல் மீன்பிடித் திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

<>இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர், தேர்தலை மனதில் வைத்து இவ்வாறு பேசவில்லை என்றால், விரைவில் கச்சத்தீவு மீட்டெடுக்கப்படுமா?

இலங்கையரசு சம்மதிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுத்து அதைப் பணிய வைக்குமா?

ஒருவேளை, அண்டை நாடும் அதன் நட்பு நாடுமான சீனாவிடம் அது உதவி கோரினால், பா.ஜ.க. அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை நாம் பாராட்டும் வகையில் அமையுமா?

நடுவணரசு அமைச்சரின் அறிவிப்பின் பின்னணியில், இவ்வாறான விடை தெரியாத கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன.

விடை அறிய.....

காத்திருப்போம்.