செவ்வாய், 28 செப்டம்பர், 2021

எளிதில் கிடைக்கும் இயற்கை 'வலி நீக்கி'கள்!

வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.

நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.

அதுவும் நாம் உண்ணும் உணவுப் பொருட்களே இயற்கை வலி நிவாரணிகள் என்பது ஆச்சரியமான விசயம். அவற்றைப் பற்றியே இக்கட்டுரை.

பல் வலி:

பல் வலி என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் வாட்டி வதைக்கும் உடல் உபாதை. அதற்குக் கிராம்பு சிறந்த நிவாரணியாகும்.

பற்களில் வலி உள்ள இடத்தில் கிராம்பைப் பொடி செய்து தடவ வலி குறைவதை உணரலாம். கிராம்பிற்குப் பதில் கிராம்பு எண்ணெயையும் வலி உள்ள இடத்தில் தடவலாம்.

காது வலி:

காது வலி ஏற்பட்டால் வெள்ளைப் பூண்டினைப் பயன்படுத்தலாம். வெள்ளைப் பூண்டு நுண்ணுயிர்களின் செயல்பாடுகளைக் குறைப்பதோடு அவற்றை அழிக்கவும் செய்யும்.

பூண்டை நசுக்கிப் பிழிந்த சாறு 2 துளி அளவு காதில் விடவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள்வரை செய்தால் காதுவலி குணமாகும்.

இரத்தக் காயம்:

இரத்தக் காயம் மற்றும் நாள்பட்ட வலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணியாகும். சிறிய மற்றும் நடுத்தர இரத்தக் காயம் ஏற்பட்டதும், சுத்தமான மஞ்சளைப் பொடி செய்து காயத்தில் தடவும்போது காயம் சீழ் வைக்காமல் இருக்கும்.

செரிமானம்:

நல்ல செரிமானத்திற்கு அன்னாசிப் பழம்(பைனாப்பிள்) மற்றும் பப்பாளிப்பழம் உதவும்.

உணவு உண்ட பின்பு கிராம்பினை வாயில் போட்டுச் சுவைத்தால், அமிலத்தன்மை அதிகரிப்பால் உண்டாகும் நெஞ்செரிச்சலைத் தவிர்க்கலாம். எனவேதான், சாப்பிட்டிற்கு பின்பு உண்ணும் பீடாக்களில் கிராம்பினை வெற்றிலையில் குத்தி வைத்திருப்பார்கள்.

மலச்சிக்கல்:

நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் செரிமானமின்மை ஆகியவற்றிற்குக் காலை உணவிற்கு முன்பு பாதி கப் அளவிற்கு வேக வைத்த பீட்ரூட்டை உண்டு நிவாரணம் பெறலாம்.

இஞ்சி வயிற்றுக்குச் சிறந்த உணவுப் பொருளாகும். அசௌரியமான வயிற்று வலிக்கு இஞ்சியையே நிவாரணப் பொருளாக நம் முன்னோர்கள் பராம்பரியமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

சளி, இருமல், தலைவலி:

கோடை வெப்பத்தினால் உண்டாகும் தலைவலிக்குத் தர்பூசணி சிறந்த தீர்வாகும். கோடையில் தினமும் தர்பூசணி உண்டால் நீர் இழப்பையும் தவிர்க்கலாம்.

சாதாரண சளி, இருமல், தொண்டைப் புண், தொண்டைக் கரகரப்பு ஆகியவற்றிற்கு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றினைச் கலந்து பருக வேண்டும். இது கோழையை அகற்றுவதோடு சளியினால் ஏற்படும் தொந்தரவுகளையும் நீக்கும்.

அன்னாசிப் பழச்சாறு இருமலுக்கு உண்ணும் சிரப்பினைப் போன்று ஐந்து மடங்கு சக்தி வாய்ந்தது. மேலும் அன்னாசிச் சாறு சளி மற்றும் காய்ச்சல் உண்டாவதைத் தடுக்கும்.

கட்டுப்படுத்த முடியாத அளவிற்குத் தொடர் இருமல் ஏற்படும்போது, உங்கள் கைகளை உங்கள் தலைக்கு மேல் உயர்த்தினால் இருமல் கட்டுப்படும்.

உடல் உள் உறுப்புக்கள்:

தினமும் மாதுளைச் சாற்றினை அருந்தினால் இதயம் பலப்படும். மேலும் இச்சாறு குறைந்த இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் சிறந்த தீர்வாக அமையும்.

இதயம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்திற்கு வெள்ளைப் பூண்டு சிறந்த நிவாரணியாகும். உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம், கரோனரி இதய நோய், தமனிகளின் தடிப்பு ஆகிய இதயம் சம்பந்தமான நோய்களைத் தவிர்க்க வெள்ளைப் பூண்டினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நுரையீரல்:

திராட்சையின் பெரும்பான்மையான சத்துக்கள் அதனுடைய தோலில் குவிந்துள்ளன‌. நுரையீலை வலுப்படுத்தவும், நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு காணவும் இது மிகவும் உதவுகிறது.

கணையம்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. அதே சமயம் கணையத்தில் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பினை 50 சதவீதம் குறைக்கிறது.

செல்கள்:

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் விட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான புதிய செல்களின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன.

நுண்ணியிர்க் கொல்லிகள்:

மஞ்சள், இஞ்சி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தேன் ஆகியவை இயற்கை நமக்கு வழங்கியுள்ள இயற்கை நுண்ணுயிர்க் கொல்லிகள் (Anti-Biotic) ஆகும்.

கல்லீரல்:

பீட்ரூட், காரட், கிரீன் டீ, ஆப்பிள், ப்ரொக்கோலி, எலுமிச்சை, வால்நட், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவகோடா, கீரைகள், வெள்ளைப் பூண்டு, மஞ்சள் ஆகியவை கல்லீரலைச் சுத்தம் செய்யும் இயற்கை உணவுப் பொருட்கள் ஆகும்.

உணவே மருந்தென உணர்வோம்! நலமுடன் வாழ்வோம்!!

=======================================================================================

நன்றி: எழுத்தாளர் வ.முனீஸ்வரன் அவர்கள் ['இனிது' இணைய இதழ்]

https://www.inidhu.com/%e0%ae%87%e0%ae%af%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#more-25596  -செப்டம்பர் 26, 2021 


திங்கள், 27 செப்டம்பர், 2021

தமிழ் வளர்க்கும் சீன அரசு!!!


இந்தியாவில் பல மொழிகள் இருக்கையில், சீனர்களில் கணிசமானவர்கள் தமிழ் மீது ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்பதும், தமிழ் கற்பதற்குச் சீன அரசு உதவித்தொகை வழங்குகிறது என்பதும் தமிழர்களாகிய நம்மைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற செய்தியாகும்.

சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழ் பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்திகொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதும் அறியத்தக்கது.

ஆர்வத்தால் தமிழ் கற்றதோடு, தமிழ் வளர்க்கும் பணியையும் சீனாவில் மேற்கொண்டுள்ள் சீன தேசத்துப் பெண்களைப் பேட்டி கண்டு, சுவையானதொரு பதிவைத் தமிழார்வலர்களுக்கு வழங்கியிருக்கிறார் சாராம் ஜெயராமன்[பிபிசி தமிழ்].

அவர், சீனாவின் 'யுன்னான் மின்சு' பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த் துறையைத் தொடர்புகொண்டு இது குறித்த தகவல்களைச் சேகரித்தார்.

அப்பல்கலைக்கழகத்தில் 2017ஆம் ஆண்டில் தமிழ்த்துறை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

'யுன்னான் மின்சு' பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதி[சீனப் பெயர் கிகி ஜாங்), "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலைப் பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார்.

"இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா?" என்று கேட்டபோது, "இந்தப் படிப்பிற்குச் சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்குப் பிறகு தமிழை விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களைக் கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். தமிழைப் படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்றார் நிறைமதி.

ஈஸ்வரி என்றழைக்கப்படும் Zhou xin 'பெய்ஜிங்' பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்க் கலாச்சாரத்தைச் சீன மக்களிடம் கொண்டு செல்வதே தனது நோக்கம் என்றும், உலகின் பழமையான தமிழ் மொழியைச் சீன மாணவர்கள் கற்க ஆர்வம் கொள்வது மகிழ்ச்சிகரமான செய்தியாகும் என்றும் பெருமிதப்படுகிறார் அவர்.

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றால் தன் பெயரை ஈஸ்வரி என மாற்றிக் கொண்டுள்ளார் Zhou Xin. பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் ஈஸ்வரி மற்றும் வீராசாமி ஆகியோர் தமிழ்ப் பேராசிரியர்களாக உள்ளனர். 

Zhou Xin என்னும் கொஞ்சும் தமிழ் பேசும் இந்தச் சீனப் பெண், தமிழ் நாட்டில் இன்றளவும் சிலரால் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் பேசும் தூய தமிழை நன்றாக உச்சரிக்கின்றார். இதன் மூலம்,  மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

ஈஸ்வரி சீனாவின் தேசிய ரேடியோவில் (CRI) தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். Communication university of china-வில் தமிழைச் சிறப்புக் கவனமாகக்கொண்ட mass communicationஇல் பட்டம் பெற்ற பிறகு தன் பெயரை ஈஸ்வரி என மாற்றியுள்ளார்.

பாண்டிச்சேரியில் உள்ள 'puduchery institute of linguistic and culture'இல் நடைமுறைத் தமிழ் மொழியைக் கற்க, சீன உதவித்தொகை ஆறு மாதங்களுக்கு( 2013-2014 ) ஈஸ்வரிக்கு வழங்கப்பட்டது. நடைமுறையில் பேசப்படும் தமிழுக்கும் தாம் பேசிய தமிழுக்கும் வேறுபாடுகள் இருப்பதால் பெய்ஜிங் வரும் தமிழ்ப் பிரபலங்களைப் பேட்டி எடுக்கச் சிரமப்பட்டதாக ஈஸ்வரி தெரிவித்து இருந்தார். 

சீனாவில் உள்ள பெய்ஜிங் வெளிநாட்டு மொழி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு தமிழ் மொழியில் இளங்கலைப் பட்டப்படிப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில், பெய்ஜிங், யூனான், ஷேன்டாங் உள்ளிட்ட பகுதியில் இருந்து 10 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் முனைவர் கலாதி வீராசாமி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பெய்ஜிங் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் பயிலும் மாணவர்களுக்குத் தமிழர்களின் பண்பாட்டையும்  கலாச்சாரத்தையும் கற்பிப்பதோடு, தமிழ் மொழியை எழுதுவது, உச்சரிப்பது, மொழிபெயர்ப்புச் செய்வது போன்றவையும் கற்பிக்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பிறகு மாணவர்களுக்குத் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கான பட்டம் வழங்கப்படும்.

2018-ல் லண்டனில் நடைபெற்ற சர்வதேச திருக்குறள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராசிரியர் ஈஸ்வரி தமிழில் தன் சொற்பொழிவை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது .


=======================================================================================

ஆதாரம்: https://www.bbc.com/tamil/global-46945186