சனி, 24 ஜூலை, 2021

கடவுள் சாட்சியாக.....

கடவுள் எதற்காக உயிர்களைப் படைத்தார்?

கீழ்க்காணும் காணொலியில் விடை இருக்கிறது.

காணொலி நிகழ்வைத் தொடக்கம் முதல் இறுதிவரை பார்த்துவிடுங்கள்.

அதீத இரக்க குணம் வாய்க்கப்பெற்றவர்கள் மனதைக் கல்லாக்கிக்கொள்ளுதல் மிக அவசியம்.

"நமக்கும் மேலான 'சக்தி'தான் நம்மை இயக்குகிறது; கட்டுப்படுத்துகிறது. அந்தச் சக்திதான் கடவுள்" என்று காலங்காலமாகச் சொல்லப்படுவதை நீங்கள் நம்புபவராக இருந்தால்.....

அந்தக் கடவுள் எத்தனைக் குரூரப் புத்தி உள்ளவர் என்பதை இந்தக் காணொலி மூலம் புரிந்துகொள்வீர்கள்.

2013ஆம் ஆண்டில், நான் எழுதிய இது தொடர்பான ஒரு பதிவு:

 தலைப்பு:         இந்தக் காட்டுமிராண்டியா கடவுள்?!

ஒரு காடு.

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்துகொண்டிருக்கிறது. கொடிய விலங்குகளால் ஆபத்து நேருமோ என்ற இயல்பான அச்சத்துடன் பார்வையை அலையவிடுகிறது.

அதைக் குறி வைத்திருந்த ஒரு சிறுத்தை அசுர வேகத்தில் சீறிப் பாய்கிறது. எதிர்ப்பட்ட ஆபத்தைக் குட்டிக்கு உணர்த்திவிட்டுத் தப்பி ஓடுகிறது மான். 

மான் தப்பியது. குட்டி, சிறுத்தையிடம் சிக்கியது. அகப்பட்ட மான் குட்டியைத்  தன் குட்டிகளிடம் சேர்க்கிறது சிறுத்தை.

தப்பிச் செல்ல முயலும் மான் குட்டியைச் 'செல்லக்கடி' கடித்தும், முன்னங் காலால் இடறிவிட்டுக் கீழே தள்ளியும் அவை விளையாடுகின்றன. தாய்ச் சிறுத்தையும்கூட, அதைக் கொல்லுவது போல் பாசாங்கு செய்து குலை நடுங்க வைக்கிறது. நீண்ட நேரம் இப்படி வதை செய்த பிறகுதான் அதை அவை இரையாக்கிக் கொள்கின்றன.

உயிரைக் காத்துக்கொள்ள நடத்தும் போராட்டத்தில், அந்த மான் குட்டி படும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா? அது அனுபவித்த துன்பம் எத்தனை கொடூரமானதாயிருக்கும்?

இந்தக் கொடூரக் காட்சியை நீங்கள் ‘டிஸ்கவரி’ சேனலில் பார்த்திருப்பீர்கள். இதற்கான உண்மை நிகழ்வைக் கடவுளும் பார்த்திருப்பார்தானே?

வேடிக்கை பார்த்துக்கொண்டு அவரால் எப்படிச் ’சும்மா’ இருக்க முடிந்தது?  அவர் மனம் என்ன கல்லா?

இம்மாதிரி எத்தனை எத்தனைக் கொடூரங்கள் அவர் படைப்பில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன?!

இவரையா, “அன்னையும் நீயே அப்பனும் நீயே”என்று புகழ்ந்து போற்றி வழிபடச் சொல்லுகிறார்கள்!!

“இதற்கெல்லாம் கடவுள் காரணமல்ல; பூர்வ ஜென்மத்தில்[கடந்த பிறவிகளில்] உயிர்கள் செய்த பாவம் காரணம்” என்று மனம் கூசாமல் கதைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் மனிதப் பிறவிகளா?!

இந்தப் பிறவியில் நேரும் துன்பத்திற்குப் போன பிறவியில் செய்த பாவம் காரணம் என்றால், அதைச் செய்ய அந்தப் பிறவியில் தூண்டியது யார்?[உயிர் தானாக எதையும் செய்யாதே. முதல் முறை செய்வதற்குக் கற்றுக் கொடுப்பவர் கடவுள் அல்லவா?]

இது பற்றிச் சிந்திக்கத் தெரிந்தவர்கள் கேள்வி எழுப்பியபோது, “கடவுள் ஒரு போதும் தூண்டமாட்டார். அவர் கருணையின் வடிவம். உயிர் வேறு ஆன்மா வேறு. வினை உயிரோடு சம்பந்தப்பட்டது. ஆனால், வினையின் பயனை  அனுபவிப்பது ஆன்மா. உயிர் அழியும். ஆன்மா அழியாது. அது இறைவனின் அங்கம்......” -இப்படிப் புரியாத தத்துவங்களைச் சொல்லிக் குழம்பி, கேள்வி கேட்பவரின் மூளையையும் குழப்பிச் சமாளித்தார்கள் ஆன்மிகவாதிகள்.

நாம்  கேட்கிறோம்: “இந்த மான் குட்டி கடந்த பிறவிகளில் தானாகவே பாவங்கள் செய்ததா?”

பதில் “ஆம்” என்றால்,  கருணைக் கடலான கடவுள் அச்செயலைத் தடுக்கவில்லையே, ஏன்?’

‘அதைச் செய்; இதைச் செய்யாதேன்னு யாரும் கடவுளுக்கு உத்தரவு போட முடியாது” என்கிறார்கள்.

“கடவுள் தானாகவே தடுத்திருக்க வேண்டும். ஓர் உயிர் பாவம் செய்தால், அதற்கான தண்டனையை, அடுத்த பிறவியில்[அறிந்திட வாய்ப்பில்லை] அறிவு வளர்ந்து மனமும் பக்குவப்பட்ட நிலையில் அனுபவித்தால் தவறில்லை. பிஞ்சுப் பருவத்திலேயே தண்டிப்பது அநியாயமில்லையா? இந்த அக்கிரமத்தைச் செய்யும் கடவுள், அல்லது அதை வேடிக்கை பார்க்கும் கடவுள் அரக்க குணம் கொண்டவரா? இல்லை, காட்டுமிராண்டியா?”

பதில் தருவார் யார்?

“இன்னும் ஒரே ஒரு கேள்வி. ஒரு பிறவியில் செய்யும் பாவத்திற்கு அந்தப் பிறவியிலேயே தண்டனை கொடுத்தால், செய்த பாவத்தைப் புரிந்துகொண்டு உயிர்கள் திருந்தி வாழ வாய்ப்பிருக்கிறது. அடுத்த பிறவியில் என்றால் அது சாத்தியம் இல்லையே. இது கூடவா கடவுளுக்குத் தெரியவில்லை?”

வெள்ளி, 23 ஜூலை, 2021

தமிழ் வளர்த்து, தமிழனாக வாழ்ந்து மறைந்த ஒரு பிராமணர்!!!


“நான் எழுதுவதற்காக வாழ்கிறேன். வாழ்வதற்காக எழுதவில்லை'' என அறிவித்து, தம் இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் குவித்தார் ஒரு பிராமணர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்,1895-ஆம் ஆண்டில், பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்த அவர் பெயர் வெ. சாமிநாத சர்மா; பன்மொழி வித்தகர்; 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.
இவர் செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்புவரை கல்வி பயின்றார். "உண்மையில் பள்ளிக்கூடத்தை விட்ட பிறகுதான் என் படிப்பு ஆரம்பமாயிற்று'' என்று தமது கல்வி வளர்ச்சியைப் பற்றிச் சொல்லிக்கொண்டவர்[விக்கிப்பீடியா]. 
"தாய் மொழியில் பயிற்சி இல்லாதவன், தாய் நாட்டுக்குச் சேவை செய்ய முடியாது. மொழியின்றி நாடு இல்லை. நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்கள், முதலில் மொழிச் சுதந்திரத்திற்காகவே பாடுபட்டார்கள்'' என்று தம் தாய்மொழிப் பற்று குறித்துப் பதிவு செய்துள்ளார்.
கடித இலக்கியம், குறுநாவல், சிறுகதைகள், வாழ்வியல், இதழியல், மொழிபெயர்ப்பு எனப் பல்துறை வழியே தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் சாமிநாத சர்மா, 1978-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.

இந்த அறிஞர் பற்றி மறைந்த கவியரசு கண்ணதாசன்:

‘உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி, தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இவரைப்போல் எவரும் முயன்றதில்லை. கதைப் புத்தகங்கள்கூட இரண்டாயிரத்துக்கு மேல் விற்காத காலத்தில் அறிவியல் நூல்கள் எழுதி அவஸ்தைப்பட்டவர்.

நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு.சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.

பஞ்சாங்கம் எழுதியிருந்தால் நல்ல ராயல்டி வந்திருக்கும். இவரோ விஞ்ஞானம் எழுதினார்.

சீனாவில் சியாங்கே ஷேக் ஆட்சி வந்தபோது, ‘புதிய சீனா’ எழுதினார்; ‘பிரபஞ்சத் தத்துவம்’ எழுதினார். பொது மேடையில் தோன்றி, ஒரு மாலைகூட வாங்கிக்கொள்ளாமல் காலமாகிவிட்டார். அவர்தான் வெ.சாமிநாத சர்மா.’