புதன், 21 ஜூலை, 2021

'நரக வாசல்'!!!


'மரணத்திற்குப் பிறகு, புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கும், பாவம் செய்தவர்கள் நரகத்திற்கும் சென்று தத்தமக்குரிய வினைப்பயன்களை அனுபவிப்பார்கள்' என்று 'மகா ... பெரிய' மகான்களும் ஞானிகளும் சொல்லியிருக்கிறார்கள்.

போதுமான அளவிற்குப் புண்ணியம் செய்யாதவர்களுக்காக, ஒரு 'குறுக்கு வழி'யையும் காண்பித்து அவர்கள் அருள்பாலித்திருக்கிறார்கள். 

'வைகுண்ட ஏகாதசி தினத்தில் வைணவக் கோயில்களின் வடக்கு வாசல்(சொர்க்க வாசல்) வழியாகக் காட்சிதருவார் பகவான். அப்போது அவரைத் தரிசித்துப் புளகாங்கிதப்பட்டாலே சொர்க்கம் சேரலாம்' என்பதே அந்தக் குறுக்கு வழி.

மலையளவுக்குப் பாவங்கள் செய்திருந்தாலும், அவரைத் தரிசித்த அந்தக் கணப்பொழுதிலேயே அவை முற்றிலுமாய் நீங்கிவிடுமாம்!

சொர்க்கம் செல்வதற்கான குறுக்கு வழியாக, 'சொர்க்க வாசல்' அமையும் என்றால், 'நரகம்' செல்வதற்கும் ஒரு 'குறுக்கு வழி'[நரக வாசல்] இருந்துதானே தீரும். 

பெரும் பெரும் பாவங்களைச் சுமந்து திரிந்தாலும், சிலர்[பலராகவும் இருத்தல்கூடும்],  அரங்கனைப் பணிந்து போற்றிச் சொர்க்கம் செல்லுவதை வெறுக்கவும் செய்யலாம். நரகம் செல்வது 100% உறுதி என்பதால், இந்தப் பொல்லாத உலகில் மரணம் வரும்வரை காத்திருக்க விரும்பாமல், 'நரக வாசல்'இல் நுழைந்து பூத உடலுடன் விரைந்து நரகத்திற்குச் சென்றுவிட அவர்கள் ஆசைப்படலாம்.

எனவே, சொர்க்க வாசல்கள் கண்டறியப்பட்டது போல, எங்கெல்லாம் நரக வாசல்கள் இருக்கின்றன என்பதை, 'ஜக்கி வாசுதேவ்' போன்ற நடமாடும் கடவுள்கள் கண்டறிந்து சொல்வார்களேயானால், அது நம் மக்களில் ஒருசாராருக்குச் செய்த பெரும் சேவையாக அமையும்.

மனம் இரங்குவார்களா ஜக்கியும், அவரனைய பிற அவதாரங்களும்?!

====================================================================================

***சொர்க்கவாசல் பிறந்த கதை :

ஆழ்ந்த உறக்கத்தில் விஷ்ணுபகவான் இருந்தபோது, அவருடைய இரு காதுகளிலிருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். 'இந்த அசுரச் சகோதரர்களை அடக்க வல்லவர் விஷ்ணுபகவான் ஒருவரே' என்ற முடிவில் தேவர்கள் அவரிடம் முறையிட, பெருமாள் அரக்கர்களுடன் போர் புரிந்தார்; அவர்களைச் சரணடையச் செய்தார்.

'பகவானே... தங்களின் சக்தியால் உருவான எங்களுக்கு நீங்கள்தான் கருணை காட்ட வேண்டும்" என்று கேட்டு வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தை பெற்றார்கள். தங்களைப் போல் பலரும் இந்தப் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்று எண்ணி பெருமாளிடம் வேண்டினார்கள்.

"எம்பெருமானே.... தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது, தங்களைத் தரிசிப்பவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் நீக்கி முக்தி அளிக்க வேண்டும்." 

அவர்களின் வேண்டுகோள் ஏற்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது[https://www.facebook.com/542657935767949/posts/2291620617538330/]

                                          *  *  *

கீழ்க்காண்பது மனதைக் கலங்கடிக்கும் காணொலி!



செவ்வாய், 20 ஜூலை, 2021

'மாதர்'தம்மை இழிவு செய்யும் மா...'பாரதம்'!!!

'உலகில் பெண்களை நிரந்தர அடிமைகளாகக் கருதி, கொடுமைப் படுத்திப் பொல்லாங்கு செய்யும் ஆண்கள் நிறைந்த ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது' என்று தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவனம் நடத்திய[3 ஆண்டுகளுக்கு முன்பு] ஆய்வின் மூலம்  தெரிய வந்துள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகளின் பட்டியல்:

1.இந்தியா

2.ஆஃப்கானிஸ்தான்

3.சிரியா

4.சொமாலியா

5.சௌதி அரேபியா

6.பாகிஸ்தான்

7.காங்கோ குடியரசு

8.ஏமன்

9.நைஜீரியா

10.அமெரிக்கா

பெண்கள் தொடர்பான பிரச்சனைகளில் வல்லுநர்களாக இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், அரசு சாரா அமைப்புகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாம்.

***பெண் பிறப்புறுப்புச் சிதைவு, குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமணம், உடல் ரீதியான துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை போன்றவை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டு, கிடைத்த பதில்கள் மூலம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிப்பதாக அறியப்பட்டுள்ளது.

***'பாலியல் ரீதியான வன்கொடுமை, குடும்ப வன்முறை, யாரென்று தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பான வழக்குகளில் இந்தியாவில் உரிய நீதி கிடைப்பதில்லை' என்கிறது மேற்கண்ட ஆய்வு.

கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொள்வதிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது கடும் அதிர்ச்சி தரும் தகவலாகும்.

***வீட்டில் கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம் செய்வித்தல், பாலியல் விசயத்தில் அடக்கி ஆளுவது என்றிவற்றிலும் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.

பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடாக முதல் பத்து இடங்களில் இருக்கும் ஒரே மேற்கத்திய நாடு  அமெரிக்கா மட்டுமே என்கிறது 'தாம்ஸன் ராய்டர்ஸ்' நிறுவன ஆய்வு முடிவு.

ஆய்வு நிகழ்த்தி மூன்றாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அதே நிறுவனம் இப்போது அதே வகையிலான ஆய்வை நிகழ்த்துமேயானால்.....

பெண்குலத்துக்கு அநீதி இழைப்பதில் இப்போதும்கூட இந்தியாவே முதலிடம் பெற்றுச் சாதனை புரியும் என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!

பெண்ணினம் போற்றும் புண்ணிய பாரதம் வாழ்க! வாழ்க வாழ்கவே!!

https://www.bbc.com/tamil/india-44611857