ஞாயிறு, 28 மார்ச், 2021

'புரட்சியாளன் பிரபாகரன்'... அறியப்படாத பல அரிய தகவல்கள்!!!

"உலகில் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பெண் அல்லது ஆண் புரட்சியாளர் பற்றிய சுவாரசிய மற்றும் அதிகம் அறியப்படாத தகவல்கள் சொல்ல முடியுமா?" என்னும் 'Quora'  வின் கேள்விக்கு[·23 பிப்ரவரி], 'மயூரன் குமாரசாமி'[New Zealand Customs Service-இல் Customs Officer (2015–தற்போது வரை) அவர்கள் அளித்த பதில்:

"எனக்குப் பிடித்த புரட்சியாளர் - ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

தலைவர் பற்றிய '25 குறிப்புகள்'..... நிச்சயம் இவை படிப்பவரைச் சிலிர்க்கச் செய்யும்.

01.'அரிகரன்' - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்துப் பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல், 'அலெக்ஸ் ஹேவி'யின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையொட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும்தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து, தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்துp பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்Wink மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க, செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாகp போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதிவரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்கமாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்."

நன்றி: 'மயூரன் குமாரசாமி' அவர்கள்[ta.quora.com]

சனி, 27 மார்ச், 2021

'அப்பா பைத்தியம்' இங்கே! 'அம்மா பைத்தியம்' எங்கே...எங்கே?!?!

https://tamileindia.com/news/salem/pudhucherry-n-rangasamy-prays-appa-paithiyam-temple-in-salem/articlecontent-pf534058-416019.html. -Published: Thursday, March 25, 2021, 20:28 [IST] வெளியாகியுள்ளது.

அப்பா பைத்தியமோ, அம்மா பைத்தியமோ பைத்தியத்துக்கு ஒரு கோயிலா என்று நினைத்து நீங்கள்  மண்டை காய வேண்டாம். 'அம்மையே அப்பா ஒப்பிலா மணியே'ன்னு மாணிக்கவாசகர் பாடினார் இல்லையா, அந்த அப்பா மீது அளப்பரிய பக்தி கொண்டிருந்த காரணத்தால் இவர் 'அப்பா பைத்தியம்' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது அடியேனின் யூகம். ஹி...ஹி...ஹி...

'ஒரு காலத்தில் முருகப் பக்தராக இருந்த என். ரங்கசாமி கடந்த 90ஆம் ஆண்டு அப்பா பைத்தியம் சாமிகளைச் சந்தித்தார். அதன்பின் அவரது தீவிரப் பக்தராக மாறினார்[முருகன் கோபிக்க மாட்டாரோ?]. முக்கிய முடிவுகளுக்கு முன் சேலம் சூரமங்கலத்தில் உள்ள 'அப்பா பைத்தியம்' கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு முக்கிய முடிவு எடுப்பார். வீட்டில் உள்ள அவரது படத்தைக் கும்பிடாமல் எங்கேயும் புறப்படமாட்டார்[நம் முதல்வர் அய்யா, சட்டைப் பையில் அம்மா படம் வைத்திருக்கிற மாதிரி, அப்பா பைத்தியம் படத்தை இவர் தன் சட்டைப் பையில்  வைத்துக்கொள்ளலாம்]' என்பது செய்தி.

புதுச்சேரி முதல்வராவதற்கு அப்பா பைத்தியம் சாமிகள்தான் காரணம் என்பது இவரது அசைக்க முடியாத நம்பிக்கையாம். போன தேர்தலில் தோற்றுப்போனாரே, அந்தத் தோல்விக்கும் இந்த அப்பா பைத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்று ரங்ஸ் நினைக்கிறாரோ? இந்தச் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் முன்பாக சேலம் வந்த என். ரங்கசாமி யாருடன் கூட்டணி அமைப்பது என்று குறி கேட்டு விட்டுச் சென்றாராம்.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளார் ரங்கசாமி. இன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 பேர், அதிமுக வேட்பாளர்கள் 5 பேர் பாஜக வேட்பாளர்கள் 9 என மொத்தம் 30 வேட்பாளர் பட்டியலை அப்பா பைத்தியம் சிலை முன்பாக வைத்து வணங்கினாராம்.

வணங்கிய கையோடு, எத்தனை பேர் ஜெயிப்பாங்க, யார் யாரெல்லாம்  மண்ணைக் கவ்வுவாங்கன்னு கேட்டிருந்தா அப்பா பைத்தியம் சாமி சொல்லியிருக்கும். 

அதோட, ஜெயிச்சி ஆட்சி அமைச்சதுக்கப்புறம், "பா.ஜ.க.காரங்க எப்போ கூட இருந்தே குழி பறிப்பாங்க?" என்றும் அப்பா பைத்தியத்துகிட்டே கேட்டிருக்கலாம். கேட்டாரா ரங்கசாமி?

வேட்பாளர்கள் அனைவரின் ஜாதகங்களை மூலவரின் பாதத்தில் வைத்துத் தரிசனம் செய்தார். மூலவரின் வாயில் சுருட்டு வைத்து, காதுகளில் பேசி உத்தரவு வாங்கினார்[இதைச் 'சுருட்டுச் சாமி'ன்னும் சொல்லாம்]. மூலவர் சன்னதியில் 1-30 மணி முதல் 2-30 மணி வரை தியானத்தில் ஈடுபட்ட அவர் கோவிலை வலம் வந்து கையில் சில காகிதங்களுடன் காரில் புறப்பட்டார் என்கிறது செய்தி.

"வாயில் சுருட்டு வைத்தால்தான் சுருட்டுச் சாமி காதுகொடுத்துக் கேட்குமா? உத்தரவு கொடுக்குமா?" என்று யாரும் கேட்டுவிட வேண்டாம். அப்படிக் கேட்ட பலரின் நுனி நாக்கை, அப்பா பைத்தியம் சாமி சுருட்டால் சுட்டுக் கருக்கிவிட்டதைச் சேலம் சூரமங்கலம் மக்கள் கதை கதையாய்ச் சொல்லுகிறார்கள்.

செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, "புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 100 சதவிகித வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அந்த வெற்றிக்கு, சாமியிடம் வேண்டுகோள் வைத்தேன். வெற்றி பெற்றதும் மீண்டும் வந்து தரிசனம் செய்வேன்" என்றாராம். வெறும் தரிசனம் போதாதே, அப்பா பைத்தியத்துக்குத் தங்கக் கிரீடம் சூட்டுவேன்; உடம்புக்குத் தங்க முலாம் பூசுவேன் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம்.

கடந்த 90ஆம் ஆண்டு, முதல் முறையாக தட்டாஞ்சாவடித் தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி தோல்வி அடைந்தார். அப்போது தமிழகத்தைச் சேர்ந்த அப்பா பைத்தியம் சாமியார் புதுச்சேரி வந்திருந்தார். அவரை முன்னாள் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆசி பெற்றார்கள். அப்போது ரங்கசாமியும் சந்தித்தார். அவரைப் பார்த்த சாமியார், 'ஓராண்டில் அமைச்சராவாய்' என்றாராம்.

91ஆம் ஆண்டு திமுக-ஜனதாதளம் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடைபெற்றது. மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட்ட ரங்கசாமி, வெற்றிபெற்றுக் கூட்டுறவு அமைச்சரானார். அன்று முதல் 'அப்பா பைத்தியம்' சாமியின் பக்தரானார். கடந்த 2000ஆம் ஆண்டு சாமிகள் ஜீவசமாதி அடைந்தார். அதன் பின்னர் சேலம் சூரமங்கலத்திலுள்ள அவரது சமாதிக்குச் செல்லத் தொடங்கினார். சிலை முன்பு அமர்ந்து உத்தரவு பெற்ற பிறகே அனைத்துக் காரியங்களையும் செய்வார். சேலம் அடிக்கடி செல்ல முடியாததால் புதுச்சேரி வீமக்கவுண்டன்பாளையத்தில் கோயில் கட்டியுள்ளார்.

நாமக்கல்காரங்க 'அப்பா பைத்தியம்' சாமிக்குக் கோயில் கட்டத் திட்டமிட்டிருக்காங்க. அதுக்கு முன்னாடி ரங்கசாமி வெற்றி பெற்று, அப்பா பைத்தியம் சக்தியுள்ள சாமிதான்னு நிரூபணம் ஆகணுமாம். 

எங்க ஊர்க்காரங்க ரொம்பவே புத்திசாலிங்க!

======================================================================================

* 'பக்தர்களிடம் தன்னைப் பைத்தியம் என்று இவர் கூறிக்கொண்டமையால் பைத்திய சாமி என்றும், பக்தர்களின் கோரிக்கைகளைத் தந்தைபோல இருந்து நிறைவேற்றியதால் அப்பா பைத்தியம் சாமிகள் என்றும் அழைக்கப்பட்டார். எண்ணற்ற ஊரில் தங்கி, பக்தர்களுக்கு உதவிய இவர் சேலம் சூரமங்கலத்தில் 141வது வயதில் தை 28 2000 த்தில் ஜீவ சமாதி அடைந்தார்'--விக்கிப்பீடியா