செவ்வாய், 8 ஜூன், 2021

'ஒன்று' என்று ஒன்றுமே இல்லை!!!

நான் அறிவியல் அறிந்தவன் அல்ல; அதைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன். தெரிந்தவற்றைக் கொண்டு உருவாக்கியது இந்தப் பதிவு. 

இது,  பயனுடையதாக அமையுமோ இல்லையோ, படித்து முடித்த பின்னர் சிறிது நேரமேனும்  சிந்திப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

                                                                               *               *

'ஒன்று' மட்டுமே உள்ளது என்று சொல்லும்படியான எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை['ஒன்று' என்பது 'ஒன்றாதல்' என்பதன் மருவிய வடிவம். ஒன்றாதல்... பல ஒன்றிணைதல்].

அனைத்துப் பொருள்களும் பல... மிக மிக மிகப் பல அணுக்களால் ஆனவை. அவற்றின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

இவ்வுலகில் வாழ்ந்த... வாழ்ந்துகொண்டிருக்கிற உயிர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில்; அண்டவெளியில், தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிற கோள்கள் & நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் அவ்வாறே.

காற்று எனப்படுவது ஒற்றைப்படையான 'ஒன்று' என்று சொல்லத்தக்கதல்ல;  வரம்பற்ற அணுக்களால் உருவானது. நிலம், நீர் போன்றவையும் அத்தன்மையனவே.

கோள்களையும் நட்சத்திரங்களையும், அவை போல்வனவற்றையும் விழுங்குவதும்[உள்வாங்குதல்] பின்னர் ஒரு காலக்கட்டதில் கக்குவதுமான[வெளியேற்றல்] பேரதிசயத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிற 'கருந்துளை', 'ஒன்று' மட்டுமே ஆக இருப்பது அல்ல. அதை ஆராய்ந்தறிந்து சொன்ன அறிவியல் அறிஞர்களே 'வெளி'யில் பல கருந்துளைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அனைத்துப் பொருள்களுக்கும் இயங்குதளமாக இருக்கிற பிரபஞ்சம்கூட 'ஒன்று' மட்டுமே என்றில்லாமல், 'பல'வாக இருப்பதாக  விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்[பிரபஞ்சம் 'ஒன்று அல்ல; 'பல'வும் அல்ல; எல்லையற்று/வரம்பற்று விரிந்து பரந்து கிடப்பது என்றும் சொல்லப்படுகிறது].

ஆக.....

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல், அண்ட வெளியில் அல்லது பிரபஞ்ச வெளியில்[இரண்டையும் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது என்பது புரியவில்லை] தோற்றம் தருகிற அல்லது, இயங்குகிற 'எந்த' ஒன்றும் 'ஒன்று' என்னும் எண்ணிக்கையில் அடங்குவதல்ல.

மேலே சொல்லியவற்றை ஒரு வரியில் சொன்னால்.....

 'எந்த ஒன்றும் ஒன்றாக இல்லை' என்பதே.

எந்த ஒன்றும் 'ஒன்று' என்று இல்லாத நிலையில், அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பதாக ஆன்மிகவாதிகளால் நம்பப்படும் 'கடவுள்' மட்டும் 'ஒன்று'[ஒருவர்] ஆக இருக்கிறது என்று சொல்வது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை' என்பது உறுதிப்படுத்தப்படுகிறது!

                                                                         *                *

"நீ கடவுள் என்று ஒருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படவில்லை" என்று நாத்திகர்கள் சொல்வதை வலியுறுத்திக்கொண்டிருப்பவன். அப்புறம் எதற்கு 'அவர் ஒருவரல்ல' என்னும் இந்த 'அறுவை' ஆராய்ச்சி?" -இது உங்களில் சிலரின் கேள்வியாக இருக்கக்கூடும்.

நல்ல கேள்விதான்! ஹி...ஹி...ஹி!!

==========================================================================================

*உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருந்தால் மன்னியுங்கள். பிழைபட ஏதும் சொல்லியிருந்தால் அலட்சியப்படுத்துங்கள்.

நன்றி!


திங்கள், 7 ஜூன், 2021

'சல்லாப' நடிகை 'சன்னி லியோன்' அவர்களுக்கு என் மனம் கொள்ளாத பாராட்டுகள்!!!

கொஞ்ச நேரத்துக்கு முன்னர்[நண்பகல் 12.45 மணி] NEWS18.COM காட்சி ஊடகத்தில் நான் காண நேர்ந்த ஒரு நிகழ்வு[படம் எடுக்க இயலவில்லை] என்னைப் பேரின்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்தப் பதிவின் தலைப்பின் மூலம் அது 'சல்லாப நடிகை' என்றழைக்கப்படும் 'சன்னி லியோன்' பற்றியது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இவர் திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நடிகை ஆவார்.

பாலுறவு[Pornography]ப் படங்கள் பலவற்றில் நடித்து உலகப் புகழ் பெற்றவர் இவர் என்பது  இணையத்தில் புழங்குவோரில் மிக மிக மிகப் பெரும்பாலோருக்குத் தெரியும்[அடியேனுக்குக் 'கேள்வி ஞானம்' மட்டுமே].

'கூச்சநாச்சமின்றி அம்மாதிரி 'ஆபாச'ப் படங்களில் நடிக்கும் இவரைப் போன்ற அழகிகள் காசுக்காக உடம்பை விற்பவர்கள்; உல்லாச வாழ்வில் மட்டுமே நாட்டம் கொண்டவர்கள்' என்பதே நம்மவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மற்ற நடிகைகள் எப்படியோ, அந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், கொரோனாவின் கோரத் தாண்டவம் காரணமாக, வயிற்றுப் பசியால் வாடும் ஏழைகள் பலருக்கு நம் சன்னி லியோன் உணவுப் பொட்டலங்கள் வழங்கிப்  பொதுத் தொண்டு செய்திருக்கிறார்[ஏற்கனவே இவ்வாறான பல நற்பணிகளைச் செய்திருப்பவர் இவர்].

காட்சி ஊடகத்தில் நான் கண்ட இந்தக் காட்சி என்னைக் கண்கலங்க[உண்மையாகவே] வைத்தது.

ஏதோவொரு விரும்பத் தகாத சூழலில் 'அந்த'த் தொழிலில் ஈடுபட்டதால், சன்னி லியோன் உடலளவில் களங்கப்பட்டிருக்கலாம். மனத்தளவில் அவர் 'சொக்கத் தங்கம்' என்பதே என் எண்ணமாகும். 

காணொலி:

https://youtu.be/w7AI3z3kwZw